வாடிக்கையாளருக்கு ரூ. 4.68 லட்சம் இழப்பீடு! அமேசானுக்கு நீதிமன்றம் உத்தரவு! ஏன்?
வாடிக்கையாளருக்கு ரூ. 4.68 லட்சம் இழப்பீடு வழங்க அமேசானுக்கு உத்தரவிடப்பட்டது பற்றி...
வாடிக்கையாளர் ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக வேறு பொருளை டெலிவரி செய்த அமேசான் மற்றும் விற்பனையாளருக்கு ரூ. 4.68 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 2025-ல், டார்ஜிலிங்கைச் சேர்ந்த சாலமன் லெப்சா என்பவர் அமேசான் விற்பனை தளத்தில் ரூ. 1.43 லட்சம் மதிப்புள்ள கேமிரா ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அவருக்கு வேறு மாடல் கேமிரா டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்தில் சாலமன் புகார் அளித்த நிலையில், அந்த பொருளைத் திருப்பி அனுப்புமாறும், பணம் திரும்ப பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அப்பொருளை அவர் திருப்பி அனுப்பிய நிலையில், விற்பனை நிறுவனமானது, தவறான பொருளை திருப்பி அனுப்பியதால் பணம் திருப்பி அளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
தொடர் மின்னஞ்சல் உரையாடல்களால் வாடிக்கையாளருக்கு எவ்வித பயனும் இல்லை. விற்பனை நிறுவனமானது திருப்பி அனுப்பிய பொருளை உபயோகித்தது அல்லது சேதமடைந்தது என்ற பிரிவில் வகைப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக டார்ஜிலிங் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் சாலமன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையில், தாங்கள் ஒரு இடைத்தரகராக மட்டுமே செயல்படுவதாக அமேசான் விளக்கம் அளித்தது.
ஆனால், தயாரிப்புப் பட்டியலிடல், கட்டணம் செலுத்துதல், விநியோக ஏற்பாடுகள் மற்றும் பொருள்களைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட பரிவர்த்தனைகள் அமேசான் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், இத்தகைய சூழலில் பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது என்றும் வாடிக்கையாளர் வாதிட்டார்.
அமேசான் மற்றும் விற்பனையாளர் தரப்பிலிருந்து எந்தவொரு எழுத்துப்பூர்வ விளக்கம் அல்லது நேரில் ஆஜராகாததால், புகார் தாரரின் குற்றச்சாட்டுகள் மறுக்கப்படவில்லை என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேலும், தவறான பொருள் விநியோகம் மற்றும் பணத்தைத் திருப்பி வழங்க மறுத்தது ஆகிய செயல்களுக்காக அமேசான் மற்றும் அதன் விற்பனையாளர் ஆகியோரின் சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறையே காரணம் என்று நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, கேமிரா விலை ரூ. 1.43 லட்சம், மன உளைச்சலுக்கு ரூ. 2 லட்சம், அலட்சியம் மற்றும் சேவை குறைபாட்டுக்கு ரூ. ஒரு லட்சம், வழக்குச் செலவுக்காக ரூ. 25,000 உள்பட மொத்தம் ரூ. 4.68 லட்சத்தை அடுத்த 45 நாள்களுக்குள் வாடிக்கையாளருக்கு அமேசான் மற்றும் அதன் விற்பனையாளர் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், புகார் தாக்கல் செய்யப்பட்ட தேதியிலிருந்து முழுத் தொகையை வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் தேதி வரை, ஆண்டுக்கு 9 சதவிகிதம் வட்டித் தொகை கணக்கிட்டு, அதையும் கூடுதலாக வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
Court orders Amazon to pay Rs 4.68 lakh compensation to customer
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.