முகப்பு
ஆன்மிகம்

எடுத்துக் கொள்ளவேண்டிய உறுதிமொழி

   இவ்வுலகில் தாயன்புக்கு ஈடு இணையாக எதனையும் கூற முடியாது. மானிடப் பிறவிகள் மட்டுமில்லாமல் விலங்கினங்களும், பறவைகளும்கூட தாயன்புக்குக் கட்டுபட்டவைகளே. தாயின் கர்ப்ப வாசத்திலிருந்து ஆரம்பிக்கின்றது இந

Updated On : 25 டிசம்பர், 2023 at 1:43 PM
பகிர்:

   இவ்வுலகில் தாயன்புக்கு ஈடு இணையாக எதனையும் கூற முடியாது. மானிடப் பிறவிகள் மட்டுமில்லாமல் விலங்கினங்களும், பறவைகளும்கூட தாயன்புக்குக் கட்டுபட்டவைகளே. தாயின் கர்ப்ப வாசத்திலிருந்து ஆரம்பிக்கின்றது இந்தப் பந்தம். உறவினைப் பற்றி யாரும் நமக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை. இயற்கையாகவே "தாயன்பு' என்கிற உணர்வு, நம்மிடையே குடிகொண்டுள்ளது.

  நாம் பேசும் மொழியையும் தாய்மொழி என்றுதான் கூறுகிறோம். "அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்' என்று சொல்லுவதில்கூட அன்னைக்குத்தான் முதலிடம்!

  நமது இந்து மதத்திற்கு ஆணிவேராகக் கருதப்படுவது வேதங்கள். மானுடப் பிறவிகள் ஆற்ற வேண்டிய சில கடமைகளை அழகாக அவை போதித்துள்ளன. அதில் முதல் கடமையாகச் சொல்லப்படுவது, ""மாத்ரு தேவோ பவ'' -அதாவது "மாதா என்ற தெய்வத்தை வழிபடுகிறவனாக இரு' என்பது இதன் பொருள்.

  இந்த வேதக்கூற்றுக்கு இணங்க வாழ்ந்து காட்டிய மகான்கள், புண்ணியசீலர்கள் பலர். கைலாசபதியான பரமேஸ்வரன், ஆதிசங்கரராக இந்த பூவுலகில் அவதரித்து, குறைந்த காலமே இங்கு வாழ்ந்தார். ஆனால் இக்கால கட்டத்திற்குள் ஏராளமான நூல்களையும், அதன் மூலம் உபதேசங்களையும் அவர் அருளிச் செய்திருக்கிறார். துறவு வாழ்க்கையை மேற்கொண்டாலும், தன் தாய்க்குக் கொடுத்த வாக்கின்படி, அவள் முக்தியடையும் நிலையில் தாயின் முன் தோன்றினார் ஆதிசங்கரர். அவ்வமயம் மனம் நெகிழ்ந்து பரமஞானியான சங்கரர் அருளியதே "மாத்ரு பஞ்சகம்' எனச் சொல்லப்படும் ஐந்து முத்தான ஸ்லோகங்கள். அதில் தன் எண்ணக் குமுறல்களை நமக்கு அறிவுறுத்துகின்றார். அதில் கூறியபடி, ""ஒரு தாய்,

1. கர்ப்பத்தைத் தாங்கும்போது ஏற்பட்ட வலி, கருவின் எடை போன்ற வகைகளுக்காக ஏற்படும் துன்பங்களுக்கும்,

2. வயிற்றில் இருக்கும் சிசுவிற்காக தனக்குப் பிடித்தமான உணவு வகைகளைத் தவிர்த்ததற்கும்,

3. பேறுகாலத்தில் பட்ட வலிகளுக்கும்,

4. பிறந்த குழந்தையைப் பாலூட்டி, தாலாட்டி வளர்த்தமைக்கும்......

எந்த மைந்தனாவது பிரதியுபகாரம் செய்ய முடியுமா?'' என்று வினவுகிறார்.

  இப்படிப்பட்ட அன்னைக்கு எப்படி வேகாத அரிசியை (வாய்க்கரிசி) சமர்ப்பிப்பேன் என்றும் அரற்றுகிறார். நிறைவாக, ""அம்மா, என்னைப் பெற்றெடுக்கும்போது பொறுக்க முடியாத வேதனைச் சமயத்தில் "அம்மா! அப்பா! சிவபெருமானே' என்றும்; "கிருஷ்ணா, கோவிந்தா, ஹரே முகுந்தா!' என்றும் அழைத்த அந்த வாக்கோடு கூடிய என் கருணைத் தெய்வமே! என் இரு கைகளையும் தூக்கி உனக்கு அஞ்சலி செய்து உன்னைச் சரணடைகின்றேன்'' என்று பெற்ற தாய்க்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். ஒரு துறவியானாலும் தாய் என்கிற பந்தத்திலிருந்து விடுதலை கிடையாது என்று தெரிகிறது அல்லவா?

  வரும் சங்கர ஜெயந்தி நன்னாளில் (ஏப்ரல், 29) ஸ்ரீ ஆதி சங்கரர் படத்திற்கு பூஜை, ஆராதனை செய்வதோடு மட்டுமல்லாமல், முக்கியமான ஒரு உறுதியையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அது, ""எக்காரணம் கொண்டும் பெற்றோர்களை, முக்கியமாக அவர்களது அந்திமக் காலத்தில் பேணிக் காப்பதைத் தவிர்க்க மாட்டேன்'' என்பதேயாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.