பள்ளி மாணவர்களிடையே பண மேலாண்மை குறித்த புரிதலுக்கு அரசுத் தேர்வு!
பள்ளி மாணவர்கள் பணத்தை எப்படிக் கையாள்வது என்று தெரிந்திருக்க வேண்டும்.
பணத்தைச் சம்பாதிப்பது, செலவழிப்பது, சேமிப்பது என்பதில் புதிது எதுவுமில்லை. ஆனால் பள்ளி மாணவர்கள் பணத்தை எப்படிக் கையாள்வது என்று தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு ஒரு முயற்சியை மேற்கொள்கிறது என்பது புதிது.
நிதி கல்வி அல்லது அறிவு என்பது ஒவ்வோர் மாணவரின் வாழ்க்கையில் முழுமையான முன்னேற்றத்துக்கு அத்தியாவசியத் திறன் என மத்திய அரசு நம்புகிறது. இந்த இலக்கை நோக்கிய அரசின் முதல்படியாக அமைந்ததுதான் நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் தேசிய நிதி அறிவு மதிப்பீட்டுத் தேர்வு (National Financial Literery Assessment Test-NFLAT).
தேசிய அளவில் பள்ளி மாணவர்களின் நிதி அறிவுத் திறனை மதிப்பீடு செய்வதற்காக, நிதி கல்வி தேசிய மையம் சார்பில் நடத்தப்படும் இந்தத் தேர்வு, சமூகத்தில் வாழ்வதற்குத் தேவையான அடிப்படை நிதி அறிவை மாணவர்கள் பெற வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டது.
இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் கீழ் (SEBI) இயங்கும், தேசிய பங்குச் சந்தை கழகத்தின் (National Institute of Securities Markets-NISM) ஓர் அங்கமான நிதி கல்விக்கான தேசிய மையம் (National Centre for Financial Education- NCFE) என்ற அமைப்பு இந்தத் திறனறித் தேர்வை கடந்த 2013-14 முதல் நாடு முழுவதும் நடத்துகிறது.
இந்தத் தேர்வுக்கான அறிவிப்பு முதன் முறையாக 2013-இல் வெளியிடப்பட்டு, 2014, ஜனவரியில் தேர்வு நடத்தப்பட்டது. 8, 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் இந்தத் தேர்வில், பணம் தொடர்பான அடிப்படை, இலக்குகளை அறிவுப்பூர்வமாக நிர்ணயிப்பது, நிதி ஆய்வுத்திறன், நிதி திட்டமிடுதல், வரவுக்குள் செலவு, கையில் உள்ள பணத்தை வைத்து இலக்கை எட்ட திட்டமிடுதல், காப்பீடு, துணிதல் (Risk) குறித்த புரிதல், முதலீடு, வங்கித் துறையின் அடிப்படை, பங்குச்சந்தை, கடன்பத்திரம், கடன், ஓய்வுகால திட்டமிடுதல் உள்ளிட்டவற்றில் வினாக்கள் அமையும்.
நிதி கல்விக்கான தேசியக் கொள்கையை (National Strategy for Financial Education- NSFE) அமல்படுத்துவதற்காக, நிதித் துறையை நெறிமுறைப்படுத்தும் அமைப்புகளான RBI, SEBI, IRDAI, PFRDA, NISM உள்ளிட்டவற்றின் ஆதரவோடு நாடு முழுக்க ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வு எழுத, கட்டணம் எதுவும் கிடையாது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இணையம் வழியாக பள்ளிகள் மூலம் பதிவு செய்ய வேண்டும். நாடு முழுவதும் 250-க்கும் அதிகமான தேர்வு மையங்கள் உள்ளன. ஒரு மணி நேரம் நடைபெறும் தேர்வில் 75 வினாக்கள் இடம்பெறும். தவறான விடைக்கு அந்த விடைக்கான மதிப்பெண்ணில் 25 சதவீதம் மைனஸ் மதிப்பெண் உண்டு. இந்தத் தேர்வுக்கு பொதுவான பாடத்திட்டம் இணையத்தில் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துப் பள்ளி மாணவர்களும், பள்ளிகள் மூலமாக இந்தத் தேர்வை எழுதலாம். ஆனால், நாடு முழுவதும் சுமார் 1.25 லட்சம் மாணவர்கள் மட்டுமே தேர்வில் பங்கேற்கும் அளவில் திட்டமிடப்பட்டுள்ளதால், முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.
தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தேசிய அளவில் முதல் 5 இடங்களைப் பெறும் மாணவர்களுக்கும், 5 மண்டலங்கள் அளவில் ஒவ்வொரு மண்டலத்திலும் முதல் 3 இடங்களைப் பெறும் மாணவர்களுக்கும் பதக்கம், மடிக்கணினி, சாதனையாளர் சான்றிதழ் வழங்கப்படுகின்றன.
மேலும், தேசிய அளவில் முதல் 100 இடங்களைப் பெறுவோருக்கு தலா ரூ. 2000 ரொக்கப் பரிசு, சிறப்புச் சான்றிதழும், எஞ்சியுள்ளவர்களில் முதல் 50 சதவீத மாணவர்களுக்கு தகுதிச்சான்றிதழும் வழங்கப்படுகிறது.
இந்தச் சான்றிதழ்கள் மாணவர்கள் வாழ்க்கையில் பல இடங்களில் அவர்களின் முன்னேற்றத்திற்குப் பயனுள்ளதாக இருக்கும். 8, 9, 10-ஆம் வகுப்பில் இந்தத் தேர்வை எழுதி சான்றிதழ் பெறும் மாணவர்கள் பிளஸ் 1 சேர்க்கையின்போது கேந்திரிய வித்யாலயா, நவோதயா உள்ளிட்ட மத்திய அரசுப் பள்ளிகளில் சேரும்போது, கூடுதல் தகுதியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
மேலும், இது முழுக்க, முழுக்க பொருளாதாரம் குறித்த தேர்வு என்பதால், கல்லூரியில் சேரும்போது, பி.காம், பி.ஏ. போன்றவற்றில் வணிகம், பொருளாதாரப் பாடங்களைத் தேர்வு செய்யும்போது சேர்க்கை எளிதாக இருக்கும். என்.சி.சி, என்.எஸ்.எஸ். விளையாட்டுச் சான்றிதழ்களை நாம் பள்ளி, கல்லூரி சேர்க்கையில் பயன்படுத்துவதைப்போல இந்தச் சான்றிதழைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதோடு, பட்டம் முடித்துவிட்டு வேலை தேடும்போது, வங்கிப் பணிக்கான தேர்வு எழுதுவோருக்கு என்பிளாட் தேர்வு நிச்சயமாகக் கைகொடுக்கும். வங்கிப்பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற பலர் நேர்முகத் தேர்வுக்கு வரும்போது, நாம் பள்ளியில் படிக்கும்போதே பண மேலாண்மை குறித்து அறிந்து வைத்திருப்பதற்கான சான்றிதழைக் காட்டும்போது நமக்கு வேலை கிடைப்பதற்கான கூடுதல் வாய்ப்பு ஏற்படும்.
இன்று பல தனியார் வங்கிகள் வந்துவிட்டன. இந்த வங்கிகளில் பல்வேறு பட்டங்களைப் பெற்றவர்கள்தான் பணியில் உள்ளனர். அவ்வாறு ஒரு வேலைவாய்ப்புக்கு முயலும்போது, நம்மிடம் உள்ள இந்தச் சான்றிதழ் நமக்கு வேலை கிடைக்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடும்.
இந்தத் தேர்வுக்கான பதிவு கடந்த ஆண்டில் செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்கியது. நவம்பர் 28, 29 தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டு, டிசம்பர் மாதம் முடிவுகள் வெளியாகின. இதையொட்டி, நிகழாண்டு தேர்வுக்கான அறிவிப்பு, எந்த நேரமும் வெளியாகலாம்.
இந்தத் தேர்வுக்கான அறிவிப்புகளை சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, கே.வி., என்.வி., ஆர்.பி.ஐ, செபி, ஐஆர்டிஏஐ ஆகியனவும் தங்கள் இணையதளத்தில் வெளியிடுகின்றன.