ஜேம்ஸ்பாண்டை கலங்கடித்த இந்திய பான் மசாலா விளம்பரம்!
’பான் பஹர்’ நிறுவனத்தார் தன்னுடைய அனுமதி இன்றி தனது புகைப்படத்தை அவர்களது பான் மசாலா விளம்பரத்தில் பயன்படுத்தி இருப்பது முற்றிலும் கண்டிக்கத் தக்கது
ஜேம்ஸ்பாண்ட் சீரிஸ் படங்களின் ரசிகராக இருந்தால் நிச்சயம் பியர்ஸ் பிராஸ்னனைத் தெரிந்தே இருக்கும். பாண்ட்... ஜேம்ஸ் பாண்டாக பல பாண்ட் சீரிஸ் திரைப்படங்களில் கலக்கியவர் இப்போது கலக்கத்தில் இருக்கிறாராம். ”பான் பஹர்” இந்திய பான் மசாலாக் கம்பெனி ஒன்றூ பிராஸ்னனின் புகைப்படங்களை தங்களது பிராண்ட் பான் மசாலாக்களை இந்தியா மற்றும் சர்வ தேச சந்தைகளில் பிரபலப் படுத்தப் பயன்படுத்தி விட்டதாம். இதனால் 007 ஜேம்ஸ் பாண்டாக நடித்து தான் சேர்த்து வைத்த புகழும் இமேஜும் கெட்டுக் குட்டிச் சுவராகி விடக் கூடுமோ என்று பிராஸ்னன் மிகுந்த கவலையில் இருக்கிறாராம்.
முன்னதாக தனது குடும்பத்தில் தனது முதல் மனைவி, மகள் மற்றும் எண்ணற்ற நண்பர்கள் பலரையும் கூட கேன்சரில் பறிகொடுத்து அந்த நோயின் கொடுமையை கண் கூடாகக் காணும் வாய்ப்பைப் பெற்ற தான் கேன்சரை உண்டாக்குவதில் முதன்மைக் காரணியாக இருக்கும் புகையிலை கொண்டு தயாரிக்கப்படும் பான் மசாலா விளம்பர ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியுமா? அந்த குறிப்பிட்ட ’பான் பஹர்’ நிறுவனத்தார் தன்னுடைய அனுமதி இன்றி தனது புகைப்படத்தை அவர்களது பான் மசாலா விளம்பரத்தில் பயன்படுத்தி இருப்பது முற்றிலும் கண்டிக்கத் தக்கது என்றும் உடனடியாக தனது புகைப்படங்களை சம்மந்தப்பட்ட நிறுவனத்தார் அகற்றியே ஆக வேண்டும் என்றும் பிராஸ்னன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து இப்படிப்பட்ட விளம்பரத்தில் தனது தோற்றம் பயன்படுத்தப்பட்டது தன்னுடைய சர்வ தேச ரசிகர்கள் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்கும் தானே பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் பிராஸ்னன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement