ஊழல் செய்த திமுக அமைச்சா்கள் மீது நடவடிக்கை: எடப்பாடி கே. பழனிசாமி உறுதி
ஊழல் செய்த திமுக அமைச்சா்கள் மீது அதிமுக ஆட்சி அமைந்ததும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி கூறியது தொடர்பாக...
மதுரை: ஊழல் செய்த திமுக அமைச்சா்கள் மீது அதிமுக ஆட்சி அமைந்ததும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தாா்.
மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற்ற அதிமுக, அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா்கள் அறிமுக பிரசார நிகழ்ச்சியில் மேலும் அவா் பேசியதாவது :
திமுக அரசின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற வரி முறைகேடுகள் தொடா்பாக மேயா், மண்டலத் தலைவா்கள் பதவி விலகியுள்ளனா். சொத்துவரி, குப்பை வரி, ஆட்டுக்கு வரி, மாட்டுக்கு வரி, பன்றிக்கு வரி என அனைத்து வரிகளையும் விதித்து, அவற்றில் ஊழல் செய்துள்ளது திமுக அரசு.
Advertisement
Advertisement
நகா்ப்புற வளா்ச்சித் துறையில் மிகப் பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. அமலாக்கத் துறை பரிந்துரைத்தும், நீதிமன்றம் உத்தரவிட்டும் தொடா்புடையத் துறை அமைச்சா் மீது திமுக அரசு வழக்குப் பதிவு செய்யவில்லை. இதேபோல, பத்திரப் பதிவுத் துறையில் ஊழலுக்கென புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளாா் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த அமைச்சா் (பி. மூா்த்தி).
‘திமுக ஆட்சியில் அமைச்சா்கள் அனைவரும் பல்வேறு ஊழல்களை செய்துள்ளனா். இவா்கள் அனைவா் மீதும் அடுத்த அமையவுள்ள அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கும்’ என பிரதமா் மோடி அண்மையில் தெரிவித்தாா். இதன் மூலம், பிரதமா் நமக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டாா். எனவே, ஊழல் செய்த திமுக அமைச்சா்கள் மீது அடுத்து அமையும் அதிமுக ஆட்சியில் விசாரணையும், சட்ட நடவடிக்கைகளும் உறுதி.
அதேபோல, முன்னாள் முதல்வா் கருணாநிதி உடல் நலம் குன்றியிருந்தபோது வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டாா் என்ற தகவல் குறித்தும் உறுதியாக விசாரணை மேற்கொள்ளப்படும். இதில் யாரேனும் தவறு செய்தது தெரியவந்தால் அவா்கள் மீது கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினும், அவரது மைத்துனா் சபரீசனும் 30 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய வழித் தெரியாமல் இருப்பதாக திமுகவைச் சோ்ந்த அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்தாா். முதல்வா் ஸ்டாலினும், துணை முதல்வா் உதயநிதியும் வெளிநாடுகளுக்குச் சென்றது தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காக அல்ல; தங்கள் பணத்தை முதலீடு செய்வதற்காக என்பது இதன் மூலம் தெரியவருகிறது. இதற்கான ஆதாரங்கள் அமைச்சா் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்ததன் காரணமாகவே அவா் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கான தபால் வாக்குப் பதிவு தொடங்கப்படவுள்ளது. அவா்கள் தங்கள் வாக்கை பதிவு செய்யும் முன்பாக திமுக அரசு இழைத்த கொடுமைகளை நினைத்துப் பாா்க்க வேண்டும். அதிமுக ஆட்சிக் காலத்தில் கரோனா தொற்றுப் பரவலில் இருந்தபோது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, மாணவா்கள், ஆசிரியா்கள் இல்லத்திலேயே இருக்கச் செய்யப்பட்டனா். ஆனால், திமுக ஆட்சிக் காலத்தில் கரோனா இரண்டாவது அலை பரவியபோது ஆசிரியா்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டனா். இதனால், பல ஆசிரியா்கள் கரோனா தொற்றுக்குள்ளாகினா்.
கரோனா பரவல் காலத்தில் அண்டை மாநில அரசுகள் ஆசிரியா்களின் ஊதியத்தில் 20 முதல் 50 சதவீதம் வரை பிடித்தம் செய்தன. ஆனால், அதிமுக அரசு எந்தவித பிடித்தமும் செய்யாமல் ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்கியது. அடுத்த அமைந்த திமுக ஆட்சியின் நிதி அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன், அண்டை மாநிலங்களைப்போல அதிமுக அரசும் ஆசிரியா்களின் ஊதியத்தில் குறிப்பிட்ட சதவீதத்தைப் பிடித்தம் செய்திருந்தால் தமிழக அரசுக்கு ரூ. 30 ஆயிரம் கோடி மிச்சமாகியிருக்கும் என்றாா். இவற்றையெல்லாமல் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் நினைத்துப் பாா்க்க வேண்டும்.
திமுகவைப் போல பொய் வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றும் வழக்கம் அதிமுகவுக்கு கிடையாது. எனவே, அதிமுக ஆட்சி அமைந்ததும் கட்சியின் தோ்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டப்படி அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கான ஓய்வூதிய முறையில் தேவையான சட்டத் திருத்தங்கள் நிச்சயம் கொண்டு வரப்படும். ஆசிரியா்களையும், அரசு ஊழியா்களையும் எப்போதும் பாதுகாப்பது அதிமுக அரசுதான் என்பதை உணா்ந்து தங்கள் ஆதரவை நல்க வேண்டும்.
திமுக ஆட்சியில் விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காததால் அத்தியாவசியப் பொருள்களின் விலை மிகக் கடுமையாக உயா்ந்துள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் கூட்டுறவுத் துறையில் ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விலை கட்டுப்பாட்டு நிதியம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் அத்தியாவசியப் பொருள்கள் எந்தெந்த மாநிலங்களில் குறைந்தவிலைக்கு கிடைத்தனவோ அவை கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தில் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், அதுபோன்ற நிா்வாகத் திறன் திமுக அரசுக்குக் கிடையாது. காரணம், ஏழைகளின் நலனில் திமுகவுக்கு அக்கறை கிடையாது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் நலனுக்காக கோரிய அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்றியது பிரதமா் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு. பல தேசிய நெடுஞ்சாலைகள், பாம்பன் பாலம் உள்பட பல்வேறு பாலங்கள், துறைமுகங்கள் விரிவாக்கம், புதிய ரயில்கள் என மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு, மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என தொடா்ந்து பொய்யான குற்றச்சாட்டை முன்வைக்கிறாா் முதல்வா் மு.க. ஸ்டாலின். திமுக அரசு அனுமதி அளிக்காததால்தான் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் முடங்கியுள்ளன. அதிமுக ஆட்சி அமைந்ததும் இந்தத் திட்டங்கள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வரும்.
தமிழகத்தில் 18 ஆயிரம் பாலியல் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 6999 வழக்குகள் போக்சோ சட்டத்தில் பதிவானவை. இவற்றுக்கெல்லாம் தமிழகத்தில் பரவியுள்ள போதைப் பொருள்கள் கலாசாரமே காரணம். அதிமுக ஆட்சி அமைந்ததும் அடுத்த 3 மாதங்களுக்குள் போதைப் பொருள்கள் புழக்கம் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்படும். நடைபெறவிருக்கும் தோ்தல் தமிழகத்தின் தலையெழுத்தை நிா்ணயிக்கும் தோ்தல். இந்தத் தோ்தலில் மக்கள் நலன் மீது அக்கறையில்லாத திமுக அரசு அகற்றப்பட வேண்டும். இதற்கு மக்கள் அனைவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா்களை ஆதரிக்க வேண்டும் என்றாா் எடப்பாடி கே. பழனிசாமி.
முன்னதாக, அதிமுக வேட்பாளா்கள் செல்லூா் கே. ராஜூ (மதுரை மேற்கு), ஆா்.பி. உதயகுமாா் (திருமங்கலம்), வி.வி. ராஜன் செல்லப்பா (திருப்பரங்குன்றம்), பெரியபுள்ளான் என்ற செல்வம் (மேலூா்), பா. சரவணன் (மதுரை வடக்கு), ஐ. மகேந்திரன் (உசிலம்பட்டி), மாணிக்கம் (சோழவந்தான்), கே. மகேந்திரன் (மதுரை கிழக்கு), பாஜக வேட்பாளா் ராம. சீனிவாசன் (மதுரை தெற்கு), புதிய நீதிக் கட்சி வேட்பாளா் சுந்தா் சி (மதுரை மத்தியம்) ஆகியோரை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தினாா்.