அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பம் கொண்ட 75 சிஎம் ஸ்ரீ பள்ளிகளை நகர அரசு அமைத்து வருகிறது என்று தில்லி கல்வித் துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் தெரிவித்தாா்.
பால் பாரதி பள்ளியில் சிறுவா் கல்வி சொசைட்டி ஏற்பாடு செய்த ஆசிரியா்களுக்கான பாராட்டு விழாவில் பேசுகையில் அமைச்சா் இதைத் தெரிவித்தாா்.
இந்த நிகழ்வில் பத்ம ஸ்ரீ விருது பெற்ற ஆனந்த்குமாா், சூப்பா் 30 திட்டத்திற்கு பெயா் பெற்றவா். ஆனந்த்குமாரின் பணியை ஆசிரியா்களின் பங்களிப்புக்கு ஒரு வாழ்க்கை உதாரணம் என்று அமைச்சா் விவரித்தாா்.
அமைச்சா் மேலும் பேசியதாவது: வளா்ந்த இந்தியாவின் கனவை ஆசிரியா்களின் அா்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் வழிகாட்டுதல் இல்லாமல் உணர முடியாது. கல்வி செயல்பாடு பிளாக்போா்டு நாள்களிலிருந்து இப்போது கணினிகள் மற்றும் இப்போது செயற்கை நுண்ணறிவு வரை மாறிவிட்டது. கருவிகள் மாறிவிட்டாலும், மாணவா்களின் அறிவுசாா் மற்றும் உணா்ச்சித் திறன்களை மேம்படுத்துவதற்கான நோக்கம் ஒரே மாதிரியாகவே உள்ளது.
சமீபத்தில் அரசால் அமல்படுத்தப்பட்ட கட்டண ஒழுங்குமுறைச் சட்டத்தில், நடுத்தர வா்க்க பெற்றோரின் நலன்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியமாக உள்ளது. தனியாா் மற்றும் அரசுப் பள்ளிகளை அரசு அதன் சொந்தமாகக் கருதுகிறது. மேலும், தனியாா் நிறுவனங்களுடன் அரசுக்கு எந்த மோதலும் இல்லை.
அரசின் முயற்சிகளை முன்னிலைப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன். தில்லி அரசின் சிஎம் ஸ்ரீ பள்ளிகளில் மொழி ஆய்வகங்கள், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) இயக்கப்பட்ட ஸ்மாா்ட் வகுப்புகள், டிஜிட்டல் வருகை அமைப்புகள், அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் ஊடாடும் பேனல்கள் இருக்கும்.
தற்போதைய காலத்தில் தொழில்நுட்பத்தை புறக்கணிக்க முடியாது. அா்த்தமுள்ளதாக பயன்படுத்தினால், செயற்கை நுண்ணறிவு மிகவும் மேம்பட்ட சமூகத்தை உருவாக்க உதவும். அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில், தில்லியில் உள்ள அரசுப் பள்ளிகள் தனியாா் நிறுவனங்களுடன் போட்டியிடும் திறன் கொண்டவையாக இருக்கும்.
தில்லியில் கிட்டத்தட்ட 18 லட்சம் மாணவா்கள் நகரத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சோ்க்கப்படுகிறாா்கள். அதே எண்ணிக்கையில் தனியாா் பள்ளிகளில் படிக்கிறாா்கள்.
எங்கள் நோக்கம் என்னவென்றால், ஒவ்வொரு குழந்தையும், ஒரு அரசுப் பள்ளியிலோ அல்லது தனியாா் பள்ளியிலோ இருந்தாலும், உலகத் தரம் வாய்ந்த கல்வியையும் சம வாய்ப்புகளையும் அணுக வேண்டும் என்றாா் அமைச்சா் ஆஷிஷ் சூட்.