முகப்பு
ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள்
பரிகாரத் தலங்கள்

கால சர்ப்ப தோஷம் போக்கும் ஆதிகேசவ பெருமாள்! ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

கால சர்ப்ப தோஷம் போக்கும் பரிகாரத் தலத்தைப் பற்றி ஜோதிட வல்லுநர் ஏ.எம். ராஜகோபாலன் தெரிவித்திருப்பது பற்றி..

பரிகாரத் தலங்கள்

கால சர்ப்ப தோஷம் போக்கும் ஆதிகேசவ பெருமாள்! ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

கால சர்ப்ப தோஷம் போக்கும் பரிகாரத் தலத்தைப் பற்றி ஜோதிட வல்லுநர் ஏ.எம். ராஜகோபாலன் தெரிவித்திருப்பது பற்றி..

Updated On : 6 மார்ச், 2026 at 5:00 AM
ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள்
பகிர்:

ஸ்ரீ பெரும்புதூரில் சர்ப்ப ராஜனான ஆதிசேஷனின் அம்சமான ஸ்ரீ ராமானுஜரின் திவ்ய மங்கள திருத்தலமாக ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் மற்றும் ஸ்ரீ பாஷ்யகார சுவாமி திருக்கோயில் விளங்குகிறது.

தொன்மை வரலாறு

புராணம் என்றால் பழமையான என்பது பொருளாகும். இத்திருத்தலத்தில் ஸ்தல வரலாறு பூதபுரி மஹாத்மியம் என்ற புராண வரலாற்று நூலில் சொல்லப்படுகிறது. அந்த வரலாறு குறித்து ஸ்கந்த புராணத்தில் கந்தப்பெருமான் அகத்தியருக்கு சொன்னதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி பழங்காலத்தில் சிறந்த ஆட்சி புரிந்த மாந்தாதா மகன் அம்பரீஷனின் மகன் யுவநாச்வன். அவனுக்கு நெடுநாள்களாக சந்தான பாக்கியம் இல்லாமல் புத்ரகாமேஷ்டி யாகம் செய்து ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு ஹாரிதன் எனப் பெயரிட்டு கல்வி வேள்விகளில் சிறந்தவனாக வளர்ந்தான். உரிய பருவத்தில் காசி ராஜரின் மகளை மணந்து நாட்டை நன்முறையில் ஆண்டு வந்தான்.

ஹாரிதன் ஒரு நாள் காட்டில் வேட்டையாடச் சென்றான். அங்குப் புலியொன்று பசுவைக் கொல்வதற்காகப் பசுவின் மேல் பாய்ந்து, பிடரியைக் கடித்துக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த ஹாரிதன் பசுவின் மேல் இறக்கப்பட்டு, அந்த புலியைக் கொல்ல அம்பு ஒன்றைக் குறி பார்த்து எய்தான். அம்பு பட்ட புலி, பசுவைக் கடித்து கொன்றவாறே தானும் உயிரை விட்டது. தன்னால் பசு இறந்ததால் அவனுக்கு கோஹத்தி தோஷம் ஏற்பட்டதாகக் கருதி மிகவும் மனம் வருந்தினான். அப்போது ஓர் அசரிரீ மன்னா வருந்த வேண்டாம். சத்யவிரத சேத்திரத்தை அடுத்த அருணாரண்யத்தில் அனந்த சரஸின் கரையில் பூதபுரி ஷேத்திரம் உள்ளது. அங்குச் சென்று அனந்த சரஸில் நீராடி, ஆதிகேசவனை குறித்து தவம் செய்து வணங்கினால் உன் பாவம் தீரும் நன்மை ஏற்படும் என்றது.

ஹாரிதன் தன் தலைநகர் வந்தடைந்து, அவனது குருவான வசிஷ்டரை வணங்கி நடந்ததைக் கூறி பூதபுரி ஷேத்திரம் எங்கு உள்ளது எனக் கேட்டான். வசிஷ்டர் பூதபுரி இருக்கும் இடத்தைத் தெரிவித்து, தவம் செய்வதற்கும், தவத்துக்குரிய மந்திரத்தையும் உபதேசித்து அனுப்பினார். ஹாரிதன் பூதபுரி என்று அழைக்கப்பட்ட அந்த நகருக்குப் பெயர் ஏற்படக் காரணம் என்ன என்று கேட்க ஆச்சாரியார் வசிஷ்டர் கீழ்க்கண்ட வரலாற்று விவரங்களைக் கூறினார்.

பூதங்கள் தவம் செய்து சாபம் தீர்ந்த வரலாறு

ருத்ரன் கைலாயத்தில் நடனம் புரியும்போது, அவரது ஆடைகள் களைந்து, ஜடைகள் விரிந்து, மெய் மறந்த நிலையில் ருத்ர தாண்டவம் செய்து கொண்டிருந்தார். அதைக் கண்ட ருத்ரனது ஏவலர்களான பூத கணங்கள் வியந்து சிரிக்க கோபம் கொண்ட ருத்திரன் அவர்களை கைலாயத்தை விட்டு அகலச் சாபம் கொடுத்தார். சாபத்தால் கலங்கிய பூதகணங்கள் பிரம்மனிடம் சென்று முறையிட்டன. பிரம்மா குற்றம் தீர்வதற்கு ஏற்ற வழிவகை கூறினார். திருவேங்கட மலைக்கு தெற்கே சத்தியவிரத ஷேத்திரம் உள்ளது. அங்குச் சென்று ஸ்ரீமந் நாராயணனை நோக்கி கடுந்தவம் புரிந்தால் சாப விமோசனம் கிடைக்கும் என அருளினார். அதன்படி பூதகணங்கள், அருணாரண்யம் வந்து பெருமாளை நோக்கி ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்தனர்.

ஸ்ரீ மந் நாராயணன் ஆதிகேச பெருமாளாகப் பூத கணங்களுக்கு காட்சி தந்து, ஸ்ரீ ஆதிசேஷனால் ஏற்படுத்தப்பட்ட ஆனந்த சரஸ் தடாகத்தில் நீராடச் செய்து, குற்றம் தீர்ந்து, ருத்ரனை வரவழைத்து பூத கணங்களை மன்னித்து கைலாயம் அழைத்துச் செல்லச் செய்தார். பிறகு பூதகணங்கள் ருத்ரன் அனுமதி பெற்று பெருமாள் காட்சி தந்து அருள் செய்த அங்கேயே ஸந்நித்யம் செய்ய வேண்டி புதிதாக ஒரு நகரை நிர்மாணித்தன. பூதங்கணங்களால் இந்நகர் நிர்மாணிக்கப்பட்டதால் பூதபுரி என்ற பெயர் பெற்றது என வசிஷ்டர் கூறினார். பிற்காலத்தில் அந்த பூதபுரியே மருவி ஸ்ரீ பெரும்புதூர் என வழங்கப்படலாயிற்று. இத்தகைய பெருமை வாய்ந்த புராண திருத்தலம் தான் ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ ஆதி கேசவ பெருமாள் மற்றும் ஸ்ரீ பாஷ்யகார சுவாமி திருக்கோயில்.

ராமனுஜர் அவதாரத் தலம்

சதுர் யுகங்களில் கலியுகத்தில் தமிழகத்தில் சென்னை, திருவல்லிக்கேணி, திருநீர்மலை, திருவிடந்தை, திருக்கடல்மலை, திருபுட்குழி, திருவள்ளூர், திருவேங்கடம், திருநின்றவூர், சத்திய விரத சேத்திரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் ஆகிய திவ்ய தேசங்கள் மட்டுமல்லாமல் முதலாழ்வார் மூவர், திருமழிசை ஆழ்வார், திருக்கச்சி நம்பிகள், முதலியாண்டான் ஆகிய அவதார புருஷர்கள் அவதரித்த தொண்டை மண்டலத்தின் நடுவே அளவாலும் தரத்தாலும் உயர்ந்து புதிய ஊர் ஒன்று உருவாகி இருந்தது. அங்கு உலகம் உருவான உடனேயே அதனை நிர்வகிக்க ஆதியிலேயே கேசவன் எனும் திருப்பெயருடன் திருமால் எழுந்தருளினார். அதுவே ஸ்ரீ பெரும்புதூர் ஆகும். காக்கும் கடவுளான திருமால் உரையும் தலமானதால் ஸ்ரீ, திரு என்னும் அடைமொழிகள் சேர்த்து ஸ்ரீ பெரும்புதூர், திருப்பெரும்புதூர் என வழங்கப்பட்டது.

ஹாரிதன் புலன்களை வென்று, இதயத்தில் ஸ்ரீ மந் நாராயணனைத் தியானித்து, ஆச்சாரியர் வசிஷ்டர் உபதேசித்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு 100 வருடங்கள் கடும் தவம் புரிந்தான். ஸ்ரீ மந் நாராயணன் ஹாரிதனின் தவத்திற்கு மகிழ்ந்து இத்தலத்தில் காட்சி தந்து கோஹத்தி தோஷம் நீங்கியதாக அருள்புரிந்தார். பிறகு அழிந்த இந்த நகரை பழையபடி நிர்மாணித்து, திருக்கோயிலில் தவறாது உற்சவங்கள் பூஜைகள் நடத்தி வர ஏற்பாடு செய்து அதன்படி இன்றும் நடத்தப்பட்டு வருகிறது. நாளடைவில் வளர்ந்து வந்த இத்தலம் ஸ்ரீ வைணவம் எனும் மார்க்கத்தில் ஒரு புண்ணியனைப் பெற்றெடுத்து சிறக்கப்போகும் புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்கும் என்று ஸ்ரீ மந் நாராயணன் ஹாரிதனுக்கு வாக்களித்தார். அதன் சிறப்பு ஸ்ரீ ராமானுஜர் அவதார பிறப்பு இத்தலத்தில் நடந்தேறியது.

திருக்கோயில் அமைப்பு

விஜயநகர சாம்ராஜ்யத்தின் பேரரசரான ஸ்ரீ கிருஷ்ண தேவராயரால் திருக்கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு முழு கட்டமைப்பைப் பெற்றது.

சிற்பச் சிறப்பு

இத்திருக்கோயிலுள்ள ஒரே கல்லில் ஆன பூத கணங்களால் நிலை நிறுத்தப்பட்ட, நான்கு மிகப்பெரிய தூண்களில் அழகிய வடிவிலும், உயிரோட்டத்துடன் கலை நயத்துடனும் செதுக்கப்பட்ட தசாவதார சிற்பங்கள், யாழி, குதிரை மீது அமர்ந்த போர் வீரர்களையும் இதன் சிறப்பு வேறுபாடுகளையும் காண்பதற்கு வியப்பை உண்டாக்கும், கோயிலின் கோபுரவாயில் ராமாயண புடைப்பு சிற்பங்கள் கற்களால் செதுக்கப்பட்டுள்ளன. அவதார மண்டபத்தில் உள்ள 74 சிம்மாசனாதிபதிகள் திருவுருவங்கள் பார்க்கத் தரிசிக்கத் தகுந்தவை ஆகும்.

காலம் காட்டும் கல்வெட்டுகள்

இத்திருக்கோயிலில் 22 கல்வெட்டுகள் உள்ளன. அவைகள் சுமார் 13-ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவையாகும். மத்திய அரசின் தொல்லியல் துறை மூலம் படி எடுக்கப்பட்டு 1922 ஆம் வருட ஆண்டு அறிக்கை மூலம் குறிப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை மத்திய கல்வெட்டு துறையால் அவை வெளியிடப்படவில்லை. இந்த திருக்கோயில் 6.35 ஏக்கர் பரப்பளவிலும், ஆதிசேஷனால் உருவாக்கப்பட்ட அனந்தசரஸ் திருக்குளம் 3 ஏக்கர் பரப்பளவிலும் ஆலயத்தின் மேற்கு பகுதியில் உள்ளது. அனந்தசரஸ் திருக்குளம் திருப்பாற்கடல் ஸ்ரீ மந் நாராயணனின் படுக்கையான ஸ்ரீ ஆதிசேசனால் உண்டாக்கப்பட்டதால் ராகு-கேது-பாம்பு உருவில் உள்ள கிரகங்களால் ஏற்படும் கால சர்ப்ப தோஷம் இந்த குலத்தில் நீராடினால் நீங்கும் என்பது சிறப்பாகும். கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்திற்கு, முன்புறம் 16 கால் மண்டபமும், நான்கு கால் மண்டபமும் உள்ளன. அதற்கு எதிரில் ஸ்ரீராமானுஜர் அவதார ஸ்தலமும் அமைந்துள்ளது.

ராஜ கோபுரத்திற்கு உள்ளாக பலி பீடம் மற்றும் கொடி மரமும் அமைந்துள்ளன. இடதுபுறம் ஸ்ரீ வேணுகோபாலன் சன்னதி. மேற்கு நோக்கி தாண்டிச் சென்றால் சன்னதிக்குச் செல்லும் படிக்கட்டுகள் அமைந்துள்ளன. ஏறியவுடன் குதிரை கால் மண்டபமும், தங்க மண்டபமும், உள்நுழைந்தால் வலப்புறம் சிறிய கண்ணாடி அறையும், சன்னதிக்குச் செல்லும் பிரதான நுழைவாயிலில் யாழி மற்றும் குதிரை வீரன் சிற்பங்கள் செதுக்கப்பட்ட மிகப் பிரம்மாண்டமான ஒரே கல்லிலான ஆறு தூண்களினால் தாங்கி நிற்கும் பூதகால் மண்டபமும் அமைந்துள்ளது.

பிரதான மண்டபத்தின் எதிரில் ஸ்ரீ ராமானுஜரின் சன்னதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. ஸ்ரீ மணவாள மாமுனிகள் வரும்போது, இவ்வூரில் உள்ள வைணவர்கள் ஸ்ரீ பாஷ்யம் வியாக்யானம் செய்ததை நினைவுகூரும் வகையில் சன்னதியின் பின்புறம் கல் தூணில் ஸ்ரீ மணவாளமனிகள் உருவம் வடித்து பொன் முலாம் கவசம் சாற்றப்பட்டுள்ளது. சன்னதியின் வலது புறம் கிழக்கு நோக்கி ஸ்ரீ அதிகேசவ பெருமாள் உபய நாச்சிமார்களுடன் நின்ற கோணத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். எதிரில் பெரிய திருவடி நின்ற கோலத்தில் அஞ்சலி கரங்களுடன் அருளுகிறார். உள்பிரகாரத்தில், ஸ்ரீ நம்மாழ்வார், ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள், ஸ்ரீ ஆளவந்தார், ஸ்ரீ வேதாந்தாச்சாரியார் ஆகியோர் சன்னதிகள் அமைந்துள்ளன.

தங்க விமானம்

வெளிப் பிரகாரத்தில் தனிக்கோயிலில் தாயார் ஸ்ரீ எத்திராஜ நாதவள்ளி தாயார் என்ற பெயரோடு நான்கு கரங்கள் கொண்டு பத்ம பீடத்திலிருந்து அருள் வழங்கிக் கொண்டிருக்கிறார். உலகில் உள்ள அனைத்து வைணவ கோயில்களிலும் எங்கும் இல்லாத பெருமையாக ஸ்ரீ ராமானுஜரின் பட்டப்பெயரான ஸ்ரீ எத்திராஜ என்ற பெயரைக் கொண்டு அமைந்திருப்பது இங்கு மட்டுமே ஆகும். மேலும், ஸ்ரீ ராமர் சன்னதியும், வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ளது. ராஜகோபுரத்திற்கு வெளியே அவதார மண்டபத்தை ஒட்டி இடப்புறம் அவரது சீடர்களில் ஒருவரான அருளாளர், ஸ்ரீ கூரத்தாழ்வார் சன்னதியும், கோயிலின் தென்புறத்தில் அருளாளர் ஸ்ரீ மணவாளமாமுனிகள் சன்னதியும் துணைக்கோயிலாக அமைந்துள்ளன.

ஸ்ரீ மணவாள மாமுனிகள் வடக்கு நோக்கி அஞ்சலி கரத்துடன் அமைந்த கோலத்தில், சேஷ பீடத்தில் அருளுகிறார். ஸ்ரீ மணவாள மாமுனிகள் சன்னதியின் இடது புறத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்த வண்ணம் திருமால் ஸ்ரீ தேவி பூதேவியுடன் வீற்றிருந்த கோலத்தில் ஸ்ரீமண்ணளந்த பெருமாளாகக் காட்சி அருளுகிறார். இந்த சன்னதியின் பெருமை உணர்ந்தவர்கள் அங்குச் சென்று தரிசனம் செய்யாமல் செல்ல மாட்டார்கள். ஸ்ரீ ராமானுஜருக்கு எழுதுவதற்காக முதன்முதலில் அட்சராப்பியாசம் என்னும் எழுத்து அறிவித்தல் நடந்த இடம் இதுவாகும். இங்கு ஸ்ரீ பிள்ளை லோகாச்சாரியார் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். சன்னதி தெருவின் கடைசியில் ஸ்ரீ வினய ஆஞ்சநேயர் சன்னதியும் உள்ளது.

பெருமாளுக்கு ஸ்ரீ ஆதிகேச பெருமாள் என்ற பெயரும், தனிக் கோயிலில் நாச்சியாராக ஸ்ரீ எத்திராஜ நாதவல்லி தாயார் என்ற பெயருடன் வைகானச ஆகம பூஜை முறைப்படி நடைபெறும் இத்திருக்கோயிலில் தென்கலை ஸ்ரீ வைஷ்ணவ மரபு பின்பற்றப்படுகிறது.

ஸ்ரீ ராமானுஜர்

ஸ்ரீ ராமானுஜர் தானுகந்த திருமேனியாக இங்குப் பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார். ஸ்ரீ ராமானுஜரின் 120 ஆண்டுக்கால வாழ்வில், அவர் மனிதக் குல வரலாற்றில் ஒரு வியப்பூட்டும் தத்துவமேதை, சமூக புரட்சியாளர், மனிதப் பண்புகளில் களஞ்சியம், மாசு மரவற்ற ஆத்ம குணச் செம்மல், பூவுலகில் வைகுந்தம் காட்டிய புண்ணியன், மனிதாபிமானம் மிக்க சமுதாயவாதி, சரியான சமய சமூக நோக்கு கொண்டவர், வைணவ நெறியை மக்கள் நெறியாக்கிய வித்தகர், சேரியில் பிறந்த மனிதர்களை திருக்குலத்தார் ஆக்கி தெய்வத்தை வழிபட நெறிப்படுத்திய நியாயவான், இனம், குலம், மொழி, வேற்றுமை இல்லாத அன்பு நிறைய வளர்த்தவர், மாற்று மத மங்கைகையும் துலுக்கநாச்சியார் ஆக்கி வழிபடச் செய்து மத நல்லிணக்கத்திற்கு அடிக்கோலியவர், குடிநீர் வசதிக்காக தொண்டனூரில் பெரியதொரு நீர்த்தேக்கம் அமைத்த சமூக நலத் தொண்டர், திருமந்திர பொருளை அனைவரும் அறிந்து நல்வாழ்வு வாழ திருக்கோஷ்டியூர் கோயில் விமானத்தில் ஏறி அனைவரும் உய்யக் குரல் கொடுத்த குணாளர், திருமலை திருவேங்கடமுடையான் திருமாலே என நிரூபணம் செய்ய முன் நின்ற முனைவன்.

ராமானுஜர் ஸ்ரீ விஷிஸ்டாத்வைதம் எனும் ஸ்ரீ வைணவ தத்துவத்தையும், ஓம் நமோ நாராயணாய நம என்னும் ரகசிய மந்திரத்தையும் அகிலமும் அறியச் செய்து பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்தார். ஸ்ரீராமானுஜர் சீடர்களின் விருப்பப்படி பின்பு உள்ளோர் தரிசிக்கும் பொருட்டு ஸ்ரீ ராமானுஜர் திருவுருவ உற்சவ விக்கிரகத்தை வடித்து ஸ்ரீ ராமானுஜர் முன் சமர்ப்பிக்க உற்சவ விக்கிரகத்தை தன் இரு கரத்தாலும் ஆரத் தழுவி தனது சக்தியை அளித்து தானுகந்த திருமேனியாக இத்தலத்தில் அருள்பாலித்து வருகிறார்.

அவதாரம்

திருப்பாற்கடல் ஸ்ரீ மந் நாராயணனின் படுக்கையான ஸ்ரீ ஆதிசேஷன், ஸ்ரீ ராம அவதாரத்தில் ஸ்ரீ ராமனின் இளையவன் லட்சுமணனாகவும், ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரத்தில் கிருஷ்ணரின் மூத்தவர் ஸ்ரீ பலராமன் ஆகவும் அவதரித்த பின்பு கலியுகத்தில் ராமானுஜராக ஸ்ரீ பெரும்புதூரில் அவதரித்தார். 11ஆம் நூற்றாண்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிபி 1017 ஆம் ஆண்டு பூதபுரி எனப்பட்ட இந்த தலத்தில் கலியுகம் 4,119 சாலிவாகன சக ஆண்டு 939 பிங்கள வருடம் சித்திரை மாதம் 13 ஆம் நாள், வியாழக்கிழமை, வளர்பிறை பஞ்சமி திதி திருவாதிரை திரு நட்சத்திரத்தில் கடக லக்னத்தில் ஸ்ரீ பெரும்புதூர் ஆசூரி கேசவசோமயாஜிலு பட்டருக்கும், காந்திமதி என்னும் பூமி பிராட்டியாருக்கும் ஒரே செல்வத் திருமகனாக அவதரித்தார். அவதார தினக்குறிப்பை லார்டு மெக்கன்சியின் குறிப்பு உறுதி செய்கின்றது. தஞ்சமாம்பாள் என்பவர் இவரது மனைவியாகும்.

ராமானுஜரின் திருப்பெயர்கள்

ராமானுஜர் அவதரித்த போது ஸ்ரீ இளையாழ்வார் என்ற பெயரை அவரது மாமனான திருமலா நம்பியால் சூட்டப்பட்டது. மதுராந்தகத்தில் அவருக்குப் பஞ்ச நமஸ்காரம் செய்யும் போது பெரிய நம்பிகளால் ஸ்ரீ இராமானுஜர் என தாச பெயர் சூட்டப்பட்டது. அவர் சன்யாசம் கைக் கொண்டபோது காஞ்சிபுரத்து தேவராஜ பெருமாளால் யதிராஜர் என்ற பெயர் சூட்டப்பட்டது. திருவரங்கத்துத் திருக்கோயிலில் உடையவர் என்று அழைக்கப்பட்டார். திருக்கோஷ்டியூர் நம்பியால் எம்பெருமானார் எனப் பட்டம் சூட்டப்பட்டார். திருப்பாவை ஜீயர், ஸ்ரீபாஷ்யகாரர், ஸ்ரீ லட்சுமண முனி, சடகோபன் பொன்னடி, கோவிலண்ணன் ஸ்ரீ கோதாகிருதக்ஞர் ஆகிய பெயர்களும் ராமானுஜருக்கு உண்டு.

ராமானுஜரின் அதி முக்கிய திருமேனிகள்

1. ஸ்ரீ பவியஷ்யத்ராமானுஜர் - ஆழ்வார் திருநகர்

2. தாம்உகந்த திருமேனி - ஸ்ரீபெரும்புதூர்

3. தமர் உகந்த திருமேனி - ஸ்ரீநாராயணபுரம். மேல்கோட்டை கர்நாடக மாநிலம்

4. தானான திருமேனி - ஸ்ரீரங்கம்

5. உபதேச ராமானுஜர்- திருமலை.

ராமானுஜரின் முக்கிய சீடர்கள்

ஸ்ரீகூரத்தாழ்வான், ஸ்ரீமுதலியாண்டான், ஸ்ரீஎம்பார், ஸ்ரீதிருக்குருகை பிரான்பிள்ளை, ஸ்ரீஅருளாளப்பெருமாள் எம்பெருமானார், ஸ்ரீசோமாசியாண்டான்.

ஸ்ரீராமானுஜர் அருளி செய்த நவமாமணிகள்

ஸ்ரீபாஷ்யம் வேதாந்ததீபம், வேதாந்தசாரம், வேதாந்த சங்கிரகம், கீதா பாஷ்யம், சரணாகதிகத்யம், வைகுண்டகதியம், நித்யம்.

திருவிழாக்கள்

ஸ்ரீ ராமானுஜர் அவதார உற்சவம், ஸ்ரீஆதிகேசவபெருமாள் பிரமோற்சவம், தெப்பத் திருவிழா, வசந்த உற்சவம், கோடை உற்சவம், ஸ்ரீஆண்டாள் திருவாடிப்பூரம், ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி, ஸ்ரீ நவராத்திரி உற்சவம், ஸ்ரீ மணவாள மாமுனிகள் உற்சவம், கார்த்திகை தீபம், தனூர் மாதம், அத்தியயன உற்சவம், குரு புஷ்ய உற்சவம், பரி வேட்டை உற்சவம், மாசி மகம், ஸ்ரீ வினையா ஆஞ்சநேயர் உற்சவம், பல்லவ உற்சவம், ஸ்ரீ ராமநவமி உற்சவம், ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் திருநட்சத்திர உற்சவங்கள் மற்றும் பிற உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன.

முக்கிய தரிசன நாள்கள்

வார நாள்களில் குருவாக விளங்கும் ஸ்ரீ ராமானுஜரை வியாழக்கிழமைகளில் தரிசிக்கவும், வெள்ளிக்கிழமைகளில் தாயாரை வேண்டிக்கொண்டு, சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு அர்ச்சனையும் ஞாயிற்றுக்கிழமை பொதுவாகத் தரிசனம் செய்யும் நடைமுறை பொதுமக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது.

திருத்தேர்

பல்வேறு சிறப்புகளைக் கொண்ட ராமானுஜர் (கால சர்ப்ப தோஷ) பரிகாரத் தலம் பற்றி தினமணி வெள்ளிமணியில் புகழ்பெற்ற ஜோதிட வல்லுநர் ஏ.எம். ராஜகோபாலன் என்ன சொல்லியிருக்கிறார்?

ராகு, கேது, ஆகிய இரு நிழற் கிரகங்களின் அளவற்ற சக்தியினால் ஏற்படும் கால சர்ப்ப தோஷம், நாக தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் ஆகியவற்றிற்குத் தக்க பரிகாரத்தை அளிக்கும் சக்தி வாய்ந்த திருத்தலங்களில், சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் முதன்மை பெற்றதாகும்.

ஸ்ரீ ஆதிசேடனின் அம்சமாக ஸ்ரீ ராமானுஜர் அவதரித்த திவ்ய க்ஷேத்ரம் இது. சர்ப்பங்களுக்கு ராஜனான ஆதிசேஷன் தனது சக்தியினால் சிருஷ்டி செய்த 'அனந்த சரஸ்' என்ற திருக்குளத்தில் நீராடி, அனந்தனின் (ஆதிசேடன்) அவதாரமான ஸ்ரீ ராமானுஜரையும், அவர் பூஜித்த ஸ்ரீ ஆதிகேசவன், யதிராஜ நாத வல்லி தாயாரையும், நெய் தீபம் ஏற்றி வலம் வந்து, தரிசித்து வழிபடுவதன் மூலம் மிகக் கடுமையான கால சர்ப்ப தோஷம் நிவர்த்தியாகும்.

ஜீவ விக்ரகமான ஸ்ரீ ராமானுஜரின் திவ்ய மங்கள திருமேனியை பின்புறத்திலிருந்து தரிசிக்கும்போது, படம் விரித்து ஆடும் சர்ப்பம் போன்றே இருப்பதைக் காணும்போது மெய்சிலிர்க்கும்.

தரிசன நேரம்

தினமும் காலை 6.30 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.15 மணி வரையும் பொதுவான தரிசன நேரமாக கருதப்பட்டு தினமும் ஆறு கால பூஜை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாதமும் மாத திருவாதிரையில் ஸ்ரீ ராமானுஜர் திருநட்சத்திரம் அவரது அவதார மண்டபத்தில் சிறப்புற நடைபெற்று வருகிறது. பக்தர்கள் தங்கள் காரியம் சித்தியாவதற்காக உடையவரின் ஈரவாடை தீர்த்தம் வாங்கி செல்வதை பெரும் பேராக கருதுகின்றனர்.

நித்திய பூமாலை திட்டம்

இத்திருக்கோயிலில் ஸ்ரீஆதிகேசபெருமாள், எத்திராஜ நாதவல்லி தாயார், ஸ்ரீ ராமானுஜர், மூலவர் மற்றும் உற்சவமூர்த்தி அவர்களுக்கு வருடத்தில் அனைத்து நாள்களிலும் புஷ்ப மாலை அலங்காரம் செய்யும் பொருட்டு நித்திய பூ மாலை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ரூ. 25,000 நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தினால், அதில் வரும் வட்டியை கொண்டு உபயதாரர் விரும்பும் வருடத்தில் ஒரு நாளில் சுவாமிக்கு புஷ்ப அலங்காரம் செய்து மறுநாள் நிர்மால்ய பிரசாதமாக குறிப்பிட்ட காலம் வரை வழங்கப்படும்.

அமைவிடம்

சென்னையில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், காஞ்சிபுரத்தில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →