சாலை விபத்தில் இறந்த திமுக உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு திமுக சார்பில் தலா ரூ.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 20 லட்சம் குடும்ப நிவாரண நிதியாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் அறிவித்தபடி, சாலை விபத்தில் மரணமடைந்த நாமக்கல் கிழக்கு மாவட்டம் கு.சரண்ராஜ் மற்றும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் எஸ்.பிரகாசம் ஆகிய இரண்டு குடும்பங்களுக்கும் திமுக சார்பில் தலா ரூ.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ.20 லட்சம் குடும்ப நிவாரண நிதியாக தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதுவரை 8 கழக உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு ரூ.80 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
மதுரையில் ஜூன் 1 ஆம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "திமுக உறுப்பினர்கள் யாராவது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் இறந்து போகும் சூழல் ஏற்பட்டால், இறந்த உறுப்பினரின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்கு குறைவாக இருந்தால் அந்தக் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ.பத்து லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும். அந்தப் பிள்ளைகளின் படிப்பு, குடும்பச் சூழலுக்கு இந்த நிதி உதவும் என்று அறிவித்திருந்தார்.
அந்த வகையில், கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி விபத்தில் மரணமடைந்த திண்டிவனம், இறையனூரைச் சேர்ந்த சரிதா ஜூன் 5 ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தைச் எம்.விக்னேஷ், கடலூர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த குப்புசாமி, ஜூன் 12 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த க.முத்தமிழ்செல்வன், ஜூலை 23 ஆம் தேதி ஈரோடு மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த வே.சரவணன், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கே.ஏ.ராம்பிரசாத் ஆகிய 6 குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கியதைத் தொடர்ந்து; ஜூன் 2 ஆம் தேதி நாமக்கல் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக உறுப்பினரான கு.சரண்ராஜ், நாமக்கல் - சேந்தமங்கலம் சாலை, வீசாணம் பிரிவு ரோடு அருகில் வாகன விபத்தில் சிக்கியும், செப்.6 ஆம் தேதி காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக உறுப்பினரான எஸ்.பிரகாசம், கீழ்அம்பி - காஞ்சிபுரம் சாலையில் இடதுபுறம் சென்றபோது வாகனம் மோதியும் சம்பவ இடத்திலேயே இவ்விரண்டு பேரும் உயிரிழந்துவிட்டனர்.
இந்த நிலையில், விபத்தில் சிக்கி உயிரிழந்த மேற்சொன்ன இருவரின் குடும்ப நிவாரண நிதியாக, தலா ரூ. பத்து லட்சம் வீதம் ஆக மொத்தம் ரூ. 20 லட்சத்திற்கான காசோலையினை, முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், நாமக்கல் கிழக்கு மாவட்டம் கு.சரண்ராஜ் மனைவி ச.ராசாத்தியிடமும் - காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் எஸ்.பிரகாசம் மனைவி பி. பிரியாவிடமும் சனிக்கிழமை (அக்.18) அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.
அப்போது, கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.