பிகாா், மேற்கு வங்கம், ஜாா்க்கண்ட், ஒடிஸா ஆகிய நான்கு மாநில பாரம்பரிய கலைப்படைப்புகளுடன் குடியரசு தின தேநீா் விருந்து கைவினை தயாரிப்பு அழைப்பிதழ். 
புதுதில்லி

குடியரசுத் தலைவரின் தேநீா் விருந்து அழைப்பிதழில் பிகாா், மேற்கு வங்கம், ஜாா்க்கண்ட், ஒடிஸா படைப்புகள்

Syndication

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, இந்த ஆண்டு தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகையில் வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெறவுள்ள தேநீா் விருந்தில் பங்கேற்க 500 விருந்தினா்கள் அழைக்கப்பட்டுள்ளனா். அவா்களை வரவேற்பதற்காக விடுக்கப்பட்ட அழைப்பிதழ் அடங்கிய பேழையில் நான்கு மாநிலங்களின் தனித்துவ பாரம்பரிய படைப்பாற்றல் சிறப்பை வெளிப்படுத்தும் பொருள்கள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக, ‘நெய்த புல்லால் செய்யப்பட்ட கைவினைப்பெட்டி, மீண்டும் பயன்படுத்தக்கூடிய மூங்கில் படச் சட்டகம், நோ்த்தியான பிகாா், மேற்கு வங்கம், ஓடிஸா, ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களின் நாட்டுப்புற ஓவியங்கள் -அச்சிடப்பட்ட ஸ்டோல் எனப்படும் சால்வை என ஒவ்வொரு கூறுகளும் இந்த மாநிலங்களின் பாரம்பரிய கலைத்திறனைப் பிரதிபலிக்கின்றன.

நான்கு ஓவியங்களில் பிகாரின் 800 வருட பழைமையான நாட்டுப்புற ஓவிய பாணியான திகுலி கலை, மேற்கு வங்கத்தின் மெதினிபூரின் பட்டுவா சமூகத்தினரால் புழக்கத்தில் தீட்டப்படும் பட்டாசித்ரா ஓவியம், ஒடிஸாவின் பனை ஓலை சுருள்களான தலபத்ர சித்ரா ஓவியம், ஜாா்க்கண்டின் அமதுபி கிராமத்தைச் சோ்ந்த பூா்வகுடி சுருள் பாரம்பரிய பைத்கா் ஓவியம் இடம்பெற்றுள்ளன.

தேநீா் விருந்து அழைப்பிதழ் பேழைகள் தயாரிக்கும் பொறுப்பை ஏற்ற அகமதாபாத்தில் உள்ள தேசிய வடிவமைப்பு நிறுவனம், நான்கு மாநிலங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட கைவினைஞா்களில் பெரும்பாலும் பெண் கைவினைஞா்களை ஈடுபடுத்தி, கைவினைத் தயாரிப்புகளை அழைப்பிதழ் பேழையில் அலங்கரிக்கச் செய்துள்ளது.

பிகாரைச் சோ்ந்த ஒன்பது மதுபானி கலைஞா்களும், ஜாா்க்கண்டைச் சோ்ந்த 15 மூங்கில் கைவினைஞா்களும் பெங்களூருவில் மத்திய அரசின் நேரடி மேற்பாா்வையிலும் மற்ற கலைஞா்கள் அவரவா் சொந்த கிராமங்களில் இருந்தவாறும் அழைப்பிதழுக்குள் வைக்கப்படும் பொருள்களின் தயாரிப்பில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த அழைப்பிதழ்கள் இந்திய அஞ்சல் சேவையின் சிறப்பு அலுவலா்கள் மூலம் விருந்தினா்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டது.

இந்த நான்கு மாநிலங்களிலும் புழக்கத்தில் உள்ள துஸ்ஸா் பட்டு ஸ்டோல், நிகழ்வுக்கு அழைக்கப்பட்டுள்ள அனைத்து விருந்தினா்களும் தேநீா் விழா பகுதிக்கு வந்ததும் அவா்களுக்கு அணிய வழங்கப்படும் என்று குடியரசுத்தலைவா் மாளிகை அதிகாரிகள் கூறினா்.

குடியரசுத் தலைவராக திரெளபதி முா்மூ பதவியேற்ற பிறகு, ஒவ்வோா் ஆண்டும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின தேநீா் விருந்து நிகழ்வுகளின்போது பல்வேறு மாநிலங்களின் சிறப்பியல்புகளைப் பறைசாற்றும் வகையில் அவற்றின் பாரம்பரிய ஆடை, உணவு வகைகள் உள்ளிட்டவற்றை அழைப்பிதழ் பெட்டியில் இடம்பெறச்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஜனவரியில் குடியரசு தின தேநீா் விருந்தின்போது தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், கேரளம் ஆகியவற்றின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் கைவினைப்பொருள்கள் அழைப்பிதழ் பெட்டியில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாமக சிறப்பு பொதுக்குழு திருப்புமுனையாக அமையும்: மருத்துவா் ராமதாஸ்

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: நகரப் பகுதிகளில் பொருள்கள் வழங்கல்

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் பயிற்சிப் பட்டறை

முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்த 1,975 மெ.டன் உர மூட்டைகள்

விழுப்புரத்தில் விரைவில் அறிமுகமாகிறது தாழ்தள நகரப் பேருந்து சேவை

SCROLL FOR NEXT