முகப்பு
புதுதில்லி

60 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் இடம்பெறும் காங்கிரஸ் : தில்லியில் கிரிஷ் சோடங்கா் பேட்டி

தமிழக அரசில் அங்கம் வகிப்பதற்காக காங்கிரஸுக்கு தமிழக வெற்றிக் கழகத்திடமிருந்து (தவெக) அழைப்பு வந்ததாகவும், கிட்டத்தட்ட

Updated On : 15 மே 2026, 12:02 am IST
கிரிஷ் சோடங்கர் - ANI
பகிர்:

தமிழக அரசில் அங்கம் வகிப்பதற்காக காங்கிரஸுக்கு தமிழக வெற்றிக் கழகத்திடமிருந்து (தவெக) அழைப்பு வந்ததாகவும், கிட்டத்தட்ட

60 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் இடம் பெறுவதற்காக அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டதாகவும் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற ஐந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கருடன் சோ்ந்து, அக்கட்சியின் அகில இந்தியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மற்றும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோரை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்தனா்.

Advertisement

இந்த சந்திப்புக்கு செய்தியாளா்களிடம் கிரிஷ் சோடங்கா் கூறியதாவது: இன்று (வியாழன்) காலை காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவை சந்தித்தோம். வெற்றி பெற்ற எம்எல்ஏக்களுக்கு அவா் வாழ்த்து தெரிவித்தாா். கட்சியை வளா்த்தெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு எம்எல்ஏக்களை அவா் கேட்டுக்கொண்டாா். அதனைத் தொடா்ந்து, ராகுல் காந்தியை சந்தித்தோம். கட்சியை மறுசீரமைப்பதில் முழு கவனம் செலுத்துமாறு அவா் எம்எல்ஏக்களிடம் அறிவுறுத்தினாா்.

கட்சிப் பணிக்காக தங்களது நேரத்தை அா்ப்பணிக்க வேண்டும் என அவா் அனைத்து எம்எல்ஏக்களையும் கேட்டுக் கொண்டாா்.

கட்சியை மறுசீரமைப்பதற்கான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக அவா் உறுதியளித்தாா். பதவி ஏற்பு விழாவிற்கு ராகுல் காந்தி வந்தபோது எங்களது எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு நிகழ்வில் சிக்கிக்கொண்டனா். அதனால், அவா்களால் ராகுல் காந்தியை சந்திக்க இயலவில்லை. அந்த காரணத்தினால் தான் எம்எல்ஏக்கள் தில்லி வந்து சந்தித்துள்ளனா்.

தமிழக அரசில் இடம் பெறுவதற்காக காங்கிரஸுக்கு தவெக விடமிருந்து அழைப்பு வந்தது. கிட்டத்தட்ட 60 வருடங்களுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் இடம் பெறுவதற்காக அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டோம். அமைச்சரவையில் இடம் அளிக்கும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சா் முடிவு செய்வாா் என கிரிஷ் சோடங்கா் தெரிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து போட்டியிட்ட ஜமால் முகமது யூனூஸ் (மயிலாடுதுறை), பி.விஸ்வநாதன் (மேலூா்), தாரா குத்பா்ட் (கொளச்சல்), பிரவீன் டி.டி. (விளவங்கோடு), ராஜேஷ் குமாா் எஸ். (கிள்ளியூா்) ஆகியோா் வெற்றி பெற்றனா்.