முகப்பு
நூல் அரங்கம்

காவிரிக் கரையிலே திருவையாறு

Updated On : 9 அக்டோபர், 2023 at 5:39 PM
பகிர்:

காவிரிக் கரையிலே திருவையாறு - நா.பிரேமசாயி, நீ.சீனிவாசன்; பக்.132; ரூ.125; பாரதி இலக்கியப் பயிலகம், திருவையாறு; ✆ 98945 28902.

'அளந்தால் சிறு ஊர் -ஆனால், புகழால் பூலோக கைலாயம்'  என்று  திருவையாறு தலத்தைப் போற்றுவர்.  அதன் சரித்திரத்தைச் சொல்லும் கட்டடங்கள் சிதிலமாகிவரும் நிலையில், அடுத்த தலைமுறையினருக்கு இதன் சிறப்புகளை எடுத்துச் சொல்லும் ஆவணமாக இந்த நூலை ஏராளமான படங்களுடன் தொகுத்துள்ளனர் நூலாசிரியர்கள்.

'சுந்தரமூர்த்தி நாயனார் திருக்கண்டியூர் பெருமானை வழிபட்ட பிறகு திருவையாற்று கோயிலைத் தரிசிக்க வரும்போது கரை புரண்டோடும் காவிரியின் தென்கரையில் சிக்கிக் கொண்டார்.  அக்கரை செல்ல வழியின்றித் தவித்து 'இறைவனைஎவ்வாறு தரிசிப்பேன்'  என்று உருகிப் பதிகம் பாட, காவிரி விலகியது.  சுந்தரரும் வடகரையில் வீற்றிருக்கும் ஐயாறப்பனை ஆனந்தமாக தரிசித்தார்'  என்பது வரலாறு.

Advertisement

காவிரி ஐந்து ஆறுகளாகப் பிரியும் பகுதியில் அமைந்தது திருஐயாறு தலம்.  இங்கு ஐயாறப்பர் கோயிலுடன் ராஜராஜனின் பட்டத்து அரசி உருவாக்கிய வட கயிலாயம் என்னும் பூலோக மாதேவீச்வரம், ராஜேந்திர சோழனின் பட்டத்து அரசி உருவாக்கிய தென் கயிலாயமுடையார் கோயில் ஆகியன பெருமைக்குச் சான்றாக உள்ளன.  

கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் வாழ்ந்த  ஊர்,  தமிழ் பத்திரிகையுலக முன்னோடியும் தேசியவாதியுமான ஜி.சுப்பிரமணிய ஐயர் பிறந்த ஊர், பல வரலாற்று நாயகர்கள் வாழ்ந்த ஊர்;   எண்ணற்ற சான்றோர் வருகை தந்த ஊர்...  அந்த வரலாறு சிறு அத்தியாயங்களில் கச்சிதமாகக் கூறப்பட்டுள்ளது. காவிரியின் கரையில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கலை, கலாசாரம், ஆன்மிகம், வரலாறு ஆகியவற்றைச் சுமந்து நிற்கும் இத்தலம் குறித்து உணர்வுபூர்வமாக தொகுக்கப்பட்ட இந்த நூலை வாசிக்க வேண்டியது  அவசியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.