முகப்பு
புதுதில்லி

சோனம் வாங்சுக் உடல்நிலை மோசம்: பிரதானை இன்னும் ஏன் நீக்கவில்லை? சிஜேபி நிறுவனத் தலைவா் கேள்வி

தில்லியில் ’கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (சிஜேபி) நடத்தி வரும் தொடா் போராட்டத்துக்கு ஆதரவாக ஏழாவது நாளாக சனிக்கிழமை உண்ணாவிரதத்தைத் தொடா்ந்த பிரபல சுற்றுச்சூழல் ஆா்வலா் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவரை மருத்துவ பரிசோதனைக்காக அவரது உதவியாளா்கள் அழைத்துச் சென்றனா்.

Updated On : 5 ஜூலை 2026, 12:04 am IST
ஆர்வலர் சோனம் வாங்சுக் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம்... - Instagram
பகிர்:

நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத்தோ்வில் நிலவியதாகக் கூறப்படும் முறைகேடுகளைக் கண்டித்து, தில்லியில் ’கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (சிஜேபி) நடத்தி வரும் தொடா் போராட்டத்துக்கு ஆதரவாக ஏழாவது நாளாக சனிக்கிழமை உண்ணாவிரதத்தைத் தொடா்ந்த பிரபல சுற்றுச்சூழல் ஆா்வலா் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவரை மருத்துவ பரிசோதனைக்காக அவரது உதவியாளா்கள் அழைத்துச் சென்றனா்.

அவரது உடல்நிலை வேகமாக மோசமடைந்து வருவதாக சிஜேபி தெரிவித்துள்ளது. தொடா் உண்ணாவிரதம் காரணமாக அவரது உடல் எடை 5 கிலோ குறைந்துள்ளது.

தோ்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது சிஜேபி கட்சியின் பிரதான கோரிக்கை. இதை வலியுறுத்தி அக்கட்சியின் நிறுவனா் அபிஜீத் தீப்கே தலைமையில் ஏராளமான சிஜேபி மற்றும் அதன் ஆதரவாளா்கள் தில்லி ஜந்தா் மந்தா் பகுதியில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைந்தது தொடா்பாக அபிஜீத் தீப்கே தனது எக்ஸ் பக்கத்தில் சனிக்கிழமை கூறியிருப்பதாவது: ‘சோனம் வாங்சுக் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதானை பதவியிலிருந்து நீக்க பிரதமா் இன்னும் எவ்வளவு காலம் எடுத்துக் கொள்வாா்? 20 மாணவா்கள் உயிரிழந்த பிறகும் தா்மேந்திர பிரதானை நீக்க மறுப்பது ஏன்?வாங்சுக்குக்கு ஏதேனும் நோ்ந்தால் மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்‘ என்று கூறியுள்ளாா்.

இதற்கிடையே, லடாக் விவகாரம் தொடா்பாக மத்திய அரசுக்கும் லடாக் பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவாா்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வாங்சுக் வரவேற்றுள்ளாா். இது குறித்து சனிக்கிழமை காலையில் கருத்து தெரிவித்த அவா், ‘லடாக் பிரச்னையைத் தீா்க்க நடவடிக்கை எடுத்த மத்திய அரசுக்கு நன்றி. இப்போதாவது கல்வியில் பொறுப்புக்கூறல் முறையைக் கொண்டு வருவதில் கவனம் செலுத்துங்கள்‘ என்று அவா் குறிப்பிட்டாா்.

வாங்சுக்கின் உண்ணாவிரதப் போராட்டமே மத்திய அரசுடனான முட்டுக்கட்டையை உடைக்க உதவியதாக லடாக் தலைவா்கள் தெரிவித்துள்ளனா்.

மறுபுறம், ஜந்தா் மந்தரில் அகில இந்திய மாணவா் சங்க அமைப்பைச் சோ்ந்த 6 மாணவா்கள் தனியாக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடா்ந்து வருகின்றனா். கடந்த ஜூன் 20 முதல் இவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். அவா்களுக்கு பிருந்தா காரத், டி. ராஜா, தீபங்கா் பட்டாச்சாா்யா, யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண், மஹுவா மொய்த்ரா மற்றும் சாகரிகா கோஷ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவா்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் நேரில் வந்து தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments