முகப்பு
ஸ்பெஷல்

தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் பல மொழிகளில் பயிற்சி!

தமிழகத்தில் தொலைநிலைக் கல்வி வழங்க தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், சாஸ்த்ரா பல்கலைக்கழகம் என 4 பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே பல்கலைக்கழக மானிய

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:39 PM
பகிர்:

பொதுவாக, உலகில் பலவற்றையும் சாதித்தவர்கள் அதற்கான அறிவைத் தங்களது தாய்மொழி வழியாகக் கற்றதாகவே கூறியுள்ளனர்.  தமிழ்நாட்டில் தமிழ்வழியாகவே அறிவியல் உள்ளிட்ட அனைத்து உயர் கல்வியும் வழங்கப்பட வேண்டும் என அண்மைக்காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

தொலைநிலைக் கல்வி வழியாக தமிழில் அறிவியல் பாடங்களை அளித்துவரும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் க. பாஸ்கரன் நம்மிடம் இது தொடர்பாக பேசியதிலிருந்து...

" தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்ககம் வாயிலாக நடத்தப்படும் அனைத்துப் பாடப் பிரிவுகளுக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவின் உரிய அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழகம் மூலம் ஏற்கெனவே   12 இளைநிலை, 12 முதுநிலை பட்ட வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 2 ஆண்டுகளுக்கு முன்பு கணிதம், உளவியல் பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. நிகழாண்டு, இரண்டு நிலைகளிலும் தாவரவியல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்வழியில் அறிவியல் இளநிலைப் பட்டம் பயிலும் மாணவர்கள், முதுநிலைக் கல்வியைத் தொடரும்போது தமிழ்வழியில் முதுநிலைக் கல்வி இல்லாத  சிக்கல் இருந்து வந்தது. அந்தப் பிரச்னையைத் தீர்க்கும் வகையில், வரும் கல்வி ஆண்டில் (2017-18) இளநிலை, முதுநிலை என இரண்டு நிலைகளிலும் இயற்பியல், வேதியியல், விலங்கியல், பொருளாதாரம் ஆகிய 8 பாடங்களும், இளநிலை கல்வியாக சுற்றுச்சூழல் அறிவியல், சமூகப் பணி பாடங்கள் என மொத்தம் 10 பாடங்கள் தொலைநிலைக் கல்வியில் தமிழ்வழியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

இவை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கிராமப்புற ஏழை மாணவர்கள் மற்றும் கல்வி ஆர்வம் இருந்தும் மொழிப் பிரச்னையால் உயர் கல்வியைத் தொடரத் தயங்கும் மாணவர்கள் அதிக அளவில் பயன் பெற முடியும். 

தமிழகத்தில் தொலைநிலைக் கல்வி வழங்க தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், சாஸ்த்ரா பல்கலைக்கழகம் என 4 பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே பல்கலைக்கழக மானியக் குழு அனுமதி வழங்கியுள்ளது. மற்றவற்றுக்கு அனுமதியை ரத்து செய்துவிட்டது. அவை தற்போது தடையாணை பெற்று செயல்பட்டு வருகின்றன.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பல கலைகளைக் கற்று வந்தாலும், அதற்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் உள்ளது. அதனால், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பண்பாட்டுப் பேரவை ஏற்படுத்தப்பட்டு அதன்மூலம் வெளிநாடுகளில் உள்ள கலை மையங்களுடன் இணைந்து, பல கலைகளிலும் பயிற்சி வழங்க உள்ளோம். கடைசி ஒருமாதம் இங்கிருந்து பயிற்சியாளர்கள் சென்று பயிற்சி அளித்து, தேர்வு நடத்தி பல்கலைக்கழகச் சான்றிதழ் வழங்குவார்கள். 

இவ்வாறு ஒரு முறையான சான்றிதழ் அளிப்பதன் மூலம் கலைக்கு அங்கீகாரம் கொடுப்பதாக அமைவதோடு, கலை ஆர்வமுள்ளவர்களை ஊக்கப்படுத்துவதாகவும் அமையும். இதை அரசு அனுமதியுடன் வரும் பொங்கல் முதல் தொடங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இது தொலைநிலைக் கல்வியின் கீழ் வராது. இந்தத் திட்டம் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலும் செயல்படுத்தப்படும்.

வெளிநாட்டில் இருந்து சுற்றுலா வருபவர்களுக்கு 3 முதல் 5 நாட்களுக்குள் விரைவுப் பாடங்கள் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் மலேசியாவில் இருந்து வந்த 18 சுற்றுலாப் பயணிகளுக்கு 4 நாட்கள் தமிழ்ப் பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கப்பட்டது.

அதேபோல, மாணவர்களுக்கு பல மொழி அறிவு தேவை என்ற அடிப்படையில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிகள் துறையின் கீழ், அனைத்து மாணவர்களுக்கும் ஆங்கில மொழிப் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அவர்கள் விருப்பப்படும் மொழிகளிலும் இலவசப் பயிற்சி வழங்கப்படுகிறது'' என்றார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →