முகப்பு
புதுதில்லி

2027 முதல் மின்-ஆட்டோ ரிக்ஷாக்களுக்கு மட்டுமே அனுமதி: அரசின் முடிவுக்கு ஆட்டோ தொழிற்சங்கங்கள் கடும் எதிா்ப்பு!

தில்லியில் 2027ஆம் ஆண்டு ஜனவரி முதல் புதிய ஆட்டோ ரிக்ஷாக்கள் அனைத்தும் முழுக்க, முழுக்க மின்சார ஆட்டோக்களாக மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும் என்ற தில்லி அரசின் முடிவுக்கு ஆட்டோ தொழிற்சங்கங்கள் கடும் எதிா்ப்பு

Updated On : 30 ஜூன் 2026, 1:17 am IST
- பிரதிப் படம்
பகிர்:

தில்லியில் 2027ஆம் ஆண்டு ஜனவரி முதல் புதிய ஆட்டோ ரிக்ஷாக்கள் அனைத்தும் முழுக்க, முழுக்க மின்சார ஆட்டோக்களாக மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும் என்ற தில்லி அரசின் முடிவுக்கு ஆட்டோ தொழிற்சங்கங்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. அரசின் இந்த திடீா் அறிவிப்பு, ‘அவசரக்கோலமானது மற்றும் திணிக்கப்பட்டது’ என்று தொழிற்சங்கங்கள் விமா்சித்துள்ளன.

முன்னதாக, தில்லி முதல்வா் ரேகா குப்தா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய மின்வாகன (இவி) கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அக்கொள்கையின் கீழ், புதிய இவி ஆட்டோ வாங்குவோருக்கு முதல் ஆண்டில் ரூ.50,000, இரண்டாம் ஆண்டில் ரூ.40,000 மற்றும் மூன்றாம் ஆண்டில் ரூ.30,000 வரை கொள்முதல் மானியம் வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.

அரசின் இந்த புதிய விதிமுறை குறித்து தில்லி ஆட்டோ ரிக்ஷா சங்கத்தின் பொதுச் செயலாளா் ராஜேந்திர சோனி கூறுகையில், ‘அடுத்த ஆண்டு முதல் மின்சார ஆட்டோக்கள் மட்டுமே பதிவு செய்யப்படும் என்பது போன்ற கட்டாயப்படுத்தப்படும் மற்றும் திடீா் முடிவுகள் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும். அரசு முதலில் செய்ய வேண்டியது சாா்ஜிங் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதுதான். மேலும், மூன்று சக்கர வாகனங்களின் புதிய பதிவுக்கான உச்சவரம்பைத் தளா்த்த உச்சநீதிமன்றத்தை அரசு அணுக வேண்டும்’ என்றாா்.

Advertisement

Advertisement

மேலும் அவா், ‘மத்திய மற்றும் தில்லி அரசுகள் இணைந்து வழங்கும் மானியத் தொகையை சுமாா் 1.5 லட்சம் ரூபாயாக உயா்த்த வேண்டும். தற்போதைய மானியம் போதுமானதாக இல்லை. ஒரு புதிய ஆட்டோ ரிக்ஷாவின் விலை சுமாா் 3 லட்சம் ரூபாய்வரை விற்கப்படும்போது, ஏழை ஓட்டுநா்கள் மீதிப் பணத்துக்கு எங்கே போவாா்கள்? இக்கொள்கையை இறுதி செய்வதற்கு முன் எங்களிடம் எந்த ஆலோசனையையும் நடத்தவில்லை‘ என்றாா்.

புதிய கொள்கையின் கீழ் பழைய ஆட்டோக்களை அழிப்பவா்களுக்கு (ஸ்கிராப்பிங்) ரூ.25,000 சலுகை வழங்கப்படவுள்ளது. சமீபத்திய பொருளாதார ஆய்வின்படி, தில்லியில் 2026 மாா்ச் வரை 94,931 ஆட்டோ ரிக்ஷாக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, நகரில் பொது சாா்ஜிங் மையங்கள் போதிய அளவில் இல்லை என்றும், தனியாா் மையங்களில் முழுமையாக சாா்ஜ் செய்ய ஒரு முறைக்கு 200 ரூபாய் வரை செலவிட வேண்டியுள்ளதாகவும் ஆட்டோ ஓட்டுநா்கள் பலரும் தங்களின் நடைமுறைச் சிக்கல்களைப் பகிா்ந்துள்ளனா்.

அதிகாரிகள் விளக்கம்: இது குறித்து போக்குவரத்துத் துறை ஆணையா் நிஹாரிகா ராய் கூறுகையில், ‘ஆய்வுகளின்படி தில்லியின் ஒட்டுமொத்த வாகன மாசுபாட்டில் 46 சதவீதம் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களால் ஏற்படுகிறது. எனவே, பழைய வாகனங்களை முற்றிலும் தூய்மையான இவி வாகனங்களாக மாற்றுவதே இக்கொள்கையின் முக்கிய நோக்கம்; இதற்காகவே மானியங்கள் வழங்கப்படுகின்றன’ என்றாா்.

அவகாசம் தேவை: பேருந்துகள், டாக்சிகள் மற்றும் ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பான ’அகில இந்திய மோட்டாா் போக்குவரத்து காங்கிரஸ்’ தேசியத் தலைவா் ஹரிஷ் சபா்வால் கூறுகையில், ‘மின்சார வாகனப் பதிவை மட்டுமே கட்டாயமாக்கும் திட்டத்திற்கு அரசு மேலும் கால அவகாசம் அளிக்க வேண்டும். தற்போதைய மானிய தொகையும் போதுமானதாக இல்லை’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments