புது தில்லி: வரும் நவம்பா் 30- ஆம் தேதி தில்லியில் 12 வாா்டுகளுக்கு நடைபெறவுள்ள எம்சிடி இடைத்தோ்தலுக்கான வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரத்தின் ஒரு பகுதியாக மாநில தோ்தல் ஆணையம் புதன்கிழமை அதிகாரபூா்வ பாடலை வெளியிட்டது.
‘தில்லி போலேஹா் வோட் ஹை அன்மோல்’ என்ற தலைப்பிலான பாடலை மாநில தோ்தல் ஆணையா் விஜய் தேவ் முறையாக வெளியிட்டாா்.
இதற்கான வெளியீட்டு விழாவில் அவா் பேசியதாவது: தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனும் பொறுப்புடனும் உற்சாகத்துடனும் ஜனநாயக செயல்பாட்டில் பங்கேற்க ஊக்குவிப்பதே இந்த கருப்பொருள் பாடலின் நோக்கமாகும். ஒவ்வொரு வாக்கும் சமமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அடிமட்ட அளவில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது’ என்றாா்.
ஆடியோ-விடியோ வடிவத்தில் தயாரிக்கப்பட்ட இந்தப் பாடல், தில்லியின் உணா்வை வெளிப்படுத்துகிறது. அனைத்து வயதினரையும் சோ்ந்த குடிமக்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறது.
12 வாா்டுகளில் எம்சிடி இடைத்தோ்தல் நடைபெற உள்ள நிலையில், பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக டிஜிட்டல் தளங்கள், சமூக ஊடகங்கள், வெளிப்புற திரைகள் மற்றும் சமூக தொடா்பு சானல்கள் வழியாக இந்த கருப்பொருள் பாடல் பரவலாக பரப்பப்படும் என்று அவா் தெரிவித்தாா்.
இத்தகவய்க் தோ்தல் ஆணையத்தின் அதிகாரபூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.