முகப்பு
செய்திகள்

இப்படித்தான் வளர்ந்தது... கோரல் டிரா! 

கோரல்டிராவைவிட்டு விலகாமல் தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் அதிகமாகவே உள்ளனர். காரணம் கோரல்டிரா ஓர் அருமையான வரைகலை மென்பொருளாகும்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:30 PM
பகிர்:

பத்து பக்கங்களில் எழுத்தால் விவரிப்பதை ஒரு படத்தின் மூலம் சொல்லிவிடலாம். அந்த வகையில் நமக்குத் தேவையான படங்களை உருவாக்குவதற்காக, கணினிகளில் விண்டோஸ் சூழ்நிலையில் முதன் முதலாக உருவாக்கிக் கொடுக்கப்பட்ட மென்பொருளே கோரல்டிரா.  பெயருக்கு ஏற்றாற்போல, வெக்டார் வகைப் பட உருவாக்கத்திற்கு இந்த மென்பொருளின் பயன்பாடு மிக அதிகமாகும். பல சிறப்புச் செயல்பாடுகளை முதன் முதலாக அறிமுகம் செய்த வகையில் இந்த மென்பொருள் முதல் நிலையில் உள்ளது எனலாம். விண்டோஸில் செயல்படும் ஐபிஎம் வகை கணினிகளில் செயல்படும் விதமாக உருவாக்கப்பட்ட முதல் மென்பொருள் இது.

படம் வரைவது, பக்க வடிவமைப்பு செய்வது, ராஸ்டர் வகைப் படங்களை உருவாக்குவது, மாற்றுவது போன்ற அனைத்துச் செயல்களையும் செய்து முடிக்கத் தேவையான மென்பொருள்கள் அடங்கிய தொகுப்பாக இது வெளிவந்தது. எழுத்துருக்களைப் பார்வையிட, பதிவு செய்ய, நீக்க உதவும் ஃபான்ட் மேனேஜர் என்ற வசதியுடன் கிடைத்த முதல் மென்பொருள். தற்போது இதன் 18வது பதிப்பு பயன்பாட்டில் உள்ளது. இதன் தொடக்கம் முதல் தற்போது கிடைக்கும் பதிப்பு வரையிலும் கொடுக்கப்பட்ட புதிய வசதிகளை இங்கு காணலாம்.

கோரல்டிரா 1.0  1987 இல் முதன் முதலாக விண்டோஸ் சூழலில் செயல்பட்ட முதல் வரைகலை மென்பொருள் என்ற வகையில் வெளிவந்த இதில் வெறும் 9 கருவிகளும் 6 மெனுக்களும் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தன. 1.44 அளவிலான 7 பிளாப்பிகளில் கொடுக்கப்பட்ட இந்த மென்பொருள் அன்றையதினம் ஓர் அதிசயமாகவே கருதப்பட்டது.

கோரல்டிரா 2.0  கோரல்டிரா முதல் பதிப்பு வெளிவந்து நான்கு வருடங்களுக்குப் பின் 1991இல் கொடுக்கப்பட்டது. பிரிண்ட் மெர்ஜ் என்ற எழுத்துக்களையும் படங்களையும் இணைத்து அச்சில் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. வரைகலையின் சிறப்பு செயல்பாடுகளான என்வலப், பிளெண்ட், எக்ஸ்ட்ரூஷன் மற்றும் பெர்ஸ்பெக்டிவ் ஆகிய செயல்பாடுகள் அறிமுகம் செய்யப்பட்டது  இந்தப் பதிப்பிலிருந்துதான்.

கோரல்டிரா 3.0  மறுவருடமே கோரல்டிரா 3வது பதிப்பு வெளியிடப்பட்டது. விண்டோஸில் தனித்து இயங்கும் திறனுடன் உருவாக்கப்பட்ட வரைகலை மென்பொருளாக கோரல்டிரா உருவெடுத்தது இந்தப் பதிப்பிலிருந்துதான். அத்துடன் ராஸ்டர் வகைப்படங்களைக் கையாள்வதற்காக கோரல் போட்டோ பெயின்ட் என்ற தனி மென்பொருள் உருவாக்கப்பட்டு, இந்த கோரல்டிரா 3.0 தொகுப்பிலேயே கொடுக்கப்பட்டது. 

கோரல்டிரா 4.0  ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு 1993 இல் இந்தப் பதிப்பு வெளியிடப்பட்டது. முதல் முறையாக ஒன்றிற்கு மேற்பட்ட, 999 பக்கங்களை இணைத்துக் கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்தப் பதிப்பிலேயே பிரித்து நகர்த்தி வைக்கும் டூல் பாக்ஸ் கொடுக்கப்பட்டது.

கோரல்டிரா 5.0 வண்ணங்களை மேலும் முழுமையாக, சரியாகக் கையாளும் வசதி 1994இல் வெளிவந்த இந்தப் பதிப்பில் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் ஸ்கேனர், பிரிண்டர் மற்றும் மானிட்டர் ஆகியவற்றில் ஒன்றுபோன்ற நிறம் தெரிவதற்கு வசதி கிடைத்தது. அத்துடன் போஸ்ட் ஸ்கிரிப்ட் மற்றும் ட்ரூ டைப் ஃபான்ட்களைக் கையாளுவதற்கும் வசதி தரப்பட்டது. வெக்டார் வகையிலான அனிமேஷன் படங்களை உருவாக்கும் தனி மென்பொருள் இந்தப் பதிப்பில் மட்டும் தரப்பட்டிருந்தது.

கோரல்டிரா 6.0  விண்டோஸ் 95 பதிப்பு வெளியிடப்பட்ட அதே நாள் கோரலின் இந்த 6 ஆவது பதிப்பும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். முதல் முறையாக 32 பிட் அடிப்படையில் கோரல் செயல்படும் வசதி கொடுக்கப்பட்டது. கிராப் பேப்பர் கருவி அறிமுகம் செய்யப்பட்டது. அதுவரையிலும் கோரல் டிராவில் பக்கத்தின் அளவு அதிக பட்சமாக 35 அங்குல நீளம், 35 அங்குல அகலம் வரையிலுமே உருவாக்கும் நிலையிலிருந்தது. இந்தப் பதிப்பிலிருந்து 150 அடிக்கு 150 அடி அளவு வரையிலும் பக்கத்தை அதிகபட்சம் உருவாக்கும் வசதியும் கொடுக்கப்பட்டது.

கோரல்டிரா 7.0  கோரல்டிராவில் பெருமளவில் பயன்படும் இன்டராக்டிவ் புராப்பர்ட்டி பார் இந்தப் பதிப்பிலிருந்துதான் அறிமுகம் செய்யப்பட்டது. எழுத்துப் பிழைகளைக் கண்டுபிடித்துச் சரிசெய்யும் ஸ்பெல் செக்கர், தெசாரஸ் மற்றும் கிராமர் செக்கர் வசதிகள் கொடுக்கப்பட்டன. 1997இல் அறிமுகம் செய்யப்பட்ட இந்தப் பதிப்பிலிருந்தே, இன்டராக்டிவ் ஃபில், பிளெண்ட் டூல், டிரான்ஸ்பரன்சி டூல், நேச்சுரல் பென் டூல் ஆகிய கருவிகள் கிடைத்தன. வெக்டார் வகைப் படங்களை கோரல்டிராவிலேயே ராஸ்டர் வகைப்படமாக மாற்றும் வசதியும் இந்தப் பதிப்பிலேயே சேர்க்கப்பட்டது.

கோரல்டிரா 8.0  இன்டராக்டிவ் ட்ராப் ஷேடோ, ஸிப்பர் மற்றும் ட்விஸ்டர் கருவிகள் 1998 இல் வெளியிடப்பட்ட இந்தப் பதிப்பிலேயே அறிமுகம் செய்யப்பட்டன. மேலும் மல்டிபிள் ஃபைல் இம்போர் வசதியும் கொடுக்கப்பட்டது.

கோரல்டிரா 9.0  கிராபிக்ஸ் சூட் என்ற பெயரில் இந்தப் பதிப்பு 1999 இல் வெளியிடப்பட்டது. பல வகையான நிற முறைகளை திரையில் நிறுத்தி பயன்படுத்த மல்டிபிள் கலர் பேலட்ஸ் வசதி அறிமுகம் செய்யப்பட்டது.

கோரல்டிரா 10.0: டஈஊ வகையாக மாற்றிப் பதிவு செய்வது எளிமைப்படுத்தப்பட்டு கொடுக்கப்பட்டது. பேஜ் ஷார்டர் வசதியும் அதன் மூலம் பக்கங்களை மிக எளிதாக நகர்த்தி நிறுத்தும் வசதியும் கொடுக்கப்பட்டன. கலர் மேனேஜ்மென்ட் எளிமைப்படுத்தப்பட்டு புதிய டயலாக் பாக்ஸ் மூலம் கொடுக்கப்பட்டது.

கோரல்டிரா 11.0: ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு 2002 இல் இந்தப் பதிப்பு வெளியிடப்பட்டது. புதிதாக சிம்பள்ஸ் உருவாக்கி பயன்படுத்தும் வசதி இந்தப் பதிப்பிலிருந்தே அறிமுகம் செய்யப்பட்டது.

கோரல்டிரா 12.0: 2004இல் அறிமுகம் செய்யப்பட்ட இந்தப் பதிப்பில் டெக்ஸ் அலைன்மென்ட் வசதி மேம்படுத்தப்பட்டது. டைனமிக் கைட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. ஒருங்குறி எழுத்துருக்களைக் கையாளும் வசதியும் தரப்பட்டது.

கோரல்டிரா எக்ஸ்3: 2006இல் வெளியிடப்பட்ட இந்தப் பதிப்பிலிருந்துதான் எக்ஸ்3 என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. அதாவது பதின்மூன்று என்பது பத்து3 என்று குறிப்பிடும் ரோமன் எழுத்தான எக்ஸ்3 என்று குறிப்பிடத் தொடங்கினார்கள். கோரல்ட்ரேஸ் வசதி மிக அதிக அளவில் மேம்படுத்தப்பட்டு தரப்பட்டது. இதனால் பிட்மேப் வகையிலான, ராஸ்டர் வகைப் படங்களை மிக எளிதாக ட்ரேஸ் செய்து வெக்டார் வகைப்படமாக மாற்றிக் கொள்ள முடிகிறது. அதுமட்டுமல்லாது, வெக்டார் வகைப் படங்களையும் நேரடியாக, தேவையான அளவிற்கு எளிதாக வெட்டிக் கொள்ளும் க்ராப்பிங் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டது.

கோரல்டிரா எக்ஸ்4: முதல் முறையாக

சந்தையின் தேவை கருதி விண்டோஸ் விஸ்டாவின் சான்றிதழுடன் இந்தப் பதிப்பு 2008ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இன்டராக்டிவ் டேபிள், பல புதிய ஃபைல் வகைகளைக் கையாளுதல், பேஜ் லேயர்ஸ் போன்ற வசதிகளுடன் 300 வகையான கேமராக்களிலிருந்து கிடைக்கும் கேமரா ரா வகைப்படங்களை ஏற்கும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டன.

கோரல்டிரா எக்ஸ்5: விண்டோஸ் 7ஆவது பதிப்பில் டச் ஸ்கிரீன் சூழலில் செயல்படும் விதமாக மேம்படுத்தப்பட்ட பதிப்பாக 2010ஆம் ஆண்டில் இது வெளியிடப்பட்டது. துல்லியமான நிறங்கள் கிடைப்பதற்காக நிற முறை மேலும் மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது. வலைதள வடிவமைப்பிற்கு பயன்படுத்தும் விதமான பல வசதிகளும், வெப் அனிமேஷன் முறையும் இந்தப் பதிப்பிலிருந்து அறிமுகம் செய்யப்பட்டன.

கோரல்டிரா எக்ஸ்6: 2012இல் வெளியான இதில் நமது விருப்பப்படியான, தடையற்ற நிலையில் வடிவமைப்பை உருவாக்க பல வசதிகள் மேம்படுத்தப்பட்டுத் தரப்பட்டன. குறிப்பாக 64 பிட் சூழலில் செயல்படும் விதமாக கோரல்டிரா உயர்வுபடுத்தப்பட்டது.

கோரல்டிரா எக்ஸ்7: மேகக் கணினி தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் எங்கிருந்தும் நமது கோரல்டிரா ஃபைல்களைப் பெறுவதும், மாற்றுவதும், பயன்படுத்துவதும் எளிதாக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தப் பதிப்பில் க்யூஆர் கோட் சிறப்பான முறையில் உருவாக்க வசதி தரப்பட்டது. இந்தப் பதிப்புடன் 2000 உயர்தரமான புகைப்படங்கள், நூற்றுக்கணக்கான ஆயத்த நிலை வேலைகள், வரைபடங்கள், எழுத்துருக்கள் உள்ளிட்டவை இணைப்பாகக் கொடுக்கப்பட்டன.

கோரல்டிரா எக்ஸ்8: விரைவாகவும், தொல்லைகள் இல்லாத வகையிலும், துல்லியமான நிறங்களைப் பெறும் விதத்திலும் பல வகைகளில் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. ஃபான்ட் மேனேஜர் பல வசதிகளுடன் கொடுக்கப்பட்டது. விண்டோஸ் 10இல் செயல்படும் விதமாகவும், புதிய எச்டி மானிட்டர்களில் 4கே சூழலில் படங்கள் துல்லியமாகத் தெரியும்விதத்தில் இந்தப் பதிப்பு இந்த ஆண்டு வெளியிடப்பட்டு தற்போது சந்தையில் கிடைக்கிறது.

வெக்டார் வகைப் படங்கள் உருவாக்கத்தில், தனது போட்டியாளரான அடோபி நிறுவனத் தயாரிப்புகளுக்கிடையே இன்றும் சந்தையில் நிலைத்து நிற்கிறது என்றால், இதனது சிறப்புத் தன்மைகள் மட்டும் காரணமல்ல.

முதன் முதலாக இந்தியாவில், ஐபிஎம் வகைக் கணினிகளில் பயன்படுத்தப்பட்ட மென்பொருளாகவும் இது வந்ததேயாகும்.

முதல் நாள் முழு வடிவமைப்பையும் முடித்து முறையாக சேவ் செய்து எக்ஸிட் செய்திருந்தாலும், அடுத்த நாள் துவக்கும்போது வெறும் வெற்றுப் பக்கத்தைக் கொடுப்பது, வடிவமைப்பு செய்து கொண்டிருக்கும்போதே ஏதோ காரணத்தால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு கணினி முழுவதுமாக அணைந்துவிட்டால், ஃபைல் முழுவதுமாக சேதமடைவது, பேக்கப் ஃபைல் உருவாக்கப்பட்டிருந்தாலும் அது பல நேரங்களில் பயனளிக்காமல் போவது, மானிட்டரில் காட்டப்படுவதற்கும், அச்சில் கிடைப்பதற்குமான நிற அமைப்பில் பெரும் வேறுபாடு இருப்பது, ராஸ்டர் வகைப் படங்களைப் பயன்படுத்துவதால் ஃபைலின் சைஸ் பெரியதாகப் போவதும் அதனால் அவற்றை மின்னஞ்சல் வழியே அனுப்புவதில் தடை ஏற்படுவது, புதிய பதிப்புகளை முழுவதுமாக செயல்படுத்த அதிக நேரம் தேவை போன்ற பற்பல குறைபாடுகள் இன்று வரையிலும் தீர்க்கப்படாமலேயே இருந்தாலும் கோரல்டிராவைவிட்டு விலகாமல் தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் அதிகமாகவே உள்ளனர். காரணம் கோரல்டிரா ஓர் அருமையான வரைகலை மென்பொருளாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.