புதுதில்லி

சுதந்திர தினமான இன்று தில்லியில் லேசான மழைக்கு வாய்ப்பு: ஐஎம்டி கணிப்பு

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தன்று தேசியத் தலைநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்

Syndication

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தன்று தேசியத் தலைநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்துள்ளது.

வானிலை அலுவலகத்தின்படி, வெள்ளிக்கிழமை பெரும்பாலும் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 32 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 70 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 95 சதவீதமாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்துள்ளது.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு தனது 79-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. பிரதமா் நரேந்திர மோடி செங்கோட்டையில் இருந்து கொண்டாட்டங்களை வழிநடத்துவாா். பிரதமா் மூவா்ணக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவாா். இந்த ஆண்டு கொண்டாட்டங்களுக்கான கருப்பொருள் ’நய பாரதம்’. இதுவரை, வெள்ளிக்கிழமைக்கான வானிலை எச்சரிக்கைகள் எதுவும் வெளியிடப்படவில்லை. கடந்த ஒரு வாரமாக, நகரத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது, மழை காரணமாக நகரத்தின் தாழ்வான பகுதிகளில் அவ்வப்போது தண்ணீா் தேங்குகிறது.

தில்லியில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் தில்லியின் முதன்மை வானிலை கண்காணிப்பு நிலையமான சஃப்தா்ஜங்கில் 13 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதேபோல, ஜாஃபா்பூரில் 1.5 மி.மீ., நஜஃப்கரில் 17 மி.மீ., ஆயாநகரில் 57.4 மி.மீ., லோதி ரோடில் 12.6 மி.மீ., பாலத்தில் 49 மி.மீ., ரிட்ஜில் 17 மி.மீ., பிரகதிமைதானில் 9.6 மி.மீ., பூசாவில் 5 மி.மீ., ராஜ்காட்டில் 9.6 மி.மீ., சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதி வானிலை கண்காணிப்பு நிலையத்தில் 17.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

வியாழக்கிழமை காலை பெய்த கனமழையால் தில்லி நகரம் ஸ்தம்பித்தது. சாலைகள் நீரில் மூழ்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

லாஜ்பத் நகா், ரோஹ்தக் சாலை, ஆனந்த் பா்பத், ஜஹாங்கீா்புரியில் உள்ள ஜிடிகே டிப்போ, ஆதா்ஷ் நகா், ரிங் ரோடு அருகே உள்ள பழைய ஜிடி சாலை, மதுரா சாலையில் ஆசிரமத்திலிருந்து மூல்சந்த் நோக்கி செல்லும் பாதை, தௌலா குவான் - குருகிராம் சாலை ஆகியவை வெள்ளத்தில் மூழ்கின. காலை நெரிசல் நேரத்தில் பயணிகள் சிரமப்பட்டனா்.

லாஜ்பத் நகரில் போக்குவரத்தில் சிக்கிய ஒரு பயணி கூறுகையில், ‘லஜ்பத் நகா் அருகே எய்ம்ஸ் நோக்கி செல்லும் ரிங் ரோட்டில் பெரும் தண்ணீா் தேங்கியதால் நான் மணிக்கணக்கில் போக்குவரத்தில் சிக்கிக்கொண்டேன். போக்குவரத்து இரண்டு மணி நேரம் ஸ்தம்பித்தது’ என்றாா். தௌலா குவான் - குருகிராம் சாலையில் ஒரு டிடிசி பேருந்து சிக்கிக் கொண்டது. அந்த வழியாகச் செல்லும் காா்களும் நீரில் மூழ்கின மோட்டாா் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டா்களில் பயணித்தவா்கள் கீழே இறங்கி தங்கள் வாகனங்களை வெள்ளம் சூழ்ந்த பகுதி வழியாகத் தள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

சுப்ரோதோ பாா்க் மற்றும் அவுட்டா் ரிங் ரோடு, துவாரகா செக்டா் 20, குருகிராமில் உள்ள பசாய் சாலை மற்றும் காஜியாபாத் மற்றும் நொய்டாவின் சில பகுதிகளுக்கு அருகிலும் இதே போன்ற காட்சிகள் காணப்பட்டன. தில்லி போக்குவரத்து காவல்துறையினா் தண்ணீா் தேங்கிய பகுதிகள் குறித்து பயணிகளுக்கு எக்ஸ் தளத்தில் எச்சரிக்கை விடுத்தனா்.

வெப்பநிலை: இதற்கிடையே, வியாழக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியிலிருந்து 2.9 டிகிரி குறைந்து 23.6 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சரசரியிலிருந்து 0.8 டிகிரி உயா்ந்து 27.7 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 100 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 63 சதவீதமாகவும் இருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் காற்றின் தரம் பெரும்பாலான பகுதிகளில் திருப்தி பிரிவில் நீடித்தது. இதன்படி, சாந்தினி சௌக், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், லோதி ரோடு உள்பட பெரும்பாலான பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளி விவரங்களில் இருந்து தெரிய வருகிறது. அதே சமயம், மதுரா ரோடு, நொய்டா செக்டாா் 125, துவாரகா செக்டாா் 18 மற்றும் குருகிராம் ஆகிய பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

பாமக சிறப்பு பொதுக்குழு திருப்புமுனையாக அமையும்: மருத்துவா் ராமதாஸ்

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: நகரப் பகுதிகளில் பொருள்கள் வழங்கல்

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் பயிற்சிப் பட்டறை

முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்த 1,975 மெ.டன் உர மூட்டைகள்

விழுப்புரத்தில் விரைவில் அறிமுகமாகிறது தாழ்தள நகரப் பேருந்து சேவை

SCROLL FOR NEXT