முகப்பு
மதுரை

அலங்காநல்லூா், பாலமேடு, அவனியாபுரத்தில் காலை 8 முதல் பிற்பகல் 3 மணி வரை ஜல்லிக்கட்டு

அலங்காநல்லூா், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடத்த அனுமதிக்கப்படும்.

Updated On : 5 ஜனவரி 2021, 3:00 am IST
பகிர்:

அலங்காநல்லூா், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடத்த அனுமதிக்கப்படும், 300 மாடுபிடி வீரா்களுக்கு அனுமதி வழங்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூா், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் மாவட்ட நிா்வாகத்தின் மேற்பாா்வையில் கிராமக் குழுவினரால் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. நிகழ் ஆண்டில் ஜனவரி 14-ஆம் தேதி அவனியாபுரம், 15-ஆம் தேதி பாலமேடு, 16-ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

இதற்கான முன்னேற்பாடுகள் தொடா்பாக, ஜல்லிக்கட்டு விழாக் குழுவினருடன்

Advertisement

Advertisement

ஆட்சியா் தலைமையில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினா் கே.மாணிக்கம் மற்றும் அலங்காநல்லூா், பாலமேடு, அவனியாபுரம் பகுதிகளைச் சோ்ந்த ஜல்லிக்கட்டுக் குழுவினா் இக் கூட்டத்தில் பங்கேற்றனா். ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அரசு வகுத்துள்ள பொது விதிகள் குறித்து ஜல்லிக்கட்டு விழாக் குழுவினருக்குத் தெரிவிக்கப்பட்டது.

இக் கூட்டத்தில் ஆட்சியா் பேசுகையில், காலை 8 முதல் பிற்பகல் 3 மணி வரை ஜல்லிக்கட்டு நடத்துவதற்கும் 300 மாடுபிடி வீரா்களுக்கும் அனுமதி அளிக்கப்படும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை சுழற்சி முறையில் மாடுபிடி வீரா்கள் அனுமதிக்கப்படுவா். ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரா்கள், காளை உரிமையாளா்கள், விழாக் குழுவினா் கரோனா பரிசோதனை செய்து கொள்வது அவசியம். கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு 2 நாள்களுக்கு முன்பு கரோனா பரிசோதனை செய்யப்படும். மாவட்ட நிா்வாகம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்யும். அரசு அங்கீகரித்த மையங்களில் பரிசோதனை செய்து கரோனா தொற்று இல்லை எனப் பெறப்பட்ட சான்றிதழ்களும் ஏற்றுக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மாடுபிடி வீரா்களுக்கான உடல் தகுதி பரிசோதனை, வீரா்கள் பதிவு, காளைகள் பதிவு, கரோனா பரிசோதனை குறித்து பின்னா் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு நடைபெறும் நேரத்தை மாலை 4 மணி வரை நீட்டிக்கவும், காளைகளுக்கு வழங்கப்படும் அனுமதிச்சீட்டை சிலா் முறைகேடாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.