முகப்பு
செய்திகள்

இறந்தவர்களைப் புதைப்பதா? எரிப்பதா? திருமூலர் சொல்வதென்ன?

இறந்தவர்களைப் புதைப்பதா? எரிப்பதா? என பல்வேறு சர்ச்சைகளும், குழப்பங்களும், விமர்சனங்களும் அவ்வப்போது..

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:28 PM
பகிர்:

இறந்தவர்களைப் புதைப்பதா? எரிப்பதா? என பல்வேறு சர்ச்சைகளும், குழப்பங்களும், விமர்சனங்களும் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளது. 

ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான பழக்கவழக்கங்கள், சடங்குகள் உள்ளன. ஐரோப்பியர், அமெரிக்கர், ரஷ்யர், இஸ்லாமியர் எனப் பலரும் புதைப்பதையே பழக்கமாக வைத்துள்ளனர். பண்டைய தமிழ்ச் சமூகத்திலும் கூடப் புதைக்கும் பழக்கம் இருந்துள்ளது. உதாரணம் முதுமக்கள் தாழி. 

மதத் தலைவர்கள் இறக்கும்போது எரிக்காமல் புதைத்து ‘அதிஷ்டாணம்’ கட்டி வழிபடுவது இந்து மதப் பழக்கம்தான். அறிவியல் ரீதியாய் பார்த்தாலும் கூட எரிப்பதைக் காட்டிலும் புதைப்பதுதான் சரியானது எனச் சுற்றுச் சூழலியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். 

சடலத்திற்கு எரியூட்டல் தமிழர் மரபன்று, சைவ நெறி, தமிழ் ஆகம நெறியினை பின்பற்ற வேண்டும் என்பவர்கள் புதைத்தலையே மேற்கொள்ளவேண்டும் எனக் கூறும் திருமூலர், எரியூட்டலை மிகவும் கண்டிக்கின்றார். அவர் தமிழுக்கும் தமிழ் ஆகம நெறிக்கும் பெரும் பக்கபலமாக வாழ்ந்தவர். கண்டிக்கவேண்டியவற்றினை கண்டித்தவர் என்பது திருமந்திரம் படித்தோருக்குத் தெரியும்.

இது பற்றிய அவரின் பாடல்கள் சில.... 

எண்ணிலா ஞானி உடல்எரி தாவிடில்
அண்ணல் தன்கோயில் அழலிட்ட தாங் கொக்கும் 
மண்ணில் மழைவிழா வையகம் பஞ்சமாம் 
எண்ணரு மன்னர் இழப்பார் அரசே 

புண்ணியமாமவர் தம்மை புதைப்பது 
நண்ணி அனல் கோக்கில் நாட்டில் அழிவாகும் 
மண்ணில் அழியில் அலங்கார பங்கமாம் 
மண்ணுல கெல்லாம் மயங்குமனல் மண்டியே 

வள்ளலாரும் எரிப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றார் “பரன் அளிக்கும் தேகம் இது சுடுவது அபராதம்” என்று பாடுகின்றார்.

மனித வரலாற்றில் பிறப்பும் இறப்பும் தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தாலும் சில காலகட்டங்களில் பிறப்பை விட இறப்பு மிகுந்து விடுகின்றது. உதாரணமாகப் போர்கள், விபத்துகள், இயற்கைப் பேரழிவுகள் போன்றவற்றைச் சொல்லலாம். இயற்கையாக நிகழும் இறப்பாக இருந்தாலும் எதிர்பாராத பேரழிவுகளாக இருந்தாலும் உலகம் தோன்றியது முதல் இதுநாள் வரை இறந்த சடலங்களைப் புதைக்க இடமில்லை என்ற இடநெருக்கடி எந்த நாட்டிலும் இருந்ததாகத் தெரியவில்லை. நாம் வசிக்கும் இடத்தின் அருகில் இடமில்லாமல் இருக்கலாம். 

மேலும் உலகில் மனிதன் வாழத் தகுந்த நிலப்பரப்பில் பயன்படுத்தப்படும் நிலப்பகுதி வெகு சொற்பமே எனும்போது மயான இடநெருக்கடி என்பது உலகளாவிய பிரச்னையன்று. உலகில் மனிதன் மட்டும் இறப்பதில்லை. உயிருள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் மரணம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. இத்தகைய தவிர்க்க முடியாத இயற்கை நிகழ்வில் மரித்தவை மண்ணோடு மக்கிப் போவதும் இயற்கையாக நடந்து கொண்டே இருக்கிறது. ஜீவராசிகளில் மனிதன் மட்டுமே இறந்த உடலை முறையாக எரித்தோ அல்லது புதைத்தோ அடக்கம் செய்கிறான். வனங்களிலும் நீர்நிலைகளிலும் வாழும் உயிரினங்கள் இறந்தபின் மண்ணோடு மண்ணாக ஆகின்றன.

சுற்றுச்சூழல், சிக்கனம், நடைமுறைச் சாத்தியம் ஆகியக் காரணிகளைக் கொண்டு ஒப்பீடு செய்யும் போதும் எரிப்பதைவிடப் புதைப்பதே சிறந்ததாகும். 

எப்படியெனில், மனித உடலை எரிக்க நவீன எரிகலன்களும் மின் மயானங்களும் தற்காலத்தில் வந்துவிட்டன. இதற்கு முன் இறந்த உடலை எரிக்கும் போது நரம்புகள் முறுக்கிக் கொண்டு எரிந்து கொண்டிருக்கும் சவம் எழுந்து நிற்கும்போது, தடியால் அடித்து மீண்டும் சிதையில் தள்ளுவர். இருக்கும்வரை மதிப்புடன் இருந்த ஒருவரின் சடலம் இறந்தபின் சிதைக்கப்படுவதைக் கண்ணால் காணும் நெருங்கியவர்களின் மனவேதனை இறந்த துக்கத்தை விட அதிகமானதாகும். 

இது ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் பிணம் எரிப்பதை ஒரு குறிப்பிட்ட சமூகத்தவர் மட்டுமே செய்து வருவதால், அந்தச் சமூகத்தவருடன் (ஒரே மதத்தவராக இருந்தாலும்) பிறர் திருமண உறவு வைத்துக் கொள்வதில்லை. அதேபோல் ஏனைய பொது நிகழ்வுகளிலும் அவர்களை ஒதுக்கி வைத்தே பார்க்கப்படும் அவல நிலைக்கு ஆளாகின்றனர். ஆனால் மனோதிடமும் பயிற்சியும் பெற்றவர்கள் மட்டுமே பிணம் எரிக்க முடியும். சவம் எரிப்போர் தற்போது குறைவு என்பதால், புதிதாய் வருவோர் சடங்குகள் சம்பிரதாயங்களைச் சரிவர கடைப்பிடிப்பதில்லை.

இறந்தவர் குடும்பத்தினரின் நிதிநிலையைக் கணக்கிட்டால் சடலத்தை எரிப்பதற்கான செலவு, புதைப்பதற்கு ஆகும் செலவை விட அதிகமே. சடலம் நன்றாக எரிவதற்கு சுமார் 1600 முதல் 2000 டிகிரி பாரண்ஹீட் வெப்பம் தேவைப்படும். இதற்கான கருவிகளின் விலையும் அதிகம் இதனால் மின்மயானங்கள் கிராமப் பகுதிகளில் இல்லாமல் நகர்ப்புறங்களில்தான் இருக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம் எரியூட்டத் தேவையான மின்சாரம் நகர்ப்புறங்களில் மட்டுமே தடையின்றிக் கிடைக்கும் என்பதும் ஒரு காரணம்.

சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டால் மனித உடல் எரியூட்டப்படுவதால் எழும் புகை மற்றும் மாசுக்களால் சுற்றுப்புறச் சூழல் கெடுகின்றது. புதைப்பதால் நாற்றமெடுத்த சவம் கூட மண்ணுக்குள் அடங்கிவிடும். ஆனால் எரியூட்டப்படுவதால் எழும் நாற்றம் பல மைல் தூரங்கள் வரை காற்றில் பரவி சுத்தமான காற்றை மாசுபடுத்த வாய்ப்புகள் அதிகம்.

ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்பின் Persistent Organic Pollutants (POP) அறிக்கையின்படி பிணம் எரியூட்டப்படுவதால் கொடிய விஷத்தன்மையுள்ள நைட்ரஜன் ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, அமில மழைக்குக் காரணமான கந்தக டையாக்சைடு ஆகியவை வெளியேறுகின்றன. பிண எரிப்பால் வெளியாகும் டையாக்ஸினின் அளவு 0.2%. உலகின் பெரும்பாலான பகுதிகளில் பிணங்களை புதைப்பதே வழக்கத்தில் உள்ளதால் இந்த அளவு ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ளது எனலாம்.

செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை எனும் வள்ளுவர் வாக்கினை எண்ணி தமிழர்கள் மெல்ல எரியூட்டலை கைவிடுவார்களாக.

தற்போது பெரிய கல்லறை கட்டினால் இட நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. புதைப்பதிலும் நவீன வடிவமைப்புடன் கூடிய உலோக பெட்டிகள் உபயோகிக்கின்றனர். நவீன எரியூட்டு மையத்தினை சுற்றி உள்ள நகர்களில் வசிப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஒவ்வொருமுறை சடலம் எரியூட்டும் போதெல்லாம் சுற்றி உள்ளோரின் வசவினை பெற்றுக்கொண்டே சடலம் எரிகிறது அதனால் எரியூட்டு மையம், கல்லறை இன்றி மண்ணறை மட்டும் செய்தல் நன்று எனத் தோன்றுகிறது. காலம், தேவை, நிர்பந்தம் மட்டுமே இதற்குத் தீர்வு சொல்லும். 

- கடம்பூர் விஜயன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.