திருமூலர் அருளிய திருமந்திரம்
திருமூலர் அருளிய திருமந்திரம் - உரையாசிரியர்: டாக்டர் சாது சு. ஸ்ரீனிவாஸ்; பக். 1,200; ரூ. 770 ; ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை - 35; ✆ 044- 2431 3646.
சைவ சமயத்தின் கருவூலமாகக் கருதப்படும் பன்னிரு திருமுறையுள் பத்தாம் திருமுறையாக வைத்துப் போற்றப்பெறுவது திருமூலர் அருளிய திருமந்திரம். 'சித்தர்களின் சித்தர்' என்று புகழப்படும் திருமூலர் மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து திருமந்திரத்தின் மூவாயிரம் பாடல்களை அருளியதாகக் கூறுவர் ('மூலன் உரைசெய்த மூவாயிரம் தமிழ்' என்று அவரை பாடியுள்ளார்).
திருமந்திரத்திலுள்ள மூவாயிரம் பாடல்களும் ஒன்பது தந்திரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளன. முதலாம் தந்திரத்தில், பதி, பசு, பாசம், நிலையாமை ஆகியன குறித்தும், இரண்டாம் தந்திரத்தில், சிவபெருமானின் முத்தொழில் பற்றியும், மூன்றாம் தந்திரத்தில், அட்டாங்க யோகம் உள்ளிட்ட பல்வேறு யோகங்கள் குறித்தும், நான்காம் தந்திரத்தில், சிவநாமமாகிய திருவைந்தெழுத்தின் சிறப்பையும், ஐந்தாம் தந்திரத்தில் சைவ சமயம், அதன் உட்பிரிவுகள் குறித்தும் தெளிவாக விளக்கியுள்ளார் திருமூலர்.
ஆறாம் தந்திரத்தில், தவம் செய்வோரின் பெருமை, திருநீற்றின் பெருமை ஆகியன விளக்கப்பட்டுள்ளன. ஏழாம் தந்திரத்தில், மனித உடலில் உள்ள மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை ஆகிய ஆறு ஆதாரங்கள் குறித்தும், எட்டாம் தந்திரத்தில், உயிர்கள் அடையக்கூடிய நிலைகள் குறித்தும், முக்தி குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. ஒன்பதாம் தந்திரத்தில், சிவபெருமானின் திருநடனம், ஞானம், முத்திரைகள் ஆகியவை குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
பாடல்களுக்கான விளக்கங்கள் எளிமையாகவும் ஆழமாகவும் அமைந்திருப்பது சிறப்பு. ஆன்மிகவாதிகள், சித்தர் மரபுகளில் ஈடுபாடு உடையோரும், தமிழ் ஆர்வலர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.