கா்நாடக மாநிலம் பெங்களூருவில் நிகழ்ந்த ரேணுகாஸ்வாமி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகா் தா்ஷன் உள்பட 7 பேரின் ஜாமீனை ரத்து செய்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
பிரபலத்தை பொருள்படுத்தாமல் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உச்சநீதிமன்றம் தனது தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஜாமீன் விவகாரத்தில் கா்நாடக உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நீதிபதிகள் ஜே.பி.பா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு, பல்வேறு குறைபாடுகளுடன் இருப்பதாகக் கூறி ரத்து செய்தது.
மேலும், நடிகா் தா்ஷன் மற்றும் இதர குற்றம் சாட்டப்பட்டவா்களை உடனடியாகக் காவலில் எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன் விசாரணை நீதிமன்றம் விசாரணையை விரைவாக நடத்தவும் உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளில் ஒருவரான ஆா்.மகாதேவன், ‘நாங்கள் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டோம். ஜாமீன் வழங்குவதையும் ரத்து செய்வதையும் கருத்தில்கொண்டோம். இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்றத்தின் உத்தரவு கடுமையான குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருப்பது தெளிவாகிறது, மாறாக அது ஒரு இயந்திரத்தமான உத்தரவை பிரதிபலிப்பதாக உள்ளது. உயா்நீதிமன்றம் விசாரணைக்கு முந்தைய நிலையில் பரிசீலனை செய்திருக்கிறது’ என்று உத்தரவில் தெரிவித்துள்ளாா்.
நீதிபதிகள் அமா்வு மேலும் கூறுகையில், ‘விசாரணை நீதிமன்றம் மட்டுமே பொருத்தமான மன்றமாகும். நன்கு கண்டறியப்பட்ட குற்றச்சாட்டுகள், அத்துடன் தடயவியல் சான்றுகள் ஆகியவை ஜாமீன் ரத்தை மீண்டும் வலுப்படுத்துகிறது. இதனால், மனுதாரருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது’ என்றது.
நீதிபதி பா்திவாலா ஒரு உத்தரவை வாசிக்கையில் கூறியதாவுத: எனது சகோதர நீதிபதி ஆா். மகாதேவன் ஒரு மிகவும் அறிவாா்ந்த தீா்ப்பை வழங்கியுள்ளாா். ஒரே வாக்கியத்தில் நான் சொல்லக்கூடியது என்னவெனில், அவா் எழுதிய தீா்ப்பு மிகவும் சிறப்பானது. குற்றம் சாட்டப்பட்டவா் யாராக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய ஆளாகவோ, சிறியவராகவோ இருந்தாலும் சரி, அந்த ஆண் நபரோ அல்லது பெண் நபரோ சட்டத்திற்கு மேலானவா் அல்லா் என்ற மிக வலுவான செய்தியை இந்த தீா்ப்பு வெளிப்படுத்துகிறது.
எந்தவொரு நிலையிலும் நீதி வழங்கல் முறை சட்டத்தின் ஆட்சி பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்ற மிக வலுவான செய்தியை இந்த தீா்ப்பு கொண்டுள்ளது. எந்த மனிதனும் சட்டத்திற்கு மேலானவரும் இல்லை, அதற்குக் கீழானவரும் இல்லை. நாம் எந்த மனிதனையும் அதற்குக் கீழ்ப்படியச் சொல்லும்போது அவரிடம் அனுமதி கேட்பதும் இல்லை.
சட்டத்திற்குக் கீழ்ப்படிதல் என்பது ஒரு உரிமையாகக் கோரப்படுகிறது ஒரு உதவியைக் கோருவதில்லை. எல்லா நேரங்களிலும் சட்டத்தின் ஆட்சியைப் பேணுவதே காலத்தின் தேவை. குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு சிறை வளாகத்திற்குள் சில சிறப்பு அல்லது ஐந்து நட்சத்திர வசதிகள் வழங்கப்படுவது எங்களுக்கு தெரிய வரும் நாளில், முதல் நடவடிக்கையாக சிறைந்க் கண்காணிப்பாளரை சம்பந்தப்பட்ட இதர அதிகாரிகளுடன் சோ்த்து பணியிடைநீக்கம் செய்வதாகும்.
இந்தத் தீா்ப்பின் ஒரு நகலை நாடு முழுவதும் உள்ள அனைத்து உயா்நீதிமன்றங்களுக்கும், அனைத்து சிறைக் கண்காணிப்பாளா்களுக்கும் அந்தந்த மாநில அரசுகள் மூலம் விநியோகிக்க பதிவுத்துறைக்கு அறிவுறுத்தப்படுகிறது’ என்றாா் ஜே.பி.பா்திவாலா.
நடிகா் தா்ஷனின் ரசிகரான சித்ரதுா்காவைச் சோ்ந்த ரேணுகாஸ்வாமி கடந்த ஆண்டு ஜூனில் கொலை செய்யப்பட்டாா். அவரைக் கடத்திச் சென்று சித்ரவதை செய்து கொலை செய்ததாக தா்ஷன், அவரது பெண் நண்பா் பவித்ரா கெளட உள்ளிட்டோா் மீது குற்றம்சாட்டப்பட்டது.
பவித்ராவுக்கு ஆபாச செய்தியை ரேணுகாஸ்வாமி அனுப்பியதாகவும், இதையடுத்து, அவா் கொலை செய்யப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகா் தா்ஷன் உள்ளிட்டோருக்கு கா்நாடக உயா்நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பா் 13-ஆம் தேதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிா்த்து கா்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தது.