முகப்பு
நூல் அரங்கம்

மானுடம் பாடும் மகாநதி

கல்லூரி மாணவப் பருவத்தில் 1953-இல் எழுதிய முதல் கவிதையிலிருந்து இன்றும் எழுத்துலகில் அழுத்தமான தடம் பதித்து வரும் கவிஞர் சிற்பியுடனான 27 நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல்.

Updated On : 23 மார்ச், 2026 at 12:17 PM
பகிர்:

மானுடம் பாடும் மகாநதி- கவிஞர் சிற்பியின் நேர்காணல்கள்-தொகுப்பாசிரியர் கிருங்கை சேதுபதி; பக்.390; ரூ.360; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை-600 050, ✆ 044-2625 1968.

கல்லூரி மாணவப் பருவத்தில் 1953-இல் எழுதிய முதல் கவிதையிலிருந்து இன்றும் எழுத்துலகில் அழுத்தமான தடம் பதித்து வரும் கவிஞர் சிற்பியுடனான 27 நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல்.

1996-ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை கால வரிசைப்படி அமைந்து ஓர் எழுத்தாளனின் சிந்தனைப் பரிணாமத்தை இந்தப் புத்தகம் ஆவணமாக்கியிருக்கிறது.

தமிழாசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் என்ற நிலைகளில் ஆழ்ந்த முத்திரை பதித்தவர் சிற்பி. அறிமுக வரிகளில் அவர் கூறுவது போல, வயதுக்கும் அனுபவத்துக்கும் ஏற்ற வரிகளையும் கோடுகளையும் தாங்கி நிற்கும் கவியின் முகத்தை நாம் இந்தப் புத்தகம் முழுவதிலும் காணலாம்.

காலத்துக்குக் காலம் மாறிய சிந்தனைகளையும் மாறாத கொள்கைகளையும் அறிய முடிகிறது. அந்த வகையில் இது சுயசரிதமாகிறது!

அவருடைய நெடிய படைப்புப் பயணத்தில் தன்வரலாறோடு இலக்கியக் கோட்பாடுகளின் மாற்றங்களும் நம்மைச் சுற்றிய சமூகத்தின் வரலாறும் பதிவாகியுள்ளன.

புதுக்கவிதை என்பது முற்றிலுமாக மரபிலிருந்து முறித்துக் கொள்வதல்ல என்று கூறும் கவிஞர், மரபுக் கவிதைகளின் உயிருள்ள கூறுகளும் நிகழ் காலத்தின் அனுபவங்களும் பொருளுக்கேற்ற வடிவில் உருவாவதே புதுக்கவிதை என்று தனது மணிவிழாக் கால பேட்டியில் குறிப்பிடுகிறார்.

இலக்கியம் அந்தரத்தில் முளைத்து சூனியத்தில் பூப்பதில்லை; சமூக உணர்வு சாராத எதுவும் ஏற்புடையதல்ல என்கிறார்.

தமிழ்க் கவிதையின் தாழ்வான நிலையைக் குறித்து அவருடைய வேதனை, எப்போதும் சர்ச்சைக்குள்ளாகும் சாகித்திய அகாதெமி அமைப்பு பற்றிய கருத்துகள், இலக்கியம் பற்றிய அவரின் கோட்பாடுகள் சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளன.

எழுத்தார்வம் உள்ள எவரும் அவசியம் படித்துச் சுவைத்துக் காக்க வேண்டிய புத்தகம் என்றால் மிகையாகாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.