டாக்டர் இல்லாத இடத்தில் (விரிவாக்கப்பட்ட புதிய புதிப்பு) - உடல் நல பராமரிப்புக் கையேடு - டேவிட் வெர்னர்- பக்.740; ரூ.490; அடையாளம் பதிப்பகம், புத்தாநத்தம், திருச்சி மாவட்டம்; )04332-273444.
1977-ம் ஆண்டுகளில் ஸ்பானிஷ், ஆங்கில மொழியில் வெளியான உலகப் புகழ்பெற்ற "டாக்டர் இல்லாத இடத்தில்' நூலை டேவிட் வெர்னர் எழுதினார். உலகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த நூலின், விரிவாக்கப்பட்ட புதிய தமிழாக்க பதிப்பு வெளியாகியுள்ளது.
நோய்கள், நோய்களுக்கான சிகிச்சையில் நவீன முறை என மருத்துவத் துறையில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. தொடர் மருத்துவ ஆராய்ச்சிகளின் அடிப்படையில் மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. உதாரணமாக ஊட்டச்சத்து விஷயத்தில் புரதச் சத்து நிறைந்த உணவுகளைக் குழந்தைகளுக்கு அதிக அளவில் அளிக்குமாறு முன்பு பரிந்துரைக்கப்பட்டது; ஆனால், குறைவான ஊட்டச்சத்து உள்ள குழந்தைகளுக்கு இப்போது மாவுச் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் அளிக்குமாறு நிபுணர்கள் பரிந்துரைப்பது இந்த விரிவாக்கப் பதிப்பில் இடம்பெற்றுள்ளது.
இதேபோன்று வயிற்றுப் புண் பிரச்னைகளுக்கு முன்பெல்லாம் அதிகம் பால் குடிக்குமாறு மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைத்தனர்; ஆனால், அண்மைக்கால மருத்துவ ஆராய்ச்சிகளின்படி இதற்கு பாலைவிட தண்ணீர் அதிகம் குடிப்பதே சிறந்தது என்ற கருத்து நூலில் இடம்பெற்றுள்ளது.
கொசு காரணமாக ஏற்படும் டெங்கு காய்ச்சல், சிக்குன்குன்யா,பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்றவற்றைக் குறித்த புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டிருப்பது இந்த விரிவாக்கப்பட்ட பதிப்பின் சிறப்பு அம்சங்களாகும். உடல் நலனைப் போலவே மன நலனுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் "மனநலப் பிரச்னைகள்' என்ற புதிய பகுதி சேர்க்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில் மருந்துகள் முக்கியப் பங்கு வகிப்பதால், மருந்துகளின் பட்டியல்-மருந்துகளின் பயன்-அளவு-முன்னெச்சரிக்கைகள்-தடை செய்யப்பட்ட மருந்துகளின் பெயருடன் மாற்று மருந்தின் பெயர் என விரிவாக பச்சை நிறத்தில் 90 பக்கங்கள் அச்சிடப்பட்டுள்ளது பொது மக்களுக்கு பயன் அளிக்கக்கூடியது. மொத்தத்தில் நோய்த் தடுப்புக்கு இந்த நூல் ஓர் ஆரோக்கிய காவலன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.