முகப்பு
ஆன்மிகம்

பழனியில் 100 ஆண்டைக் கடந்த சித்திரபுத்திர நாயனார் பூஜை

கையில் பாசக்கயிறுடன் எருமை வாகனத்தில் மனிதர்களின் வாழ்நாளை நிறைவுசெய்யும் பணியை செய்து வருபவர் தர்மராஜா.  இவருடன் எப்போதும் உடனிருந்து கணக்குப் பணிகள் செய்பவர் சித்ரகுப்தர்.  சித்ராபவுர்ணமி தினத்தில் தர்மராஜா, சித்ரகுப்தருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. 

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:16 AM
பகிர்:

பழனியில் சுமார் நூறு ஆண்டைக் கடந்து சித்திரா புத்திர நாயனார் பூஜை சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

கையில் பாசக்கயிறுடன் எருமை வாகனத்தில் மனிதர்களின் வாழ்நாளை நிறைவுசெய்யும் பணியை செய்து வருபவர் தர்மராஜா.  இவருடன் எப்போதும் உடனிருந்து கணக்குப் பணிகள் செய்பவர் சித்ரகுப்தர்.  சித்ராபவுர்ணமி தினத்தில் தர்மராஜா, சித்ரகுப்தருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. 

உலகை காக்கும் சிவபெருமான் வரைந்த படத்தில் கையில் எழுத்தாணி, ஏடுடன் உயிர் பெற்றவர் சித்திரகுப்தர்.  இவரை சித்திராபுத்திரர் என்றும் அழைப்பர்.  பழனி ஆவணி மூலவீதி தொப்புளாதேவர் மடத்தில் சுமார் நூறு ஆண்டுகளாக சித்ராபவுர்ணமியின் போது சித்திரபுத்திரருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.   குழந்தைப்பேறு, ஆயுள் பேறு வழங்கும் இந்த வழிபாட்டில் ஏராளமானோர் பங்கேற்கின்றனர். இதற்கென தனியே அமைக்கப்படும் பந்தலில் சிவபெருமான், நந்தி, சித்திராபுத்திரர், வெள்ளி ஏடு, எழுத்தாணிகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது. 

பந்தல் முழுக்க மாங்காய், பேரீட்சை, ஈச்சை, பாக்கு, தேங்காய், வாழைப்பழம் உள்ளிட்டவை கட்டப்படுகிறது.  இவை அனைத்துமே கொத்து, கொத்தாக மட்டுமே கட்டப்பட்டு வருவது மரபு. மேலும் சித்திராகுப்தர் முன்பாக சர்க்கரைபொங்கல், தேன்குழல் உள்ளிட்ட பதார்த்தங்களும், வாழைக்காய், முருங்கை, சுரைக்காய், வெள்ளரிக்காய் உள்ளிட்டவை நறுக்கப்பட்டு குவியல், குவியலாக வைக்கப்படுகிறது. 

மேலும் ஆரஞ்சு, சாத்துக்குடி, திராட்சை உள்ளிட்ட பல்வேறு பழவகைகளும், பொறி, சர்க்கரை, பொட்டுக்கடலை போன்றவையும் படையலாக படைக்கப்படுகிறது.  பலநூறு கிலோ எடையில் இவை படைக்கப்படுகிறது. 

இவை அனைத்தும் வியாழக்கிழமை பக்தர்களுக்கு அன்னதானமாக சமைக்கப்பட்டு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.  சித்ரகுப்தர் பூஜையின் போது ஓதுவார்கள் சித்திராபுத்திரா நாயனார் கதையை பாடலுடன் படிக்கின்றனர்.  புதன்கிழமை காலை முதல் மாலை வரை கதைபடிப்பது நடைபெறுகிறது.  இந்த பூஜையில் பெண்களே அதிக அளவில் பங்கேற்று வழிபடுகின்றனர். 

பூஜை நிறைவில் பக்தர்களுக்கு தாலிக்கயிறு, மஞ்சள்கிழங்கு, எலுமிச்சை ஆகியன வழங்கப்படுகிறது. 

இதுகுறித்து பூஜையை நடத்திவரும் சிவசுப்ரமணியம் என்பவர் கூறும்போது,

சித்திராபுத்திரர் பூஜை பாட்டனார் காலம் முதலே வழிபட்டு வரப்படுகிறது.  பூஜைக்கான பொருட்கள் குலைகளாக கொண்டு வந்து கட்டப்படுகிறது.  இங்கு வழிபடும் பலருக்கும் ஆயுட்பேறு, குழந்தைப்பேறு கிடைக்கிறது.  முன்பு இந்த பூஜையை காண பழனியின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து விடிய, விடிய அமர்ந்திருப்பர். அன்னதானத்திற்கான வரிசை தெருக்கோடி வரை நீண்டிருக்கும். தற்போது மக்கள் நீண்ட காலபூஜைகளில் பங்கேற்க முடிவதில்லை என தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.