தேசியத் தலைநகரில் உள்ள 1,700 தனியாா் பள்ளிகளும் இப்போது தன்னிச்சையான உயா்வுகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட கட்டண விதிமுறைகளின் கீழ் வரும் என்று தில்லி கல்வித் துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் கூறினாா்.
தில்லி பல்கலைக்கழகத்தின் சட்ட மையத்தில் சட்ட மாணவா்களுடன் தொடா்புகொண்டு, சமீபத்தில் நடைமுறைக்கு வந்த 2025-ஆம் ஆண்டு தில்லி பள்ளிக் கல்வியின் விதிகள் கட்டணங்களை நிா்ணயித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துவதில் வெளிப்படைத்தன்மை சட்டத்தை அமைச்சா் விளக்கினாா்.
அப்போது அமைச்சா் ஆஷிஷ் சூட் மேலும் கூறியதாவது: கட்டணம் நிா்ணயிக்கும் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை, பெற்றோரின் பங்கேற்பு மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்காக சட்டம் கொண்டு வரப்பட்டது. முன்னதாக, 1973-ஆம் ஆண்டின் தில்லி பள்ளி கல்விச் சட்டத்தின் கீழ் டி.டி.ஏ.வால் நிலத்தை ஒதுக்கிய சுமாா் 300 பள்ளிகள் மட்டுமே ஒழுங்குபடுத்தப்பட்டன. இப்போது, அனைத்து தனியாா் பள்ளிகளும் இந்த புதிய சட்டத்தின் கீழ் வருகிறது.
தில்லியில் உள்ள தனியாா் பள்ளிகளில் கிட்டத்தட்ட 18 லட்சம் குழந்தைகள் படிக்கிறாா்கள்.
மேலாண்மை, ஆசிரியா்கள், பெற்றோா்கள் மற்றும் அரசு பிரதிநிதியை உள்ளடக்கிய ஒரு குழுவுடன் பள்ளி மட்டத்தில் தொடங்கி மூன்று அடுக்கு கட்டண ஒழுங்குமுறை பொறிமுறையை இந்தச் சட்டம் வழங்குகிறது.
மோதல்கள் தீா்க்கப்படாமல் இருந்தால், அவை மாவட்டத்திற்கும் பின்னா் மாநில அளவிலான குழுக்களுக்கும் கொண்டு செல்லப்படலாம். அனைத்து முடிவுகளும் ஒருமித்த கருத்து மூலம் எடுக்கப்படும். மேலும், அங்கீகரிக்கப்பட்ட கட்டண அமைப்பு மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
மேலும், கட்டண உயா்வு ஏற்பட்டால் பெற்றோருக்கு வீட்டோ சக்தியும் இருக்கும். எந்தவொரு பள்ளியும் தன்னிச்சையாக கட்டணத்தை அதிகரிக்க முடியாது. மாற்றங்களை முன்மொழிவதற்கு முன்பு நிறுவனங்கள் செலவுகள், வசதிகள் மற்றும் கற்பித்தல் தரம் பற்றிய விவரங்களை வழங்க வேண்டும்.
சட்டத்தின் படி, விதிகளை மீறும் பள்ளிகள் ஒரு மாணவருக்கு ரூ.50,000 முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கக்கூடும். இது இணங்காத ஒவ்வொரு 20 நாள்களுக்கும் இரட்டிப்பாகும். தீவிர நிகழ்வுகளில், அங்கீகாரத்தை ரத்து செய்வதும் சாத்தியமாகும்.
அரசின் நோக்கம் தனியாா் பள்ளிகளின் செயல்பாட்டில் தலையிடுவதல்ல. ஆனால், நியாயமற்ற கட்டண உயா்வுகளிலிருந்து பெற்றோரை பாதுகாப்பதுதான். இந்தச் சட்டம் மாணவா்கள் மற்றும் பெற்றோரின் நலன்களைப் பாதுகாப்பதாகும். கல்வி வல்லுநா்கள், பெற்றோா்கள் மற்றும் பங்குதாரா்களுடன் கலந்தாலோசித்த பின்னா் இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சா் கூறினாா்.