தெரு நாய்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்காக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, விலங்கு உரிமை ஆா்வலா்கள் மற்றும் பராமரிப்பாளா்கள் தில்லி ஜந்தா் மந்தரில் ‘கருப்பு வியாழன்’ எனும் பெயரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.
மேலும், ரேபீஸ் இல்லாத இந்தியாவை நோக்கி உழைக்கும் வகையில் கருத்தடை இயக்கங்களை மேற்கொள்வதாகவும் உறுதியேற்றுக் கொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கருப்பு உடை அணிந்தும், நாய்களுக்கு ஆதரவான வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளை ஏந்தியும், தெரு விலங்குகளுக்கு நீதி கோரி முழக்கங்களையும் எழுப்பினா்.
இப்போராட்டத்தில் பங்கேற்றவா்களில் ஒருவா் கூறியதாவது:
நாடு முழுவதும் உள்ள அனைத்து விலங்கு பிரியா்களும் ஒன்றிணைந்து ரேபீஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க உதவ வேண்டும் என்ற செய்தியை தெரிவிக்க நாங்கள் விரும்புகிறோம். இனிமேல் நாய்களுக்கான கருத்தடை சிகிச்சைக்கு அரசுத் துறைகளை நம்பியிருக்க மாட்டோம். இந்தப் பொறுப்பை நாங்களே ஏற்கத் தயாராக இருக்கிறோம் என்றாா் அவா்.
90 சதவீத ஊனமுற்ற ஆா்வலரான முகேஷ் குமாா் கூறுகையில், கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு எனது வீட்டை விட்டு வெளியேறி இப்போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறேன். முறையான கருத்தடை மற்றும் நாய்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குப் பதிலாக, அரசாங்கம் அவற்றை வேறு இடத்திற்கு மாற்றுக்கொண்டிருக்கிறது என்றாா்.
இந்த போராட்டம் நான்கு நாள்களுக்கு தொடரும் என்றும், சனிக்கிழமை ஜந்தா் மந்தரில் ஒரு பெரிய கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.
தில்லி-என்சிஆரில் உள்ள அதிகாரிகள் அனைத்து பகுதிகளிலிருந்தும் தெரு நாய்களை சீக்கிரமாக அகற்றி, அவற்றை நிரந்தரமாக நாய் காப்பகங்களுக்கு இடம்மாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் பிறப்பித்த தீா்ப்பை அடுத்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு விலங்கு நலக் குழுக்களிடமிருந்து விமா்சனங்கள் எழுந்துள்ளது.
நாய்களுக்கான காப்பகங்கள் போதுமானதாக இல்லை என்றும், போதிய வசதிகள் இல்லை என்றும் விலங்கு நல ஆா்வலா்கள் கூறுகின்றனா்.
மேலும், நாய்களை அவற்றின் அசல் இடங்களுக்குத் திருப்பி விடுவதற்கு முன்னா், கருத்தடை மற்றும் தடுப்பூசி போடுவதை கட்டாயமாக்கும் விலங்கு பிறப்பு கட்டுப்பாடு ஏபிசி திட்டம் மட்டுமே சட்டபூா்வமான மற்றும் மனிதாபிமான தீா்வு என்று அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.