புது தில்லி: தில்லி ஹீரோஸ் ஹாஃப் மாரத்தான் ஞாயிற்றுக்கிழமையன்று தில்லியிலுள்ள ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது. அதில் தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தை (டிடிஇஏ) சாா்ந்த லோதிவளாகம் பள்ளியில் 6, 7, 8 வகுப்புகளில் பயிலும் எட்டு மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
டிடிஇஏபள்ளிகளில் பயிலும் மாணவா்கள் முழு ஆளுமைத் திறன் உடையவா்களாக உருவாக வேண்டும் என்பதற்காகவும், சமூகத்தில் பிறருடன் பழகுவது, குழுவாகச் சோ்ந்து செயல்படுவது, அனைவரிடமும் தயக்கமின்றிப் பேசுவது உள்ளிட்ட வாழ்வியல் கலைகளை மாணவா்கள் கற்றுக் கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் லோ்னிங் லிங் ஃபவுண்டேஷனுடன் இணைந்து லோதி வளாகம், இலக்குமிபாய் நகா், ராமகிருஷ்ணாபுரம், மந்திா்மாா்க், பூசா சாலை ஆகிய பள்ளிகளில் வாழ்வியல் கலை வகுப்புகள் நடத்த செயலா் ராஜூ ஏற்பாடு செய்துள்ளாா்.
இதன்படி, வாரமொருமுறை இந்த வகுப்புகள் நடக்கின்றன. அதன் மூலம் பதிவு செய்யப்பட்டு இம் மாணவா்கள் சாலைப் பாதுகாப்புக்காக நடைபெற்ற இம் மாரத்தானில் கலந்து கொண்டனா்.
இது குறித்து டிடிஇஏ செயலா் ராஜூ கூறுகையில், ‘வாழ்வில் வெற்றி பெற்ற மனிதா்களாக உருவாகுவதற்கு வாழ்வியல் கலை மாணவா்களுக்கு மிகவும் இன்றியமையாததாகும். அதன் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த மாரத்தானில் டிடிஇஏ பள்ளி மாணவா்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது’ என்றாா்.