மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்க 100% மானியம்
மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்கும் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம் அளிக்கப்படும் என புதுச்சேரி வேளாண் துறை
மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்கும் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம் அளிக்கப்படும் என புதுச்சேரி வேளாண் துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வேளாண்துறை, மாநில நில நீர்ப் பிரிவு மற்றும் மண்வளப் பாதுகாப்புத் துறை துணை இயக்குநர் சி.வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
புதுச்சேரி பிராந்தியம் அனைத்து உபயோகங்களுக்கும் முற்றிலுமாக நிலத்தடி நீரையே சார்ந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் நீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்ததால், நிலத்தடி நீர் மட்டம் 15 முதல் 55 மீட்டர் ஆழம் வரை சென்றுவிட்டது.
Advertisement
Advertisement
அதிகளவு நிலத்தடி நீர் வெளிக்கொணரப் படுவதால், புதுச்சேரி பிரதேச நிலத்தடி நீரில் கடல் நீர் ஊடுருவுதல் மற்றும் நீரின் தன்மையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, இக்கட்டான இந்தத் தருணத்தில் நிலத்தடி நீரின் வளத்தைப் பாதுகாக்கவும், அதன் வளம் மற்றும் தன்மையினை மேம்படுத்தவும், மழை நீர் சேகரிப்பு மற்றும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தி அதற்குரிய பணிகளைத் துரிதமாக, அதிகளவில் மேற்கொள்வது அவசியமாகிறது.
புதுச்சேரியின் நிலத்தடி நீர்வளத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தில், வேளாண் துறையின் மாநில நிலத்தடி நீர்ப் பிரிவின் மூலம், மழை நீர் சேகரிப்புப் பணிகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக விவசாயிகளுக்கு தங்கள் நிலங்களில் உள்ள பழைய பழுதடைந்த கிணறுகளை பயன்படுத்தி மழை நீரைச் சேகரிக்கும் கட்டமைப்புகள் அமைக்க, 100 சதவீத மானியம் அளிக்கப்படுகிறது. அதிகபட்சம் ரூ. 15 ஆயிரம் வழங்கப்படுகிறது.
புதுச்சேரி மாநில பகுதியில் வயல்வெளிக் கிணறுகளைக் கொண்டுள்ள விவசாயிகள், இந்த அரிய மழை நீர் சேகரிப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறவும், குறைந்துகொண்டே போகும் நிலத்தடி நீரின் வளத்தைப் பாதுகாக்கவும் உதவ கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
பருவமழை பொழிந்து வரும் இந்தநேரத்தில் மழை நீர் சேகரிப்புத் திட்டத்தைச் செயல்படுத்தினால் கூடுதல் பலன் கிட்டும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, தட்டாஞ்சாவடியில் உள்ள வேளாண்துறை அலுவலகத்தில் மாநில நிலத்தடி நீர்ப் பிரிவில் விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்து அதே அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.