தேவைப்படுவோரைத் தேடிச்சென்று உதவும் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்!
மனிதநேயம் என்பது ஒருவரின் இருண்ட நேரத்தில் அவருடன் நிற்பதன் மூலமே அளவிடப்படுகிறது.
எஸ். குருவன்மீகநாதன்
சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பாக, மருத்துவமனை சிகிச்சைக்காக நீண்டகாலமாக போராடிவந்த பெண் ஒருவர், ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் தனது பிரச்னை தீர்வுக்கு வரும் என்று நினைத்திருக்க மாட்டார். மருத்துவ மாணவரான அவரது மகளுக்கு ஏற்பட்ட கடுமையான நோயால், அவர்களின் குடும்பம் மருத்துவச் செலவுகள், நிச்சயமற்ற தன்மை, உணர்ச்சிபூர்வமான சோர்வுக்குத் தள்ளப்பட்டனர்.
ஆனால், அவர்கள் வாழ்க்கையின் வழித்தடத்தின் மறுபுறத்தில் தெற்கு ரயில்வே ஊழியர் எம். சுரேந்திரன் (67) இருந்தார். அவர், பாதிக்கப்பட்ட சிறுமியின் நிலை குறித்து ஒரு செய்தித்தாளின் வாயிலாக அறிந்து, செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், அவருக்கும் சிறுமியின் குடும்பத்தினருக்கும் தனிப்பட்ட முறையில் பழக்கம் கிடையாது.
Advertisement
Advertisement
இருப்பினும், சிறுமியின் சிசிச்சைக்கான போராட்டத்தில் தனியாகப் போராட வேண்டிய அவசியமில்லை என சிறுமியின் தாயாருக்கு சுரேந்திரன் உறுதியளித்தார். சிறு நிதியுதவியாகத் தொடங்கிய ஒரு செயல்பாடு, விரைவில் அசைக்க முடியாத ஆதரவாகத் தொடர்ந்தது.
சுரேந்திரனை பொருத்தவரையில், மனிதநேயம் என்பது ஒருவரின் வருமானத்தின் அளவீட்டால் அளவிடப்படுவதில்லை. ஆனால், ஒருவரின் கடின காலத்தில் அவருடன் நிற்க வேண்டும் என்பதாலேயே அளவிடப்படுகிறது.
1989-இல் ஒரு தமிழ் நாளிதழில் ஒரு நிதியுதவி கோரிக்கையைப் படித்த பிறகு, ஒரு சிறுநீரக நோயாளிக்கு உதவுவதற்காக சுரேந்திரன் ரூ. 100 நன்கொடை அளித்தார்.
இந்தச் செயலே, இன்று ஆயிரக்கணக்கானோருக்கு வாழ்வளித்துள்ள ஒரு தொடர் மனிதநேய முயற்சியாக மெல்ல உருவெடுத்தது.
தன்னுடைய பயணத்தை நினைவுகூர்ந்து சுரேந்திரன் பேசியதாவது, "சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட ஒருவரைப் பற்றி ஒரு தமிழ் நாளிதழில் படித்தேன். உடனடியாக என் பங்களிப்பாக, சம்பளத்திலிருந்து ரூ. 100-ஐ கொடுக்க முடிவு செய்தேன். என்னுடன் பணிபுரியும் சக ஊழியர்களும் தலா ரூ. 10 கொடுத்தனர். அதுவே எங்களின் முதல் பங்களிப்பு" என்று தெரிவித்தார். தொகை சிறியதாக இருந்தாலும், இதுவே ஒரு பெரிய முன்முயற்சியின் தொடக்கத்தைக் குறித்தது.
காலப்போக்கில், சுரேந்திரனின் நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் நலம்விரும்பிகளும் ஏழை நோயாளிகளுக்கு, குறிப்பாக புற்றுநோய் மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்கத் தொடங்கினர்.
தொடக்கத்தில், அனைவரும் தங்களால் முடிந்த பங்களிப்பையே வழங்கினர். பின்னர், ஐந்தாவது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டவுடன், ரயில்வே ஊழியர்கள் நல்ல சம்பளம் பெற்றனர். இதனைத் தொடர்ந்து, பலரும் தங்கள் மாதாந்திர பங்களிப்பான நிதியுதவியை ரூ. 10-லிருந்து ரூ. 1,000-ஆகவும் ரூ. 2,000-ஆகவும் உயர்த்தினர்" என்று தெரிவித்தார்.
2000-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில், தங்களின் முயற்சிகளை மேலும் திறம்பட ஒருங்கிணைப்பதற்காக, 'சமூக நலனுக்கான ரயில்வே ஊழியர்கள் மன்றம்' என்ற ஓர் அமைப்பை நிறுவ சுரேந்திரன் முடிவு செய்தார்.
ஆதரவளிப்பவர்களின் வலையமைப்பு படிப்படியாக விரிவடைந்து, தேவைப்படுகிற ஆயிரக்கணக்கான குடும்பங்களைச் சென்றடைந்தது.
சுரேந்திரன் மற்றும் அவருடன் எஸ். கிருஷ்ணகுமார், ஆர். பாஸ்கரன் மற்றும் வீரராகவனும் இணைந்து, நன்கொடைகள் மூலம் திரட்டப்பட்ட சுமார் ரூ. 80 லட்சத்தை அளித்ததன் மூலம் இதுவரையில் 3,765 நோயாளிகளுக்கு உதவியுள்ளனர்.
தொடர்ந்து, பல ஆண்டுகளாக, இதயத்தையே துளைக்கும் பல நிகழ்வுகளையும் சுரேந்திரன் செய்திருக்கிறார். அத்தகைய சம்பவத்தில் ஒன்றான, கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒரு பெண், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது இளம் வயது மகனுக்காக சுரேந்திரனிடம் உதவி கோரினார்.
இந்தச் சம்பவத்தை சுரேந்திரன் நினைவு கூர்ந்தபோது, "சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பெண்ணிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவரின் 10 வயது மகன் ஒரு தனியார் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பெற்றுவருவதாகக் கூறினார். அங்கு, புற்றுநோய் சிகிச்சைக்காக 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ரத்த தானம் செய்பவர்களுடன் நிதியுதவியும் கோரினார்" என்று தெரிவித்தார்.
அந்த சமயத்தில் அவரால் குறிப்பிட்ட அளவில் மட்டுமே நிதியுதவி வழங்க முடிந்தாலும், ரத்த தானம் செய்பவர்களின் வலையமைப்பை உருவாக்கி, அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு அந்தப் பெண்ணுக்கு சுரேந்திரன் அறிவுறுத்தினார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் அந்தப் பெண்ணை சுரேந்திரன் தொடர்புகொண்டபோது, ரத்த தானம் செய்பவர்களின் வலையமைப்பை உருவாக்கி, தனது மகனுக்கு மட்டுமின்றி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மற்ற 7 குழந்தைகளுக்கும் ரத்தத்தை அந்தப் பெண்ணால் ஏற்பாடு செய்ய முடிந்ததை சுரேந்திரன் அறிந்து கொண்டார்.
இன்றும்கூட, கடுமையான நோயுடன் போராடும் மக்களுக்கு சுரேந்திரன் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறார். சமீபத்தில், ஒரு தனியார் நிறுவனத்தில் பாதுகாப்புக் காவலராகப் பணிபுரியும் இ. முரளிதரனின் 30 வயது மகனுக்குத் தேவைப்பட்ட டயாலிசிஸ் சிகிச்சைக்காக சுரேந்திரன் நிதியுதவி வழங்கி உதவினார்.
பல ஏழைக் குடும்பங்களும், விழிப்புணர்வு இல்லாமை, தாமதமான மருத்துவ உதவி மற்றும் நிதி சம்பந்தமான கட்டுப்பாடுகள் காரணமாக வெளியில் தெரியாமல் போராடி வருவதாக சுரேந்திரன் கூறினார்.
பாதிக்கப்படும் குடும்பங்களைச் சரியான நேரத்தில் அடைவதை உறுதிசெய்ய மாநில, மத்திய அரசுகளின் வலுவான தலையீடு அவசியம் என்றும் அவர் கூறுகிறார்.
தெற்கு ரயில்வேயிலிருந்து ஓய்வுபெற்ற சுரேந்திரன், இன்று தன் வீட்டின் மொட்டை மாடியில் நின்று, தங்கள் இலக்குடன் லட்சக்கணக்கானோரை ஏற்றிச் செல்லும் ரயில்களைப் பார்த்து, மனிதநேயத்தில் நீடித்த அர்ப்பணிப்பால் வழிநடத்தப்படும் தன் வாழ்வுக்கும் ஓர் இலக்கு இருப்பதாக அவர் கூறுகிறார்.
தமிழில் - மோ. சக்திவேல்