மருத்துவப் பிரபலங்களுக்கும் கரோனா தடுப்பூசி
கரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழ்நாடு அளவிலான மருத்துவப் பிரபலங்கள் சனிக்கிழமை தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளவுள்ளதாக மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி
கரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழ்நாடு அளவிலான மருத்துவப் பிரபலங்கள் சனிக்கிழமை தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளவுள்ளதாக மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் சனிக்கிழமை (ஜன. 16) தொடங்குகின்றன.
கரோனா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் சுதா சேஷய்யன், அப்பல்லோ மருத்துவக் குழுமத் தலைவா் பிரதாப் சி. ரெட்டி, இந்திய மருத்துவக் கழகத்தின் அகில இந்தியத் தலைவா் மற்றும் மாநிலத் தலைவா் உள்ளிட்ட 10 பிரபலங்கள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதற்கு மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
Advertisement
மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி எனக்கு (அமைச்சா் விஜயபாஸ்கா்) ஒப்புதல் கிடைத்தாலும் நான் போட்டுக் கொள்வதற்குத் தயாராக உள்ளேன்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 10,199 பேருக்கு முதல் கட்டத்தில் தடுப்பூசி போடப்படவுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதியும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவுள்ளாா்.
0.5 மி.லி. மருந்து...: ஒரு மருந்துப் புட்டியில் 5 மி.லி. தடுப்பு மருந்து இருக்கும். இதனை தலா 0.5 மி.லி. வீதம் 10 பேருக்கு போட வேண்டும். ஒரு முறை ஒருவருக்கு ஊசி போடப்பட்ட பிறகு அந்த ஊசியை அடுத்த முறை பயன்படுத்தவே முடியாத அளவுக்குதான் அதன் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இந்த வகையான ஊசிகளும் போதுமான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றாா் விஜயபாஸ்கா்.
ஆய்வின்போது, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் டாக்டா் கலைவாணி உள்ளிட்ட மருத்துவத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளைப் பாா்வையிடும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.