ஆன்மிகம்

சாய்பாபா விரதத்தை முறையாகக் கடைப்பிடிப்பது எப்படி?

தினமணி

சாதி மத பேதமின்றி இந்துக்கள், இஸ்லாமியர்கள் உட்பட பல மதத்தினரும் தத்தமது மதத்தினை மறந்து சாய்பாபாவைத் தரிசித்தும் வணங்கியும் வருகின்றனர். 

சாய்பாபா, தனது பக்தர்கள் எந்த இடத்திலிருந்து, தன்னை நினைத்து வணங்கினாலும், அந்த பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவார் என்பது நிஜம். பல்வேறு  சிறப்புகளைக் கொண்ட சீரடி சாயி பாபாவின் 9 வியாழக்கிழமை விரதத்தின் வழிமுறை, வழிபாடு குறித்து இக்கட்டுரையில் பார்ப்போம். 

சாயி பாபாவின் விரத முறைகள்

• இந்த விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையில் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம்.

• ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் இந்த விரதத்தை கடைப்பிடிக்கலாம். 

• எந்த காரியத்திற்காக அல்லது எந்த வேண்டுதலுக்காக ஆரம்பிக்கிறோமோ, அது வெற்றிகரமாக நிறைவேற வேண்டும் என்று சாய்பாபாவை மனதில் நினைத்துக்கொண்டு  விரதத்தைத் தொடரலாம்.

• சாயி பாபா பூஜை செய்வதற்கு காலை அல்லது மாலை உகந்த நேரமாகும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் போது வெறும் வயிற்றுடன் பூஜை செய்யக்கூடாது. பழ,  திரவிய ஆகாரங்கள் (பால், டீ, காபி, பழங்கள், இனிப்புகள்) உட்கொண்டு செய்யவும். நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் ஏதாவது ஒருவேளை (மதியமோ, இரவோ) உணவு அருந்தலாம். வெறும் வயிற்றோடு பட்டினியாக இந்த  விரதத்தைச் செய்யக்கூடாது. 

• ஒரு பலகையில் மஞ்சள் துணியை விரித்து சாய் பாபா படத்தை வைத்து சுத்தமான நீரால் துடைத்து சந்தனம், குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும். சிலையாக  இருப்பின் தங்களால் இயன்ற அபிஷேகத்தைச் செய்யலாம். மஞ்சள் நிறம் கொண்ட மலர்களால் ஆன மாலையை சாய்பாபா படத்திற்கு அணிவிக்கவும். 

• தீபம், ஊதுபத்தியும் ஏற்றி சாயி விரத கதையைப் படிக்கவும். பிரசாதமாகப் பழங்கள், இனிப்புகள், கற்கண்டு எதுவானாலும் நைவேத்தியம் வைத்து, எல்லோருக்கும்  கொடுத்து சாய்பாபாவை பூஜிக்கலாம். 

• ஒன்பது வியாழக்கிழமைகளும் முடிந்தால் சாய்பாபா கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்யவும். முடியாதவர்கள் வீட்டிலேயே சாய்பாபாவின் பூஜையை பக்தி  சிரத்தையுடன் செய்யலாம். 

சரி, ஒருவேளை நீங்கள் வெளியூர் செல்வதாக இருந்தால் எப்படி விரதத்தைக் கடைப்பிடிப்பது? 

• வெளியூர் செல்வதாகவும் இருந்தாலும், ஒருவேளை உணவு உண்டு இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். 

• விரதமிருக்கும் ஒன்பது வாரங்களில் பெண்களுக்கு மாத விலக்கு அல்லது இன்ன பிற காரணங்களாலோ விரதம் இருக்க முடியவில்லை என்றால் அந்த வியாழக்கிழமையை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், அடுத்த வியாழக்கிழமை விரதம் இருந்து ஒன்பது வியாழக்கிழமைகளையும் நிறைவு செய்யலாம். 

விரத நிறைவு முறைகள்

• ஒன்பதாவது வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். அன்று ஐந்து ஏழைகளுக்கு தங்களால் இயன்ற உணவு அளிக்க வேண்டும். நேரடியாக உணவு அளிக்க  முடியாதவர்கள் யார் மூலமாகவும் பணமோ, உணவுப் பொருளோ கொடுத்து ஏற்பாடு செய்யலாம். 

• சாய்பாபாவின் மகிமை மற்றும் விரதத்தை மற்றவர்களுக்குச் சொல்லலாம். 9-வது வியாழக்கிழமை இந்த சாய் விரத புத்தகங்களை நம்முடைய வீட்டிற்கு அருகில்  இருப்பவர்களுக்கு கொடுக்கலாம். 

• புத்தகங்களை 5, 11, 21 என்ற அளவில் தங்களால் இயன்ற அளவு இலவசமாக வழங்கவும். சாயி புத்தகத்தைக் கொடுக்கும் முன்பு பூஜையில் வைத்து, பிறகு வழங்கவும்.  இதனால் புத்தகத்தைப் பெறும் பக்தரின் விருப்பங்களும் நிறைவேறும். 

மேற்கூறிய விதிமுறைகளின்படி விரதமும், விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும். இது சாயி பக்தர்களின் அசைக்க முடியாத  நம்பிக்கையாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT