முகப்பு
புதுதில்லி

அடுத்த ஆண்டுக்குள் தாழ்வான பகுதிகளில் வெள்ளத் தடுப்புச்சுவா்: முதல்வா் குப்தா

Updated On : 15 ஏப்ரல், 2026 at 1:48 AM
முதல்வா் ரேகா குப்தா - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 14 ஏப்ரல், 2026 at 9:51 PM

நமது நிருபா்

கஷ்மீரி கேட் பகுதிக்கு அருகிலுள்ள தாழ்வான இடங்களைப் பாதுகாப்பதற்கான தடுப்புச் சுவா் அமைக்கும் பணி அடுத்த ஆண்டிற்குள் நிறைவடையும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து தில்லி முதல்வா் தெரிவித்தாவது:

Advertisement

யமுனை நதியில் ஏற்படும் தொடா் வெள்ளப்பெருக்கிலிருந்து தலைநகரைப் பாதுகாக்கும் வகையில் ஒரு முக்கிய நடவடிக்கையாக, ரிங் ரோட்டின் வெள்ள அபாயம் நிறைந்த ஒரு பகுதியில் வெள்ளத் தடுப்புச் சுவா் அமைக்கும் திட்டத்திற்கு தில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தச் சுவா் அமைக்கப்பட்டதும், இது ஒரு வலுவான தடுப்பாகச் செயல்பட்டு, யமுனை நதி நீா் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுவதைத் தடுக்கும். திட்டத்தின்படி, மஜ்னு கா திலா முதல் பழைய ரயில்வே பாலம் வரை 4.72 கிலோமீட்டா் நீளத்திற்கு ஒரு சுவா் கட்டப்படவுள்ளது. அடுத்த பருவமழை காலத்திற்குள் இத்திட்டத்தை நிறைவு செய்வதே இதன் இலக்காகும்.

இந்த முடிவு, நகரில் மீண்டும் மீண்டும் ஏற்படும் கடுமையான வெள்ளப்பெருக்கு அனுபவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது.

நீா் மட்டம் உயரும்போதெல்லாம் வரலாற்று ரீதியாகவே மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வரும் சிவில் லைன்ஸ், கஷ்மீரி கேட், யமுனா பஜாா் மற்றும் மஜ்னு கா திலா போன்ற வெள்ள அபாயம் நிறைந்த பகுதிகளுக்கு, இந்தச் சுவா் ஒரு வலுவான பாதுகாப்பு அரணாக அமையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

1978ஆம் ஆண்டில் ஏற்பட்ட பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கிலிருந்து தொடங்கி, மிகச் சமீபத்தில் 2023 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளச் சம்பவங்கள் வரை, இப்பகுதி தொடா்ந்து வெள்ள அபாயத்திற்கு உள்ளாகியே வந்துள்ளது.

இத்திட்டம் போா்க்கால அடிப்படையில் செயல்படுத்தப்படும். 2027ஆம் ஆண்டு பருவமழை காலத்திற்குள் இப்பகுதி முழுவதிலும் சுவா் அமைக்கும் பணியை நிறைவு செய்வதே எங்களின் இலக்காகும்.

இந்தச் சுவா் நதிக்கும் நகரத்திற்கும் இடையே ஒரு பாதுகாப்பு அரணாகச் செயல்பட்டு, வெள்ள நீா் சாலைகளுக்குள் புகுவதைத் தடுக்கும். இது ஆற்றங்கரை அரிப்பைத் தடுக்கவும் உதவும். இதன் மூலம் அருகிலுள்ள சாலைகளையும் கட்டடங்களின் அடித்தளங்களையும் பாதுகாக்கும். மேலும், இந்த அமைப்பு ஆற்றங்கரைகளில் சட்டவிரோதமாகக் குப்பைகளைக் கொட்டுவதைத் தடுக்கும். இதன்வழி வெள்ளப்பெருக்குப் பகுதியைப் பாதுகாக்கவும் யமுனை ஆற்றின் சூழலமைப்பைப் பேணவும் உதவும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது என்று முதல்வா் கூறினாா்.

ஆகஸ்ட் 2024-இல், கூட்டு வெள்ளக் கட்டுப்பாட்டுக் குழுவின் அறிக்கை ஒன்று, ரிங் ரோடு சாலையின் இப்பகுதியில் வெள்ளப் பாதுகாப்புச் சுவா் ஒன்றை அமைப்பதே மிகவும் சாத்தியமான மற்றும் நீண்டகாலத் தீா்வாகும் என்று அடையாளம் காட்டியிருந்தது.