திரைப்பாடல்களில் உலா வரும் நிலா- ந.வாசுகி; பக்.144; ரூ.150; கற்பகம் புத்தகாலயம், சென்னை-600 017, ✆ 044 2431 4347.
நிலவுக்கும் கவிஞருக்கும் உள்ள பிணைப்பு என்பது உலகம் முழுமைக்கும் பொதுவானது. அதை அவர்கள் தங்களது மொழி ஆளுமையால் வகைப்படுத்தி பாடல்களின் உணர்வு கெடாமல் சந்தத்தில் அமர வைத்திருக்கிறார்கள்.
'உயர்ந்த மனிதன்' திரைப்படத்தில் 'பால் போலவே வான் மீதிலே யார் காணவே நீ காய்கிறாய்...' என்று கவிஞர் வாலி எழுதிய பாடலை குறிமுறை அவிழ்ப்பு (டீகோடிங்) செய்து நாணம், காதல், பிரிவு, ஏக்கம் என நீளும் இந்தப் பாடலின் உணர்வுகளை நாம் வரிக்கு வரி ஏற்றுக்கொள்ளும்படி விவரிக்கிறார் தொகுப்பாசிரியர். இப்படி இந்தத் தொகுப்பில் உள்ள 18 பாடல்களையும் நமக்கு பிரித்தாய்ந்து தந்திருக்கிறார் அவர்.
அடித்தட்டு மக்களுக்காகப் பாடிய பட்டுக்கோட்டையார் காதலுக்கும் பாடி, வெண்ணிலாவை தனது காதலிக்கு மூத்தவளா, இளையவளா என்று காதலுடன் கேட்கும் பாடல் நமக்கு ரசனையைக் கூட்டுகிறது.
அதேவேளை, காதலையும் தத்துவத்தையும் பாடிய கண்ணதாசன் தீண்டாமையை 'புதிதல்லவே தீண்டாமை என்பது; புதுமை அல்லவே அதை நீயும் சொன்னது...' என்று பாடி சமூக நீதி கோணத்தைக் காட்டுகிற இடமும் நம்மை ரசிக்க வைக்கிறது.
கண்ணதாசன் என்று நினைத்தால் பட்டுக்கோட்டையாராகவும், புலமைப்பித்தன் என்று நினைத்தால் வாலியாகவும், வாலி என்று நினைத்தால் மு.மேத்தாவாகவும் , தன்னைப் படைத்தவனைக் காட்டும் பாடல்களைக் காணும்போது இனம்புரியா ரசனையும் மயக்கமும் ஏற்படுகிறது. நிலவென்றால் அப்படித்தானே இருக்க வேண்டும்...!?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.