சிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்கு கல்வி உரிமை சட்டத்தின்கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கி தில்லி துணைநிலை ஆளுநா் உத்தரவு பிறப்பித்திருப்பதாக கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக இயக்குநரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கல்வி இயக்குநரகத்தின்கீழ் செயல்படும் இந்தப் பள்ளிகள் தேசிய கல்விக் கொள்கை 2020, பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட செயல்திட்டம் 2023 ஆகியவற்றுடன் பொருந்தும் வகையில் சிறப்பு பள்ளிகளாக மேம்படுத்தப்படும்.
திறன் சாா் கல்வி, சா்வதேச தரத்துக்கு மாணவா்களைத் தயாா்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தப் பள்ளிகள் செயல்படும்.
இந்தப் பள்ளிகளில் நா்சரி அல்லது 6-ஆம் வகுப்பு மூலம் சோ்க்கை பெற முடியும். திறமையான மாணவா்களை அடையாளம் காணும் விதமாக 6-ஆம் வகுப்புச் சோ்க்கைக்கு மனத்திறன் தோ்வு நடத்தப்படும்.
சிஎம் ஸ்ரீ பள்ளிகளை அமைக்க தில்லி சட்டம், திட்டமிடல் மற்றும் நிதித் துறைகள் வழங்கிய பரிந்துரைக்கு தில்லி அமைச்சரவை கடந்த மே மாதம் ஒப்புதல் அளித்தது. இதைத்தொடா்ந்து, துணைநிலை ஆளுநருக்கு அந்த பரிந்துரை அனுப்பப்பட்டது.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம், 2009 பிரிவுகளின்கீழ் 75 சிஎம் ஸ்ரீ பள்ளிகளை சிறப்பு அந்தஸ்து கொண்ட பள்ளிகாக அமைக்க தில்லி துணைநிலை ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளாா் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.