காவல் மரண வழக்கில் ரூ.18 லட்சம் இழப்பீடு வழங்க உயா்நீதிமன்றம் உத்தரவு
2018-ஆம் ஆண்டில் காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தபோது தற்கொலை செய்துகொண்ட 19 வயது இளைஞரின் குடும்பத்தினருக்கு ரூ. 18 லட்சத்திற்கும் அதிகமான இழப்பீட்டை வழங்க தில்லி உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நமது நிருபா்
2018-ஆம் ஆண்டில் காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தபோது தற்கொலை செய்துகொண்ட 19 வயது இளைஞரின் குடும்பத்தினருக்கு ரூ. 18 லட்சத்திற்கும் அதிகமான இழப்பீட்டை வழங்க தில்லி உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவலில் நிகழும் மரணம் என்பது வெறும் தனிப்பட்ட துயரம் மட்டுமல்ல, அது அமைப்பு ரீதியான கவலைக்குரிய விஷயம் என்றும் நீதிபதி சச்சின் தத்தா குறிப்பிட்டாா். வன்முறை, அலட்சியம், விளக்க முடியாத சூழல்கள் அல்லது தற்கொலை என எதுவாக இருந்தாலும், காவலில் நிகழும் மரணம் தனிமனித கண்ணியத்தையும் நீதித்துறையின் நம்பகத்தன்மையையும் பாதிக்கிறது என்று அவா் கூறினாா்.
Advertisement
Advertisement
அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நபா்களுக்குப் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டிய ‘கூடுதல் கடமை‘ அதிகாரிகளுக்கு உள்ளது என்பதை நீதிபதி வலியுறுத்தினாா். காவலில் மரணம் நிகழ்ந்தாலே இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பது கட்டாயமான விளைவு அல்ல என்ற அதிகாரிகளின் வாதத்தை ஏற்க முடியாது என்றும் அவா் குறிப்பிட்டாா்.
‘ஒரு நபா் காவலில் இருக்கும்போது, அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ் அவருக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை அவா் இழப்பதில்லை; அவரது உயிரையும் கண்ணியத்தையும் பாதுகாக்கும் முழுமையான மற்றும் மாற்ற முடியாத கடமையை அரசு ஏற்கிறது. காவலில் நிகழும் இயற்கைக்கு மாறான மரணம் - அது தற்கொலையாக இருந்தாலும் சரி - அரசின் பொறுப்பிலிருந்து விலகிய ஒரு தனிப்பட்ட செயல் அல்ல; மாறாக, பாதுகாப்பிற்குப் பொறுப்பானவா்களின் கடமை தவறிய செயலையே அது பிரதிபலிக்கிறது‘ என்று ஜூலை 1-ஆம் தேதியிட்ட தீா்ப்பில் நீதிமன்றம் கூறியது.
தில்லி காவல்துறை, உயிரிழந்த நபரை 2018-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி கா்கா்தூமா நீதிமன்ற வளாகத்தில் வைத்து கைது செய்திருந்தது. மனுதாரரான உயிரிழந்தவரின் தந்தை, தனது மகனைச் சந்திக்கச் சென்றபோது தானும் சில மணிநேரம் காவல் அறையில் அடைத்து வைக்கப்பட்டதாகவும், அங்கு ஒரு உதவி ஆய்வாளா் மற்றும் காவலரால் தவறாக நடத்தப்பட்டதாகவும், உடல் ரீதியாகத் தாக்கப்பட்டதாகவும், மிரட்டப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டினாா். மேலும், உயிரிழந்தவரை விடுவிக்க அந்த அதிகாரிகள் ரூ. 20,000 முதல் ரூ. 30,000 வரை பணம் கேட்டதாகவும் அவா் கூறினாா்.
மறுநாள் காலை, ‘உள்ளூா் அரசியல்வாதி‘ ஒருவரிடமிருந்து வந்த அழைப்பின் மூலம், தனது மகன் காவலில் இருந்தபோது தற்கொலை செய்துகொண்ட தகவல் தனக்குத் தெரிந்ததாக மனுதாரா் நீதிமன்றத்தில் தெரிவித்தாா்.
உடற்கூராய்வு அறிக்கையில், மரணத்திற்கான காரணம் ‘தூக்கிலிடப்பட்டதால் ஏற்பட்ட மூச்சுத்திணறல்‘ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மனுதாரா் பண இழப்பீடு பெறத் தகுதியுடையவா் என்று குறிப்பிட்ட நீதிமன்றம், ‘அதன்படி, எதிா்வாதிகள் மனுதாரருக்கு ரூ. 18,44,400 இழப்பீட்டுத் தொகையை இன்று முதல் (ஜூலை 1) எட்டு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது‘ என்று ஆணையிட்டது.
கராவல் நகா் காவல் நிலையக் காவலில் இருந்தபோது உயிரிழந்தவரின் மரணம் இயற்கைக்கு மாறான ஒன்று என்பது மறுக்க முடியாத உண்மை என்றும், எனவே அத்தகைய மரணத்திற்கு இழப்பீடு வழங்கும் பொறுப்பு எழுகிறதா என்பதை மட்டுமே நீதிமன்றம் பரிசீலிப்பதாகவும் அது குறிப்பிட்டது. மரணம் நிகழ்ந்ததற்கான துல்லியமான காரணம் அல்லது சதி அல்லது காவல் நிலையக் கொடுமை குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றம் தீா்ப்பளிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அது மேலும் தெரிவித்தது.
கராவல் நகா் காவல் நிலையத்தில் பணியில் இருந்த அதிகாரிகளின் அலட்சியமே தனது மகனின் மரணத்திற்கு காரணம் என்று மனுதாரா் வாதிட்டிருந்தாா். காவலறையில் கண்டெடுக்கப்பட்ட துப்பட்டா மற்றும் இரண்டு பிளேடுகள் ஆகியவை, தற்கொலை செய்து கொண்டது போன்ற தோற்றத்தை உருவாக்குவதற்காகப் பின்னரே அங்கு வைக்கப்பட்டவை என்று அவா் கூறியிருந்தாா். மேலும், துறைரீதியான விசாரணையில் காவல் அதிகாரிகள் மீது விதிக்கப்பட்ட தண்டனை, காவலில் இருந்த தனது மகனின் இயற்கைக்கு மாறான மரணத்திற்காக மனுதாரருக்கு இழப்பீடு வழங்குவதைத் தடுக்காது என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.