முகப்பு
தற்போதைய செய்திகள்

சமூக வலைதளங்களில் வைரலாகும் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி'! அதிர்ச்சியில்...?

'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி'க்கு எதிர்க்கட்சியாக 'தேசிய ஒட்டுண்ணி முன்னணி' என்ற தளமும் தொடங்கப்பட்டிருப்பது வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறித்து...

சமூக வலைதளங்களில் வைரலாகும் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி - எக்ஸ்
பகிர்:

சமூக ஊடகங்களில் இயங்கும் வேலையற்ற இளைஞர்களை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், "கரப்பான் பூச்சிகள், ஒட்டுண்ணிகள்" என்று விமர்சித்திருந்த நிலையில், 'மிதிக்க நினைத்தாலும் சாகாமல் உயிர் வாழும் கரப்பான் பூச்சிகள் நாங்கள்' என்று அபிஜீத் திப்கே இளைஞர்கள் தொடங்கிய 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' தளம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி'க்கு எதிர்க்கட்சியாக 'தேசிய ஒட்டுண்ணி முன்னணி' என்ற தளமும் தொடங்கப்பட்டிருப்பது வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆரம்பத்தில் நையாண்டி மற்றும் அரசியல் விமரிசனத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த விர்சுவல் அரசியல் கட்சி, "கரப்பான் பூச்சி ஜனதா கட்சி" என புதிய டிஜிட்டல் அரசியல் இயக்கமாக உருவெடுத்திருப்பது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ள சில நாள்களிலேயே ஒரு லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்களை பதிவு செய்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

மத்திய கிழக்கு போரால் சா்வதேச அளவில் பொருளாதார வளா்ச்சி குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு என இந்திய அரசியல், அடுத்தடுத்து

Advertisement

Advertisement

பரபரப்புகளை சந்தித்து வரும் நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மற்றும் தேசிய ஒட்டுண்ணி முன்னணி என்று தொடங்கப்பட்ட நையாண்டி கட்சிகள் மறுபுறம் கவனத்தை பெற்றுள்ளது.

'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி- சிஜேபி' மற்றும் 'தேசிய ஒட்டுண்ணி முன்னணி- என்பிஎப்' ஆகிய இரண்டும் அண்மையில் சமூக வலைதளங்களில் 30 வயது அபிஜீத் திப்கே இளைஞர்களால் உருவாக்கப்பட்ட நையாண்டி இயக்கங்கள் ஆகும். இவை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட உண்மையான அரசியல் கட்சிகள் இல்லை. நீதிமன்றம் கொடுத்த கருத்துகள் தான் இப்படி இரண்டு புதிய டிஜிட்டல் அரசியல் இயக்கங்கள் உருவாகக் காரணம் என்பதுதான் சிறப்பு.

கடந்த 15 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞர் நியமனம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, நாட்டின் சில இளைஞர்களின் செயல்பாடுகள் குறித்து நீதிமன்றம் தரப்பில் "கரப்பான் பூச்சிகள் மற்றும் சமூகத்தின் ஒட்டுண்ணிகள் போல" என்ற வார்த்தைகளை ஒப்பிட்டு அவர் பேசியதாக இணையத்தில் சர்ச்சை வெடித்தது. அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், போலிப் பட்டம் பெற்றவர்களை அப்படி குறிப்பிட்டதாக விளக்கம் அளித்திருந்தாலும், அது வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களை அவமதிப்பதாக பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தலைமை நீதிபதியின் விமர்சனத்தால் கோபமடைந்த இளைஞர்கள், அந்த வார்த்தையையே தங்களின் அடையாளமாக மாற்றி, கடந்த மே 16 ஆம் தேதி அபிஜித் திப்கே என்ற டிஜிட்டல் கிரியேட்டர் தலைமையில் "கரப்பான் பூச்சி ஜனதா கட்சி" என்ற நையாண்டி பக்கத்தை முகநூல் மற்றும் எக்ஸ் தளங்களில் தொடங்கினர். 'மிதிக்க நினைத்தாலும் சாகாமல் உயிர் வாழும் கரப்பான் பூச்சிகள் நாங்கள்' என்று தொடங்கப்பட்ட இந்த மீம்ஸ் பக்கம், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் சமூக ஊடக பயனர்கள் மத்தியில் வேகமாக ஆதரவைப் பெற்று வருகிறது. தொடங்கிய மூன்றாவது நாளிலேயே 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் உறுப்பினர்களாக இணைந்தனர். குறிப்பாக வேலைவாய்ப்பு பிரச்னை, சமூக அநீதி மற்றும் அரசியல் விரக்தி போன்ற விவகாரங்களை நகைச்சுவை மற்றும் கிண்டல் வழியாக பேசுவதால், இளைஞர்களிடையே இந்த இயக்கம் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இணையத்தில் மிகப்பெரிய அலையை உருவாக்கியதைத் தொடர்ந்து, அதற்குப் போட்டியாக மற்றொரு தரப்பு இளைஞர்கள் 'தேசிய ஒட்டுண்ணி முன்னணி' என்ற பக்கத்தை உருவாக்கினர். இதில் இன்னும் சுவாரஸ்யம் என்னவென்றால் நிஜ அரசியலில் இருப்பது போலவே, இணையத்திலும் ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி போன்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி நாங்களே என்று கூறிக்கொண்டு இந்த ஒட்டுண்ணி முன்னணி செயல்பட்டு வருகிறது.

தங்களை சோம்பேறிகள் மற்றும் வேலையில்லாதவர்களின் குரல் என்று அழைத்துக்கொள்ளும் இவர்கள் தங்களுக்கென கொள்கைகளையும் வெளியிட்டுள்ளனர். நீதிமன்ற விமரிசனத்தில் இந்த இயக்கங்கள் தோன்றியதால் நீதிபதிகள் ஓய்வுபெற்ற பிறகு அவர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி போன்ற எந்த அரசுப் பதவிகளும் வழங்கப்படக் கூடாது என்ற கொள்கையை பிரதானமாக வைத்துள்ளனர்.

கட்சி தாவும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 20 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்; பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும், மழைக்காலத்தில் ஆறுகளாக மாறும் சாலைகளை போடும் அதிகாரிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும், சிபிஎஸ்இ மறுமதிப்பீட்டு கட்டணங்கள் மற்றும் நீட் தேர்வு சர்ச்சை போன்றவை இவர்களின் கொள்கைகள்.

மேலும், வேலையில்லாதவர், எப்போதும் இணையத்தில் இருப்பவர், தொழில்முறை குறை கூறுபவர் போன்ற நகைச்சுவையான உறுப்பினர் தகுதிகளுடன் இந்தக் கட்சி தன்னை அறிமுகப்படுத்தி இருப்பது கட்சியின் இணையப் பிரபலம் அரசியல் வட்டாரங்களிலும் கவனம் ஈர்த்துள்ளது.

இந்த போலி கட்சிகளை உண்மையான அரசியல் கட்சியினரும் ஆதரித்து வருவதுதான் வேடிக்கையான ஒன்று. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹுவா மொய்த்ரா மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் ஆகியோர் தங்களை இந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆன்லைன் பக்கத்தில் இணைத்துக் கொண்டு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேநேரம் பாஜக உள்ளிட்ட ஆளுங்கட்சித் தரப்பினர் இந்த இயக்கத்தை கடும் விமரிசனம் செய்துள்ளனர்.

'மீம்ஸ்' போடும் பக்கமாகத் தொடங்கிய இந்த இயக்கம், தற்போது பிகாரில் உள்ள பாங்கிபூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் தங்களது முதல் வேட்பாளரை களம் இறக்க ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பாஜக மற்றும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் போன்ற நிஜக் கட்சிகளுக்கு எதிராக இது ஒரு டிஜிட்டல் எதிர்ப்புக் குரலாக மாறும் என்பது அரசியல் விமரிசகர்களின் பேச்சாக உள்ளது.

இந்த இயக்கம் நான்கு நாள்களில் இன்ஸ்டாகிராமில் 33 லட்சத்துக்கு மேற்பட்ட பின்தொடர்பாளர்களையும், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்த உறுப்பினர்களையும் பெற்று ஒரு அலையை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' தொடங்கிய அபிஜீத் 2020 முதல் 2023 வரை ஆம் ஆத்மி கட்சியின் சமூக ஊடகக் குழுவில் தன்னார்வலராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய தலைமை நீதிபதி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தால் இணையதளத்தில் உருவாகியுள்ள இந்த நையாண்டிய இயக்கம் உண்மையான அரசியல் இயக்கமாக மாறுமாக என்பது தெளிவாக இல்லை என்றாலும், இந்திய இளைஞர்களின் அரசியல் விரக்தி, வேலைவாய்ப்பு ஏமாற்றம் மற்றும் சமூக ஊடக எதிர்ப்பு கலாசாரத்தை வெளிப்படுத்தும் புதிய டிஜிட்டல் அரசியல் வடிவமாக பார்க்கப்படும் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' இளைஞர்களின் இணையப் புரட்சியா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

summary

'Cockroach Janata Party' Goes Viral on Social Media! In Shock...?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.