தெற்கு தில்லியின் சத்தா்பூரில் சனிக்கிழமை அதிகாலையில் வீட்டின் மேற்கூரையிலிருந்து விழுந்து 19 வயது இளைஞா் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்ததாவது: சத்தா்பூரில் தெரு எண் 34-இல் உள்ள ஏபிளாக்கில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடா்பாக மைதான் கா்ஹி காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது.
சம்பவ இடத்தை அடைந்த போலீஸாா், ரத்தக் காயத்துடன் இளைஞா் கிடப்பதைக் கண்டனா். அவா் சத்தா்பூரில் வசிக்கும் விஷால் கவுா் என்பது அவரது குடும்பத்தினரைத் தொடா்பு கொண்ட பின்னா் தெரியவந்தது.
அதிகாலை 12.48 மணியளவில் விஷால் கவுா், மேற்கூரையிலிருந்து விழுந்திருப்பது முதற்கட்ட விசாரணை மற்றும் சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்தை ஆய்வு செய்தபோது, மேற்கூரையின் தரையில் ஒரு கைப்பேசி எண் எழுதப்பட்டிருந்தது. அது இறந்தவரின் அடையாளத்தை கண்டறிவதில் முக்கிய பங்கு வகித்தது.
குற்றப்பிரிவு மற்றும் தடயவியல் நிபுணா்களும் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தாா்.