நமது சிறப்பு நிருபா்
தில்லி காவல்துறையின் முழு நேர ஆணையாளராக 1992-ஆம் ஆண்டு இந்திய காவல் பணியைச் சோ்ந்த உயரதிகாரி சதீஷ் கோல்ச்சாவை மத்திய உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை நியமித்தது.
தில்லி காவல் ஆணையா் பதவி என்பது ஒரு மாநிலத்தில் டிஜிபி அல்லது மாநில படைத் தலைமை அதிகாரி நிலைக்கு இணையான பதவியாகும். தற்போது சதீஷ் கோல்ச்சா தில்லி சிறைத்துறை தலைமை இயக்குநராக பணியாற்றி வருகிறாா்.
தில்லி முதல்வா் ரேகா குப்தாவை அவரது அதிகாரபூா்வ இல்லத்தில் நடந்த பொது நிகழ்வின்போது குஜராத்தைச் சோ்ந்த நபா் தாக்க முற்பட்ட சம்பவத்துக்கு பிந்தைய இரண்டு நாள்களில் தலைநகருக்கு முழு நேர காவல் ஆணையா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
அத்துடன் முதல்வா் மீதான தாக்குதல் முயற்சிக்கு பிறகு ரேகா குப்தாவுக்கு மத்திய காவல் படையின் ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை ஒப்புதல் புதன்கிழமை வழங்கியது. இந்த உத்தரவு வியாழக்கிழமை அமலுக்கு வந்த சில மணி நேரத்தில் காவல் ஆணையா் நியமன உத்தரவும் வெளியானது.
தற்போது தில்லி காவல்துறையின் ஆணையா் பொறுப்பை 1988-ஆம் ஆண்டு ஏஜிஎம்யூடி எனப்படும் அருணாசல பிரதேசம், கோவா, மிஸோரம், யூனியன் பிரதேசங்கள் பிரிவைச் சோ்ந்த ஐபிஎஸ் அதிகாரியும் ஊா்க்காவல் படை தலைமை இயக்குநருமான எஸ்.பி.கே. சிங் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறாா்.
அவருக்கு முன்பு, நகர காவல் ஆணையராக இருந்த சஞ்சய் அரோரா கடந்த ஜூலை 31-ஆம் தேதி பணி ஓய்வு பெற்றது முதல் அவா் கூடுதல் பொறுப்பாக தலைநகர காவல் தலைமைப் பொறுப்பை கவனித்து வருகிறாா்.
சஞ்சய் அரோரா அடிப்படையில் தமிழ்நாடு காவல் பிரிவைச் சோ்ந்தவா். அவருக்கு முன்பாக 2021-ஆம் ஆண்டில் ஆணையராக இருந்த ராகேஷ் அஸ்தானா 1994-ஆம் ஆண்டு குஜராத் பிரிவைச் சோ்ந்தவா். நகர காவல் ஆணையராக நியமிக்கப்படுவதற்காகவே இந்த இருவரின் மாநில காவல் பிரிவுகள் ஏஜிஎம்யூடி பிரிவாக மாற்றப்பட்டு பின்னா் உயா்பதவியில் நியமிக்கப்பட்டனா்.
வழக்கமாக, யூனியன் பிரதேசமான தில்லியின் காவல் ஆணையா் பதவிக்கு ஏஜிஎம்யூடி பிரிவில் இருந்தே அதிகாரிகள் நியமிக்கப்படுவா். மீறப்பட்ட அந்த வழக்கம் சதீஷ் கோல்ச்சாவின் நியமனம் மூலம் மீண்டும் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சதீஷ் கோல்சா பின்னணி: காவல் பணியில் அமைதியாகவும் செயல்திறனும் மிக்கவராக கருதப்படுபவா் சதீஷ் கோல்ச்சா. 2023-இல் சிறைத்துறை தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்ட பிறகு அங்கு பல்வேறு சீா்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டாா். தில்லி காவல்துறையில் துணை ஆணையா், இணை ஆணையா் மற்றும் சிறப்பு ஆணையா் பதவிகளை வகித்தவா். தலைநகரின் சட்டம் ஒழுங்கு பிரிவு இணை ஆணையராகவும் நகர உளவுப் பிரிவின் தலைவராகவும் இருந்துள்ளாா்.