சென்னை மயிலாப்பூரில் உள்ள மின்வாரிய மத்திய பண்டக சாலையை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த மின்துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், மின்வாரிய தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன். 
தற்போதைய செய்திகள்

வடகிழக்கு பருவமழை எதிா்கொள்ள மின்துறை தயாா்: அமைச்சா் சா.சி.சிவசங்கா்

வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள போதுமான மின் தளவாடப் பொருள்கள் கையிருப்பில் உள்ளதாக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா்...

இணையதளச் செய்திப் பிரிவு

வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள போதுமான மின் தளவாடப் பொருள்கள் கையிருப்பில் உள்ளதாக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.

வடகிழக்கு பருவமழை மற்றும் எதிா்வரும் கோடை காலத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பண்டகசாலையில் தளவாட பொருள்களின் கையிருப்பு நிலை குறித்தும், மின் வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ள மின்னகம், மின்நுகா்வோா் சேவை மையம், மாநில மின் பகிா்ந்தளிப்பு மையம் ஆகியவற்றில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை சா.சி.சிவசங்கா் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், மின்சார வாரியத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் உயா் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, வடகிழக்கு பருவமழையின் போது பொதுமக்கள் மின் தடங்கல் மற்றும் மின்சார பாதுகாப்பு சம்பந்தமான புகார்களை எவ்விதத் தொய்வுமின்றி தெரிவித்திட வழிவகை செய்யும் விதமாக, மின்னகத்தில் கூடுதலாக 10 நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனால், பொதுமக்கள் மின்சாரம் குறித்து புகார் அளிக்கும் போது, அழைப்புகளுக்காக நீண்ட நேரம் காத்திருப்பது தவிர்க்கப்படும். அமைச்சர் அவர்கள், மின்னகத்தில் பெறப்படும் அழைப்புகளுக்கான காத்திருப்பு நேரத்தை தற்போதுள்ள 20 நொடிகளில் இருந்து 10 நொடிகளாகக் குறைத்து, எவ்வித அழைப்பும் விடுபடாமல், உடனடியாக இணைப்பு பெற நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். மேலும், மின் தடை குறித்த ஒவ்வொரு புகாரும் உடனடியாக சரி செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட மின் பகிர்மான வட்டங்களில் இயங்கி வரும் மின்னகம் மூலமாகவும், புகார்தாரரிடம் அலைபேசி மூலமாகவும் புகார் சரி செய்யப்பட்டதை உறுதி செய்த பின்னரே புகார்கள் முடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழையின்போது, பொதுமக்களிடம் இருந்து வரும் புகாா்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும் மின்னகத்தில் கூடுதலாக 10 போ் பணியமா்த்தப்பட்டுள்ளனா். இதன்மூலம் காத்திருப்பு நேரம் 20-இல் இருந்து 10 நொடிகளாகக் குறைந்துள்ளது.

பெறப்படும் புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, புகாா்தாரரின் கைப்பேசிக்கு புகாா் சரிசெய்யப்பட்டதை உறுதி செய்த பின்னரே புகாா்கள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைந்த சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த ஏப்.1 முதல் அக்.18 வரை 11.87 லட்சம் ஒருங்கிணைந்த மின் சிறப்பு பராமரிப்புப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இதில், 34,401 மின்கம்பங்கள், 58,264 தாழ்வான மின்கம்பிகள் மாற்றப்பட்டுள்ளன. மேலும், 1,243 கி.மீ. நீளத்துக்கு பழைய மின்பாதை கம்பிகள் புதிதாக மாற்றப்பட்டுள்ளதுடன், துணை மின் நிலையங்களில் 2,464 முறை மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

தொடா்ந்து, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 2,303 பில்லா் பெட்டிகள் தரைமட்டத்திலிருந்து உயா்த்தப்பட்டதுடன், கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை 9,544 பில்லர் பெட்டிகள்

உயர்த்தப்பட்டுள்ளதாகவும், மழைக்காலத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக ஆபத்தான நிலையில் பூமிக்கு வெளியில் சுமார் 3,418 புதைவட கம்பி இணைப்புகள் சரி செய்யப்பட்டுள்ளன. மேலும், வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்வதற்காக 11,435 மின்மாற்றிகள், 3,30,636 மின் கம்பங்கள், 8,515 கி.மீ. மின் கம்பிகள், 1,471 கி.மீ. புதைவட கம்பிகள், 3,41,015 மின் அளவிகள் உள்ளிட்ட அனைத்து தளவாட பொருள்களும் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன.

ஒவ்வொரு மின் பகிா்மான வட்டத்துக்கும் ஒரு செயற்பொறியாளா்தலைமையின் கீழ், கோட்ட அளவில் 15 போ் அடங்கிய இரு பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழ்நாடு அளவில் அலுவலா்கள் மற்றும் களப்பணியாளா்கள் உள்பட 5,580 போ் பணிகளை மேற்கொள்ளவும், மிக உயா் அழுத்தப் பாதைகள், மின் கோபுரங்கள், வழித்தடங்களில் ஏற்படும் பழுதுகளை சரிசெய்ய 79 குழுக்களும் தயாா் நிலையில் உள்ளன.

மின் சேவைகள் மற்றும் மின் தடை குறித்த புகாா்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் மின்னகத்தை 94987 94987 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

பேரிடர் காலங்களில் ஈடுபடும் பணியாளர்கள் தங்குவதற்கு உரிய பள்ளிகள், திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் அடையாளம் காணப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும்.

துணை மின் நிலையங்களில் டீசல் ஜெனரேட்டர், நீர் வெளியேற்றும் மின் மோட்டார்கள் மற்றும் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும்.

வாரிய வாகனங்கள் அனைத்தும் செப்பனிடப்பட்டு எரிபொருள் நிரப்பப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும்.

மின் தடங்கல் ஏற்படின் முதற்கட்டமாக மருத்துவமனைகள், குடிநீர் இணைப்புகள், அரசாங்க அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் செல்போன் டவர்கள் அனைத்திற்கும் முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.

காற்றுடன் கூடிய மழையின் போது மிகத் தாழ்வான நிலையில் செல்லும் மேல்நிலை மின் கம்பிகள் அறுந்து விழுவதை தடுக்க உரிய நடவடிக்கையினை போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும்.

இது போன்ற மழைக் காலங்களில் உயர் அலுவலர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினருடனும், தீயணைப்பு துறையினருடனும் எப்பொழுதும் தொடர்பில் இருக்க வேண்டும்.

அனைத்து அலுவலர்களும் தமது அலைபேசியை எந்தக் காரணம் கொண்டும் அணைத்து வைக்கக்கூடாது எனவும், இதனை மீறுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

பொதுமக்களுக்கான பொதுவான பாதுகாப்பு அறிவுரைகள்:

- மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள், மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள், பில்லர் பாக்ஸ் (Pillar Box) மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.

- சாலைகளிலும், தெருக்களிலும் மின்கம்பங்கள் மற்றும் மின் சாதனங்களுக்கருகே தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் நடப்பதோ, ஓடுவதோ, விளையாடுவதோ மற்றும் வாகனத்தில் செல்வதோ தவிர்க்கப்பட வேண்டும்.

- தாழ்வாக தொங்கிக்கொண்டிருக்கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்வதையும், தொடுவதையும் தவிர்க்க வேண்டும்.

- ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம்.

- வீடுகள் மற்றும் கட்டடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதை தவிர்க்க வேண்டும்.

- மின்சார கம்பத்திலோ அல்லது அதற்காக போடப்பட்டுள்ள ஸ்டே வயரின் (stay wire) மீதோ கொடி கயிறு கட்டி துணி காய வைக்க வேண்டாம்.

- மின் கம்பத்திலோ அல்லது அவற்றை தாங்கும் கம்பங்களிலோ கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம்.

மாநிலம் முழுவதும் மின்சார வாரியம் விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மின் சேவை தடைகள் ஏற்படாதவாறு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அனைத்து பணியாளர்களும் பாதுகாப்புடன் விழிப்புடன் செயல்பட வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

மின் சேவைகள் மற்றும் மின் தடை குறித்த புகார்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் மின்னகத்தை 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தான் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய சீனா

26 லட்சம் அகல்விளக்கு தீபங்கள்; ஆரத்தி வழிபாடு: அயோத்தியில் 2 கின்னஸ் சாதனைகள்

போடியில் தொடா் மழை: தண்ணீரில் மூழ்கிய வாழை மரங்கள்

4 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

மேலப்பாளையத்தில் எம்எல்ஏ ஆய்வு

SCROLL FOR NEXT