கடலூரில் சுனாமி 21 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, கடலில் பால் ஊற்றி, மலர்தூவி மீனவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் எழுந்த சுனாமி பேரலைகள் தமிழக கடற்கரையை தாக்கி, ஆயிரக்கணக்கானோரை பலிவாங்கியது. கடலூர் மாவட்டத்தில் சுனாமி பேரலையில் சிக்கி 610 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், கடலூரில் சுனாமி பேரலையால் உயிரிழந்தவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் வெள்ளிக்கிழமை (டிச.26) கடைப்படிக்கப்பட்டது.
இதையொட்டி, கடலூர் முதுநகர் சிங்காரத்தோப்பில் உள்ள சுனாமி நினைவுத் தூணுக்கு சுனாமியில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மலர் வளையம் வைத்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்நாடு மீனவர் பேரவை மாவட்டத் தலைவர் சுப்பராயன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் ஊர்வலமாக சென்று கடல் மாதாவை வேண்டி கடலில் பால் ஊற்றியும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர். கடற்கரை மணலில் மெழுவர்த்தி ஏற்றி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அப்போது பெண்கள் உயிரிழந்தவர்களை நினைத்து துக்கம் தாங்காமல் கதறி அழுதனர். கடற்கரை மணலில் மெழுகுவர்த்தி ஏற்றியும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
சுனாமியால் இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கடலூர் மாவட்ட மீனவர்கள் யாரும் இன்று மீன்பிடி தொழிலுக்கு செல்லவில்லை. இதனால் திருப்பாதிரிப்புலியூர், மஞ்சக்குப்பம், முதுநகர், கிஞ்சம்பேட்டை ஆகிய இடங்களில் மீன் மார்க்கெட்டுகள் அடைக்கப்பட்டுள்ளன..
இதேபோல, கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் உள்ள சுனாமி நினைவுத் தூணுக்கு மலர் வளையம் வைத்து அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு சமூக அமைப்பை சேர்ந்தவர்கள், மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்நாடு மீனவர் பேரவையின் மாவட்ட தலைவர் எம். சுப்பராயன் தலைமையில் மாநில துணை தலைவர் எம் நாராயணன், பொதுநல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ். எம்.கே.ரவி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி தி.ச. திருமார்பன், கே.எம். தங்கமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.