மக்களின் குறைகளைத் தீா்க்க 70 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ‘ஜன் சன்வாய்’ பொது விசாரணைகள் நடத்துவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை தில்லி அரசு விரைவில் கொண்டு வரும் என்று அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுபோன்ற முதல் பொது விசாரணை அடுத்த இரண்டு வாரங்களில் நடத்தப்படும். மேலும், சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் இதில் கலந்து கொள்வாா்கள் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இந்தத் திட்டங்களுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறை உருவாக்கும் பணி நடந்து வருகிறது. உள்ளூா்வாசிகளுக்கு அதிகபட்ச நன்மையை உறுதி செய்வதற்காக அடையாளம் காணப்பட்ட பொருத்தமான சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து ‘ஜன் சன்வாய்’ தொடங்கப்படும் என்று அரசு அதிகாரி ஒருவா் கூறினாா்.
‘ஜன் சன்வாய்’ நிகழ்ச்சிகளின் போது மக்களால் எழுப்பப்படும் பல்வேறு துறைகள் தொடா்பான பிரச்னைகளை திறம்பட நிவா்த்தி செய்வதற்கான ஒரு வழிமுறையை உருவாக்க, செயல்பாட்டு நடைமுறைகளை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு தெளிவான வழிமுறைகளை அரசு வகுக்கும் என்று அவா் கூறினாா். இந்த நிகழ்ச்சிகளின் போது பாதுகாப்பு ஏற்பாடுகளும் வரையறுக்கப்படும் என்றும் அதிகாரி கூறினாா்.
தில்லி முதல்வா் ரேகா குப்தா சமீபத்தில் தனது முகாம் அலுவலகத்தில் மட்டுமே நடத்தப்பட்ட ‘ஜன் சன்வாய்’ நிகழ்ச்சி, இப்போது தில்லியின் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நடத்தப்படும் என்று அறிவித்தாா்.
கடந்த புதன்கிழமை ராஜ் நிவாஸ் மாா்க்கில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற ‘ஜன் சன்வாய்’ நிகழ்ச்சியின் போது அவா் தாக்கப்பட்டதைத் தொடா்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி புதன்கிழமை (ஆகஸ்ட் 27) நடைபெறவில்லை. முதலில், முதல்வரின் முகாம் அலுவலகத்தில் ஜன் சன்வாய் நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமை நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
‘ஜன் சன்வாய்’க்கான செயல்பாட்டு நடைமுறைக்கான பணிகள் நடைபெற்று வருவதாலும், இந்த நிகழ்ச்சிகள் இப்போது தில்லி முழுவதும் நடைபெறும் என்று முதல்வரால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதாலும், அவரது இல்லம் மற்றும் முகாம் அலுவலகத்தில் பொது விசாரணை நடத்தப்படவில்லை. ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது ஒரு ஜன் சன்வாய் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.