பரமபதவாசல் வழியாக காட்சிதரும் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள்
வைகுண்ட ஏகாதசி இராப்பத்து நிகழ்வாக தினமும் பக்தர்களுக்கு பரமபதவாசல் வழியாக வந்து காட்சி தருகிறார் காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள்.
வைகுண்ட ஏகாதசி இராப்பத்து நிகழ்வாக தினமும் பக்தர்களுக்கு பரமபதவாசல் வழியாக வந்து காட்சி தருகிறார் காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள்.
வைகுண்ட ஏகாதசி பகல் பத்து இராப் பத்து என்னும் திருவத்யயன உற்சவம் கடந்த 14-ம் தேதி பகல் பத்தாக தொடங்கி, 24-ம் தேதி பரமபதவாசல் திறப்பு செய்யப்பட்டது. பரமபதவாசல் திறப்பு நாளில் இருந்து இராப்பத்து நிகழ்ச்சிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் தொடர்ந்து 20 நாளும் சுவாமி பல்வேறு அலங்காரத்தில் வீதியுலாவுக்கு எழுந்தருளச் செய்யப்படுகிறது. பரமபதவாசல் திறப்பு நாளன்று எந்த வழியாக பெருமாள் காட்சி தந்தாரோ, அதேபோன்ற நிகழ்வை இராப்பத்து நிகழ்ச்சிகளிலும் இக்கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
இராப்பத்து 3-ம் நாளான நேற்றிரவு பெருமாள் சக்கரப் பதக்கம் அணிந்து, பச்சை பட்டாடை உடுத்தப்பட்டிருந்தார். திருவாய்மொழித் திருநாளின் சிறப்பு குறித்து உ.வே.கு.அரங்கநாதாச்சாரியார் பக்தர்களிடையே உரையாற்றினார். தொடர்ந்து பரமபதவாசல் திறப்பன்று சுவாமி எந்த வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தாரோ, அதேபோன்ற நிகழ்வை 3ம் நாள் இராப்பத்து நிகழ்ச்சியிலும் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் பரமபதவாசல் வழியாக வந்து நம்மாழ்வாருக்கு காட்சி தரும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த சிறப்பு ஏற்பாட்டினை அறிந்து திரளான பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகம் தரப்பில் கூறும்போது, பரமபதவாசல் திறப்பு என்பது இந்த குளிர்காலத்தில், அதிகாலை நேரத்தில் நடைபெறக் கூடியது. இந்த நாளில் பெரும்பாலான பக்தர்கள் வந்து பெருமாளை தரிசித்திருந்தாலும், பலர் வரமுடியாமல் போக பல காரணங்கள் இருக்கலாம். எல்லோரும் பரமபதவாசல் திறப்பு நாள் சிறப்பை நேரில் பார்த்து, தரிசிக்கும் வகையில் இராப்பத்து அனைத்து நாளிலும் இவ்வாறான ஏற்பாட்டை பக்தர்களுக்காக செய்துள்ளோம். இந்த ஏற்பாடு நிகழாண்டே முதல்முதலாக தொடங்கப்பட்டுள்ளது. பக்தர்களும் இதனை வெகுவாக வரவேற்கின்றனர் என தெரிவித்தனர்.