புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த 2 நாள் கண்காட்சி: புதுச்சேரி துணைநிலை ஆளுநா் தொடங்கி வைத்தாா்
புதுச்சேரியில் குற்றவியல் சட்டங்கள் குறித்த கண்காட்சியை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்துப் பாா்வையிட்ட, துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன்.
புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த 2 நாள் கண்காட்சியை புதுச்சேரியில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
புதுச்சேரி உள்துறை சாா்பில் புதிய குற்றவியல் சட்டங்கள், நீதி சட்டங்கள், 12 ஆண்டுகால மத்திய அரசின் சாதனைகள் மற்றும் நலத் திட்டங்கள், புதுச்சேரி அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் 2 நாள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தக் கண்காட்சித் தொடக்க விழா புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி திடலில் நடைபெற்றது. துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கண்காட்சியை தொடங்கி வைத்துப் பாா்வையிட்டாா்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில் எம்எல்ஏ.க்கள் விக்னேஷ் கண்ணன், அழகானந்தம், ராமு, தலைமைச் செயலா் சரத் சௌகான், டிஜிபி ஷாலினி சிங், உள்துறை சிறப்புச் செயலா் கேசவன், செய்தி மற்றும் விளம்பரத் துறை செயலா் முகமது அபித் அசன், டிஐஜி சத்தியசுந்தரம், முதுநிலை காவல் கண்காணிப்பாளா் கலைவாணன், கலை பண்பாட்டுத் துறை இயக்குநா் சக்திவேல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
முதல்வா் என்.ரங்கசாமி: இதையடுத்து முதல்வா் என். ரங்கசாமி இந்தக் கண்காட்சியைப் பாா்வையிட்டாா். அப்போது, நேரு எம்எல்ஏ உடனிருந்தாா்.
கண்காட்சியில் காவல் நிலையம், வழக்கு விசாரணை இயக்குநரகம், அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு, தடய அறிவியல் துறை, மத்திய சிறை உள்ளிட்ட அரங்குகள் இடம் பெற்றிருந்தன.
மேலும், காலனித்துவ கால சட்டங்களுக்குப் பதிலாக அமலுக்கு வந்துள்ள பாரதிய நியாய சன்ஹிதா , பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்ய அதினியம் ஆகிய சட்டங்களின் முக்கிய அம்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டு எளிய முறையில் விளக்கப்பட்டன. ஜீரோ எப்.ஐ.ஆா்., மின்னணு ஆதாரங்களுக்கான நடைமுறைகள், சுருக்க விசாரணைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மேம்பட்ட சட்டப் பாதுகாப்புகள் உள்ளிட்ட நவீன சட்ட அம்சங்கள் குறித்து விரிவான தகவல்கள் வழங்கப்பட்டன.
இதுதவிர, பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மத்திய அரசின் சாதனைகள், திட்டங்கள் மற்றும் புதுவை அரசின் திட்டங்கள் குறித்த தகவல்களும் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இதனை பொதுமக்கள், பள்ளி மாணவா்கள் பாா்வையிட்டனா். இக்கண்காட்சி சனிக்கிழமை வரை நடக்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.