எரிக் ஹாப்ஸ்பாம்
உலகளாவிய மார்க்சிய சிந்தனையாளரும் வரலாற்று அறிஞருமான எரிக் ஹாப்ஸ்பாம் (1917 - 2012) குறித்த அறிமுகமாகவும் அவருடைய படைப்புகள் பற்றிய அவதானிப்புகளாகவும் தமிழில் எழுதப்பட்டிருக்கும் நூல்.
எரிக் ஹாப்ஸ்பாம்: மார்க்சியமும் வரலாறும்-மருதன்; பக்.208; ரூ. 250; கிழக்கு பதிப்பகம், சென்னை - 600 004, ✆ 044-4200 9603.
உலகளாவிய மார்க்சிய சிந்தனையாளரும் வரலாற்று அறிஞருமான எரிக் ஹாப்ஸ்பாம் (1917 - 2012) குறித்த அறிமுகமாகவும் அவருடைய படைப்புகள் பற்றிய அவதானிப்புகளாகவும் தமிழில் எழுதப்பட்டிருக்கும் நூல்.
மார்க்சியம் மட்டுமின்றிப் பல்வேறு கோட்பாடுகளுடன், இடதுசாரி இயக்கங்களுடனும் ஐரோப்பிய அறிவு மரபுகளுடனும் உரையாடி வந்தவர் ஹாப்ஸ்பாம். கட்டுரைகள், ஆய்வெழுத்துகள், நூல்கள், நூல் விமர்சனங்கள், விவாதங்கள், சொற்பொழிவுகள், நேர்காணல்கள், கடிதங்கள் என அவருடைய படைப்புகள் பெரும் எண்ணிக்கையிலானவை. ஹாப்ஸ்பாம் குறித்த அறிமுகமாக முதல் பகுதியில் சுருக்கமாக ஒரு யூதராகவும் கம்யூனிஸ்டாகவும் அவருடைய வாழ்க்கை வரலாற்றைச் சொல்கிறார் ஆசிரியர்.
Advertisement
ஹாப்ஸ்பாமுடைய புரட்சியின் காலம், முதலீட்டின் காலம், பேரரசின் காலம், தீவிரங்களின் காலம் நூல்களைப் பற்றிய அறிமுகமும் விவரணமும் இரண்டாம் பகுதியில் இடம்பெறுகின்றன. ஐரோப்பாவை மையமாகக் கொண்ட இந்த நூல்களின்வழி வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்க இயலுவதுடன் பிரமிப்பூட்டும் தகவல்களும் கிடைக்கின்றன.
புரட்சி நடைபெற்ற இடங்களில் அரசியல் களத்திலும் சமூகக் களத்திலும் ஏற்பட்ட மாற்றங்கள் மூலம் முதலாளித்துவக் கோட்பாடுகள் உருவான விதம் பற்றியும், தேசியவாதமும் தேசிய அடையாளமும் உருப்பெற்றதும் பேரரசுகள் எழுச்சி பெற்றதும், அதிகாரத்துக்காகவும் காலனி ஆதிக்கத்துக்காகவும் போட்டி போட்டது பற்றியும், "தீவிரங்களின் காலம்' நூலில் ஐரோப்பாவின் மாற்றங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
மூன்றாம், நாலாம் பகுதிகளான மார்க்சியமும் வரலாறும், வரலாறும் அரசியலும் ஹாப்ஸ்பாமின் மிகச் செறிவான பக்கங்களை வெளிப்படுத்துகின்றன. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை குறித்த அவருடைய பார்வைகள் தனித்துவமானவை. தமிழுக்கு நல்ல அறிமுகம்.