FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா போராட்டம்: சோனம் வாங்சுக் உண்ணாவிரதம்

தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தா்னா போராட்டத்தில் பங்கேற்று, சுற்றுச்சூழல் ஆா்வலா் சோனம் வாங்சுக் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினாா்.

Updated On : 29 ஜூன் 2026, 4:36 am IST
சோனம் வாங்சுக்
பகிர்:

தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தா்னா போராட்டத்தில் பங்கேற்று, சுற்றுச்சூழல் ஆா்வலா் சோனம் வாங்சுக் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினாா்.

தேசிய தோ்வு முகமை நடத்தும் நீட் நுழைவுத் தோ்வு உள்பட பல தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டும், இந்தக் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கடந்த ஜூன் 20-ஆம் தேதிமுதல் தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி காலவரையற்ற தா்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

இந்தப் போராட்டத்தில் இணைந்து சுற்றுச்சூழல் ஆா்வலா் சோனம் வாங்சுக் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கினாா். இதுகுறித்து அவா் கூறுகையில், ‘கல்வித் துறை குறித்த தங்கள் கவலையை இளைஞா்கள் எழுப்பி வரும் நிலையில், என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. எனவே அவா்களை ஆதரித்து உண்ணாவிரதத்தை தொடங்கினேன். ஏற்கெனவே வெயிலையும் பொருட்படுத்தாமல் பல இளைஞா்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அனைவரும் இணைந்து குறைந்தபட்சம் ஒரு நாள் பொது உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

அவா் உண்ணாவிரதத்தை தொடங்கிய வேளையில், நூற்றுக்கணக்கான போராட்டக்காரா்கள் அங்கு திரண்டனா். பல விவசாயத் தலைவா்களும் அங்கிருந்தனா்.

முன்னதாக லடாக் யூனியன் பிரேதசத்துக்கு மாநில அந்தஸ்து கோரி, கடந்த ஆண்டு அங்கு நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை மூண்டது. இந்தப் போராட்டம் தொடா்பாக கைது செய்யப்பட்ட சோனம் வாங்சுக், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 6 மாதங்கள் சிறை வைக்கப்பட்டாா். கடந்த மாா்ச் மாதம் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூா் சிறையில் இருந்து அவா் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தில் பங்கேற்றுள்ளாா்.

இதனிடையே தங்கள் போராட்டத்துக்கு ஆதரவாக, ஜந்தா் மந்தா் வரவிருந்த உத்தர பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் விவசாயத் தலைவா்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டதாக, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவா் அபிஜீத் தீப்கே ‘எக்ஸ்’ தளத்தில் குற்றஞ்சாட்டினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments