காரைக்கால் பெருமாள் கோவிலில் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி
வைகுண்ட ஏகாதசி பகல் பத்து நிகழ்வில் 10-ம் நாளான ஞாயிற்றுக்கிழமை காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் நாச்சியார் திருக்கோலத்தில் வீதியுலா புறப்பட்டார்.
வைகுண்ட ஏகாதசி பகல் பத்து நிகழ்வில் 10-ம் நாளான ஞாயிற்றுக்கிழமை காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் நாச்சியார் திருக்கோலத்தில் வீதியுலா புறப்பட்டார்.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் மூலவரான அரங்கன் சயன நிலை கொண்டிருப்பதுபோன்று காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் மூலவரான ஸ்ரீ ரங்கநாதர் சயன நிலைகொண்டு காட்சியளிக்கிறார்.
நிகழாண்டு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த 14-ம் தேதி பகல் பத்து உற்சவம் தொடங்கியது. முதல்நாள் திருவாரபரணங்களுடனும், 2-ம் நாள் நீள்முடி கொண்டை, ரத்ன பதக்கத்திலும், 3-ம் நாள் நல்முத்து மாலை, அடுக்குப் பதக்கங்களுடனும், 4-ம் நாள் வைர அபய ஹஸ்தம், பவள மாலை அணிந்தும், 5-ம் நாள் முத்து கிரீடம், அடுக்குப் பதக்கங்களுடனும், 6-ம் நாள் பாண்டியன் கொண்டை, கதாயுதம் தரித்தும், 7-ம் நாள் வைர முடி கிரீடம், நீலப்பட்டாடை உடுத்தியும், 8-ம் நாள் விசிறிக் கொண்டை, ஸ்ரீவத்ஸவப் பதக்கம் அணிந்தும், 9-ம் நாள் சனிக்கிழமை மாங்காய் மாலை அணிந்து திருமார்பில் மகாலட்சுமியுடன் வீதியுலா புறப்பாடானார் நித்யகல்யாணப் பெருமாள்.
பகல் பத்து நாளின் இறுதியான ஞாயிற்றுக்கிழமை மாலை நாச்சியார் திருக்கோலமெனும் மோகனாவதாரத்தில், சாய்வுக் கொண்டையில் ஸ்ரீ நித்யக்கல்யாணப் பெருமாள் வீதியுலா புறப்பாடானார். கோவிலில் திருமங்கையாழ்வாரின் பாசுரங்கள் உ.வே.கு.அரங்கநாதாச்சாரியார் தலைமையில் படிக்கப்பட்டது.
திங்கள்கிழமை அதிகாலை 5 மணியளவில் கோவிலில் பரமபதவாசல் திறப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியையொட்டி மூவவர் ஸ்ரீ ரங்கநாதருக்கு வஜ்ராங்கி அணிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டில் இரு முறை மட்டுமே இந்த அங்கி அணிவிக்கப்படுவது வழக்கம். விழா ஏற்பாடுகளை ஸ்ரீ கைலாசநாதர், ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவில் நிர்வாகம் செய்துள்ளது.
நாச்சியார் திருக்கோலத்தில் காட்சியளித்த ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள்.