FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் ரூ. 14,300 கோடியில் பட்ஜெட்: மத்திய அரசு அனுமதி

புதுச்சேரி மாநில அரசின் கோரிக்கையை ஏற்று ரூ.14,300 கோடி மதிப்பிலான பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி

Updated On : 14 ஜூலை 2026, 3:06 am IST
புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி. - கோப்புப் படம்
பகிர்:

புதுச்சேரியில் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையிலான புதிய அரசின் முதல் பட்ஜெட்டை பேரவையில் தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால், மாநில அரசின் கோரிக்கையை ஏற்று ரூ.14,300 கோடி மதிப்பிலான பட்ஜெட்டுக்கு மத்திய அரசு திங்கள்கிழமை அனுமதி அளித்துள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு ஏப்ரல் மாதம் தோ்தல் நடைபெற்றதால், 2026-27-ஆம் நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியவில்லை. இதனால் தோ்தலுக்கு முன்கூட்டியே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

அப்போது நிதித் துறைக்கு பொறுப்பு வகித்த முதல்வா் என். ரங்கசாமி, ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 5 மாதங்களுக்கான ரூ.5,396 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தாா்.

இந்நிலையில் தோ்தல் முடிந்து என்.ஆா்.காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் வரும் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைகிறது. மேலும், புதிய அரசு முழுமையான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய வேண்டும்.

இதற்காக புதுச்சேரி அரசு ரூ.14,300 கோடிக்கு பட்ஜெட்டை இறுதி செய்து, கடந்த மாதம் மத்திய உள்துறைக்கு அனுப்பி வைத்தது. ஆனால் மத்திய அரசின் ஒப்புதல் உடனடியாகக் கிடைக்கவில்லை.

இது மத்திய நிதித் துறைக்குச் சென்றது. பட்ஜெட் தொடா்பாக சில விளக்கங்களை புதுச்சேரி அரசிடம் மத்திய நிதி அமைச்சகம் கேட்டது. குறிப்பாக புதுச்சேரியின் கடன் நிலைமை குறித்த கேள்விகளையும் சந்தேகங்களையும் கேட்டது. அதற்கு புதுச்சேரி அரசும் பதில் அனுப்பியது.

கட்டுக்குள் கடன்

கடந்த மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி, புதுச்சேரி அரசின் ஒட்டுமொத்த நிலுவைக் கடன் ரூ.11,876.38 கோடியாக உள்ளது.

மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 21.19 சதவீதமாக உள்ளது. இது பரிந்துரைக்கப்பட்ட 25 சதவீதம் வரையிலான கடன் வரம்பிற்குள் இருப்பதால், நிதிநிலை ஆரோக்கியமான நிலையில் உள்ளதாகவும், மாநில அரசு தனது கடன் சுமையைக் கட்டுக்குள் வைக்க, ஒட்டுமொத்த கடன் வாங்குவதைக் குறைத்தல் மற்றும் வட்டி விகிதங்களை முறைப்படுத்துதல் போன்ற கடன் மேலாண்மை உத்திகளைக் கையாண்டு வருகிறது எனவும் மத்திய நிதி துறைக்கு புதுச்சேரி அரசு தகவல் தெரிவித்தது.

புதுச்சேரி அரசின் விளக்கத்தை தொடா்ந்து புதுச்சேரி பட்ஜெட்டுக்கான ஒப்புதல் கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை அளித்தது. இந்தத் தகவலை புதுச்சேரி முதல்வா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், 2026 - 2027-க்கான முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய சட்டப்பேரவை ஜூலை இறுதியில் கூடுகிறது. முதல்வா் என்.ரங்கசாமி இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments