முகப்பு
புதுச்சேரி

குற்றச் செயல்களை அரசு கண்டு கொள்வதில்லை: தி.மு.க. குற்றச்சாட்டு

புதுச்சேரியில் நடைபெறும் குற்றச் செயல்களை மாநில அரசு கண்டுகொள்ளவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது.

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 11:17 am IST
பகிர்:

புதுச்சேரியில் நடைபெறும் குற்றச் செயல்களை மாநில அரசு கண்டுகொள்ளவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக அந்தக் கட்சியின் புதுச்சேரி மாநில அமைப்பாளர் எம்ஏஎஸ் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை:

புதுச்சேரி மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. குறிப்பாக கடந்த ஜூலை 17-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11- ஆம் தேதி வரை புதுச்சேரியில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழிப்பறிகளை பார்க்கும்போது மக்கள் வீதியில் நடமாட தயக்கம் காட்டுகின்றனர்.  கடந்த 25 நாள்களுக்குள் 3 கொலைச் சம்பவங்கள், ரூ.16 லட்சம் திருட்டு, 11 பவுன் நகைக் கொள்ளை, ரூ.2 லட்சம் வழிப்பறி என்று தொடர் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

Advertisement

Advertisement

அதுமட்டுமல்லாமல், ரௌடிகள் தேநீர் கடை மற்றும் வியாபார நிறுவனங்களை மாமூல் கேட்டு மிரட்டி தகராறு செய்துள்ளனர்.

மாநிலத்தில் உயர்பதவியில் உள்ள காவல்துறையினருக்குகூட அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படி ஊரெங்கும் கொலைகளும், வீதியெங்கும் வழிப்பறி கொள்ளைகளும் நடந்துவருவதை மாநில அரசு கண்டுகொள்ளவில்லை.

சுற்றுலாத் தலமாக விளங்கக்கூடிய புதுச்சேரி பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்தால் மாநில வருவாய் எப்படி சீரடையும்.  புதுச்சேரியை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் அரசு பொதுமக்களின் உயிர் காக்க, உடமைகளை காக்க, சீர்கெட்டுள்ள சட்டம் ஒழுங்கை சரிசெய்ய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏ.எஃப்டி தொழிலாளர்களுக்கு ஊதியம்: கடந்த பல மாதங்களாக ஏ.எஃப்.டி. தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காததால் அவர்களின் குடும்பங்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன. அவர்களுடைய பிள்ளைகளை மேற்படிப்பிற்கும் பள்ளிகளிலும் படிக்க வைப்பதற்கு சிரமப்படுகின்றனர். மத்திய கலந்தாய்வின் மூலம் பொறியியல், மருத்துவம் மற்றும் இதர படிப்புகளில் சேர பல மாணவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்தும் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் அவதியுறுவதை அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது.

உடனடியாக முதல்வர் தலையிட்டு அந்தத் தொழிலாளர்களுக்கு சம்பளத் தொகையினை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். முதல்வர் தனது வரவு செலவுத் திட்ட உரையில் குறிப்பிட்டுள்ளதுபோல பாரம்பரியமிக்க ஏ.எஃப்.டி. ஆலையினை திறப்பதற்கும் முழுமையாக அது இயங்குவதற்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளோடு மத்திய அரசை அணுக வேண்டும். இதில் காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் இடையில் நடக்கின்ற பனிப்போரினால் தொழிலாளர் குடும்பங்கள் பாதிக்கப்படக் கூடாது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments