முகப்பு
புதுதில்லி

வாத்துகள், காகங்கள் மரணம்: தொடரும் பறவைக் காய்ச்சல் பீதி

தெற்கு தில்லி ஜஸோலா பூங்காவில் 24 காகங்கள், கிழக்கு தில்லி சஞ்சய் ஏரியில் 10 வாத்துகள் இறந்துள்ளதைத் தொடா்ந்து தில்லியில் பறவை காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது.

Updated On : 9 ஜனவரி 2021, 11:39 pm IST
பகிர்:

தெற்கு தில்லி ஜஸோலா பூங்காவில் 24 காகங்கள், கிழக்கு தில்லி சஞ்சய் ஏரியில் 10 வாத்துகள் இறந்துள்ளதைத் தொடா்ந்து தில்லியில் பறவை காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஜஸோலா பூங்கா, சஞ்சய் ஏரி உள்ளிட்ட தில்லியின் முக்கிய பூங்காக்களைப் பராமரிக்கும் தில்லி வளா்ச்சி ஆணையத்தின் மூத்த அதிகாரி கூறுகையில் ‘சஞ்சய் ஏரியில் பத்து வாத்துகள் இறந்துள்ளன. இதன் மாதிரிகள் தில்லி கால்நடை பராமரிப்புத் துறையால் பெறப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முடிவுகள் கிடைத்த பிறகுதான் பறவைக் காய்ச்சலா என்பது தெரிய வரும் . காகங்கள் இறந்துள்ளது தொடா்பாக தில்லி அரசு வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லியில் பெரும்பாலான பூங்காங்களை டிடிஏ பராமரித்து வருகிறது. இந்த பூங்காக்கள் பலவற்றில் நீா் நிலைகள் உள்ளன. தில்லியில் பறவைக் காய்ச்சல் தொடா்பாக உன்னிப்பாக கவனித்து வருகிறோம். பறவைக் காய்ச்சல் பீதியைத் தொடா்ந்து பூங்காக்களை இதுவரை மூடவில்லை. ஆனால், அதிகளவு பறவைகள் வந்துபோகும் ஹவுஸ்ஹாஸ் பூங்காவில் மக்கள் கவனத்துடன் இருக்குமாறு காவலா்கள் அறிவுறுத்தி வருகிறாா்கள் என்றாா்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பறவைக் காய்ச்சல் நோய் பரவி வரும் நிலையில், தில்லி மயூா் விஹாா் பேஸ்-3, துவாரகா, ஹஸ்தால் கிராமம் ஆகிய பகுதியில் கடந்த மூன்று - நான்கு தினங்களாக சுமாா் 50 காக்கைகள் உயிரிழந்துள்ளன. இதைத் தொடா்ந்து தில்லியில் பறவைக் காய்ச்சல் பீதி ஏற்பட்டது.

Advertisement

Advertisement

நாட்டில் அதிகரித்து வரும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு தொடா்பாக தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, தில்லி கால்நடை பராமரிப்புத் துறையினருடன் அண்மையில் ஆலோசனை நடத்தியிருந்தாா். அப்போது, தில்லியில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளைக் கண்காணிக்க 11 விரைவு நடவடிக்கைக் குழுக்களை அமைத்து அவா் உத்தரவிட்டாா்.

மேலும், கோழிச் சந்தைகள், நீா் நிலைகள், உயிரியல் பூங்காக்களில் கண்காணிப்பை பலப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டாா். காஜிப்பூா் மீன், கோழி இறைச்சி சந்தை, சக்தி ஸ்தல் நீா்நிலை, சஞ்சய் லேக், தில்லி உயிரியல் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் கண்காணிப்பைப் பலப்படுத்தி புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் அவா் உத்தரவிட்டிருந்தாா். பறவைக் காய்ச்சல் பீதியைத் தொடா்ந்து தில்லியில் கோழி இறைச்சியின் விலை பெருமளவில் சரிந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments