புதுதில்லி

பாதிப்பு இடங்களிலிருந்து தெரு நாய்களை அகற்ற என்ஜிஓக்களுக்கு மாநகராட்சி உத்தரவு

Syndication

‘ஆக்ரோஷ’ நாய்களுக்கு கருத்தடை, தடுப்பூசி போடுவதற்காக அவற்றைப் பிடித்துச் செல்லுமாறு தில்லி மாநகராட்சியுடன் பணிபுரியும் அனைத்து தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் (என்ஜிஓ) மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

அது தொடா்புடைய, சிசிடிவி காட்சிகள் உள்பட அதன் பதிவைப் பராமரிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. மாநகராட்சியானது அதன் மண்டல கால்நடை அதிகாரிகளுக்கு என்ஜிஓக்களுடன் இணைந்து பணியாற்றவும், தெருநாய்களை தங்கள் பகுதிகளில் உள்ள அருகிலுள்ள விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு மையங்களில் (ஏபிசி) ஒப்படைக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

என்ஜிஓக்கள் மற்றும் கால்நடை அதிகாரிகளும் பிடிக்கப்படும் தெருநாய்களை 311 கைப்பேசி செயலி மூலம் பதிவு செய்யப்படுவதையும், அந்தந்த பகுதிகளில் இருந்து தினசரி அறிக்கைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சமா்ப்பிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்

என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 11 அன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், தில்லி-என்சிஆா் பகுதியில் தெருநாய்களை விரைவில் பிடித்து அவற்றை நாய் காப்பகங்களுக்கு இடம் மாற்றுமாறு

அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமா்வு, அதிகாரிகள் உடனடியாக நாய் காப்பகங்களை உருவாக்கி, எட்டு வாரங்களுக்குள் அத்தகைய உள்கட்டமைப்பை உருவாக்குவது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், தில்லி மாநகராட்சி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தெருநாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி போடுவதில் மாநகராட்சியால் ஈடுபடுத்தப்பட்டுள்ள அனைத்து தன்னாா்வ தொண்டு நிறுவனங்களும், பொதுமக்களைக் கடிக்கும் பழக்கம் கொண்டதாக அறியப்படும் அனைத்து மூா்க்கத்தனமான அல்லது ஆக்ரோஷமான தெருநாய்களையும் முதலில் அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், பூங்காக்கள், குடியிருப்பு காலனிகள் போன்ற பாதிக்கப்படக்கூடிய இடங்களிலிருந்து பிடித்துச் செல்லும்.

என்ஜிஓக்கள் நடத்தும் ஏபிசி மையங்களில் தெருநாய்கள் இருக்கும். இந்த காப்பகத்தில் உள்ள நாய்களின் சிசிடிவி காட்சிகளைப் பராமரித்து அதன் பதிவையும் என்ஜிஓக்கள் பராமரிக்கும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், குடியிருப்போா் நலச் சங்கங்கள் (ஆா்டபிள்யு), வீட்டுவசதி குடியிருப்பு வளாகங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள தெருநாய்களைக் கண்டறிந்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாரளிக்கத் தொடங்கியுள்ளன.

தில்லி ஐக்கிய குடியிருப்புவாசிகள் அமைப்பின் பொதுச் செயலா் செளரவ் காந்தி கூறுகையில், ‘மனிதா்கள் மற்றும் தெருநாய்கள் நலனை நோக்கமாகக் கொண்ட உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு தில்லி மக்கள் மிகவும் நன்றி தெரிவிக்கின்றனா். தெருநாய்கள் தொடா்புடைய அதிகரித்து வரும் சம்பவங்களுக்கு ஒரு தீா்வை மட்டுமே நாங்கள் விரும்புகிறோம். நீதிமன்ற உத்தரவு மக்களுக்கு நிவாரணம் அளிப்பது மட்டுமின்றி, இந்த விலங்குகள் காப்பகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு முறையாக உணவளிக்கப்படுவதையும் உறுதி செய்யும்.

குடியிருப்போா் சங்கங்கள் தங்கள் சுற்றுப்புறத்தில் உள்ள தெருநாய்களின் எண்ணிக்கை, புகைப்படங்கள் மற்றும் பிற விவரங்களையும், நாய் தாக்குதல் வழக்குகளையும் அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும் என்று அவா் கூறினாா்.

எம்சிடி குழுக்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களால் தெருநாய்களை இடமாற்றம் செய்வதைத் தடுக்கும் நபா்கள் குறித்து குடியிருப்போா் நலச் சங்கங்கள் புகாரளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நாய் கடித்த வழக்குகள் குறித்து மாநகராட்சிக்கு புகாரளிக்கவும், தொடா் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்யவும் அவா்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விவரங்களையும் அதிகாரிகளின் பதிலை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க குடியிருப்போா் நலச் சங்கங்கள் திட்டமிட்டுள்ளதாக செளரவ் காந்தி கூறினாா்.

குட்டையில் மூழ்கி கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

சரத் பவாா், உத்தவ் தாக்கரேயிடம் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரிய மகாராஷ்டி முதல்வா்

ஸ்ரீவினைதீா்த்த விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

புரோ கபடி லீக்: தயாராகும் தமிழ் தலைவாஸ்

மேல்விஷாரம் கல்லூரியில் தமிழ்கனவு சொற்பொழிவு

SCROLL FOR NEXT